சிறந்த அரசியல்வாதி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் சிலரின் முகங்கள் மட்டுமே நம் மனதிற்குள் நிழலாடும். அவற்றுள் நிச்சயம் வாஜ்பாய் அவர்களின் முகமும் ஒன்று. உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரில், 1924-ஆம் ஆண்டு பிறந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய்(Atal Bihari Vajpayee). சிறு வயது முதலே படிப்பில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய வாஜ்பாய், சிறந்த கவிதையாளராகவும் இருந்திருக்கிறார். தேச விடுதலையின் மீது பற்றுக் கொண்டு சுதந்திரப் போராட்டங்களில் அவர் கலந்து கொண்ட நாட்கள் தான் பின்னாளில் அவரது அரசியல் வாழ்க்கைக்கான அஸ்திவாரங்களாக மாறின.

எதிர்க்கட்சி வரிசையில்!!
1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பலராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி உறுப்பினராக முதன்முதலில் நாடாளுமன்றத்தில் நுழைந்தவர். மிகச்சிறந்த சொற்பொழிவாளர். வில்லிலே பூட்டும் கணைபோலச் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் வல்லமையுடையவர். அப்போதைய பிரதமர் நேருவே ஒரு முறை விவாதத்தின் போது பேசிய வாஜ்பாயை,” இவர் பிரதமராகத் தகுதியுடையவர்” என்றார்.
தோல்வியைத் தோற்கடிப்போம்!!
30 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, ஆட்சி அமைத்தது அப்போதைய மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு. அதில் வெளியுறவுத்துறை அமைச்சரானார் வாஜ்பாய். ஆனால், சில ஆண்டுகளிலேயே உட்கட்சிப் பூசல்கள் காரணமாக வாஜ்பாய் பதவியிழக்க நேரிட்டது. தோல்விகள் தானே உண்மைத் தலைவரை அடையாளம் காட்டிக்கொடுக்கும்? அப்போதும் அதுவே நடந்தது. 1980-ல் பாரதிய ஜனதாவைத் தோற்றுவித்தார். மேடைகளில் நின்று பேசுவதில் மட்டுமல்லாமல் இறங்கி செயலாற்றுவதிலும் வாஜ்பாய் திறமைமிக்கவர். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை வாஜ்பாயிற்கு பிரதமர் பதவியைப் பரிசளித்தது.
டெல்லிக்குப் போகிறேன், ஆட்சியைக் கவிழ்த்து விட்டுத் திரும்புகிறேன் எனச் சொன்னதைச் செய்தார் ஜெயலலிதா
1996-ல் முதன் முறையாக பிரதமரானார் வாஜ்பாய். வெறும் 13 நாட்களே நீடித்த அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை. பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், 1998 தேர்தலில் மறுபடி பிரதமர் பதவி அவரைத் தேடி வந்தது. இம்முறை அதன் ஆயுட்காலம் 14 மாதங்கள். டெல்லிக்குப்போகிறேன், ஆட்சியைக் கவிழ்த்துவிட்டுத் திரும்புகிறேன் எனச் சொன்னதைச் செய்தார் ஜெயலலிதா. இப்படி ஒரு பலமான கூட்டணியை உருவாக்க முடியாமல், ஒவ்வொரு முறையும் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தேறியது. ஆனால், தோல்வியைத் தோற்கடிப்போம் என முழங்கினார் வாஜ்பாய். கடைசியாக 1999 தேர்தலில் 24 கட்சிகளுடன் கூட்டணி வைத்து பிரதமரானார்!!
சாதனைச் சிகரங்கள்
அசாதாரண அரசியல் சூழலில் பதவியேற்ற வாஜ்பாய் மிகத் திறம்பட ஆட்சி நடத்தினார். கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைப்பதில் தேர்ந்தவரான வாஜ்பாய் இம்முறை 5 ஆண்டுகளும் பதவியில் நீடித்தார். காங்கிரஸ் அல்லாத ஒருவர் தன் பதவிக்காலம் முழுவதும் ஆட்சியில் இருந்தது அதுவே முதல் முறை. பாகிஸ்தானுடன் நட்புணர்வை மேற்கொள்ளும் விதமாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு பேருந்தை இயக்கி, இருநாட்டு மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அந்த ஆச்சர்யம் வெகுநாள் நீடிக்கவில்லை. இந்தியாவைப் போர்மேகங்கள் சூழ்ந்தன. கார்கில் போர் எல்லைகளை அதிரவைத்தது. பாகிஸ்தானுடன் நட்புணர்வை முன்னெடுத்த அதே வாஜ்பாய், போர் தவிர்க்க முடியாதது எனத் தெரிந்த பின்னர் இந்திய ராணுவத்தின் இலக்கு பாகிஸ்தான் எனக் கர்ஜித்தார். அச்சுறுத்தல் தொனியில் அமெரிக்கா பேசியபோதும் அதை அநாயாசமாகக் கடந்தார் வாஜ்பாய். அப்போரில் பெரும் வெற்றியை இந்தியா ருசித்தது.

பொக்ரானில் அணுகுண்டுச் சோதனையை நிகழ்த்தியதால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் பல பொருளாதாரத் தடைகளை இந்தியாவின் மீது விதித்தன. ஆனாலும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு மேற்குலக நாடுகளுடனான நட்பு மிக முக்கியம் எனக் கணித்தார் வாஜ்பாய். அதன் காரணமாகத்தான் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனை (Bill Clinton) இந்தியா வருமாறு அழைத்தது வாஜ்பாய் தலைமையிலான அரசு.

“வளர்ச்சி என்பது தனிமனித வளர்ச்சியிலிருந்தே துவங்குகிறது” என்பதில் தெளிவாய் இருந்த வாஜ்பாய் தங்க நாற்கரச் சாலையை(Golden Quadrilateral) அறிமுகப்படுத்தினார். டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா நகரங்களுக்கு இடையே இச்சாலை போடப்பட்டது. சிறு கிராமங்களும் நகரங்களுடன் இணைந்து வெற்றியின் பாதையில் வீறுநடை போடட்டும் என மக்களிடையே மகிழ்ச்சிக் குரலில் பேசினார் வாஜ்பாய்.
முதலில் கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி இந்தியத் தொழில் துறையில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார் நேரு. அதன் பின்னர் தனியார் மயமாக்களுக்கான பாதையை நரசிம்மராவ் அமைத்துக்கொடுக்க, அதன் வழியே பயணித்துப் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்தினார் வாஜ்பாய். மொத்த உள்நாட்டு உற்பத்தியை 8% ற்கு உயர்த்தினார். விண்வெளித்துறையிலும் இவரது சாதனைக்கான சான்றுகள் உள்ளன. நிலவிற்கு ஆளில்லா விண்கலம் அனுப்பும் திட்டமான சந்திராயன்1, இவரது ஆட்சிக்காலத்திலேயே ஒப்புதல் பெறப்பட்டது.

இந்துத்துவ ஜனநாயகவாதி!!
சங்க பரிவாரம் என் ஆத்மாவில் கலந்துவிட்ட ஒன்று எனப் பொதுமேடையில் பேசிய போதும் வாஜ்பாய் மிதவாதப்பார்வை கொண்டவராகவே நாட்டு மக்களால் அறியப்பட்டிருக்கிறார். ஏனெனில், மற்றைய இந்துத்துவ தலைவர்களிடம் இல்லாத சகிப்புத்தன்மையும், எல்லாவித மக்களிடையேயும் அன்பு செலுத்தும் பண்பும் அவரை அக்கட்சியிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. வாஜ்பாய் எவ்வளவு உண்மையான தலைவர் என்பதை இரண்டு சம்பவங்களின் மூலமாக அறிய முற்படலாம்.
- கடந்த 2017-ஆம் ஆண்டு வாஜ்பாய் இந்திய நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து 60 வருடம் கடந்திருந்தது. ஆளுங்கட்சியாக பா.ஜ.க இருந்த நிலையிலும், அதை கொண்டாட மறந்திருந்தது. ஆனாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காங்கிரசின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தன் எதிரிகளும் தன்னை மதிக்க வாழ்ந்த ஒரே தலைவர் வாஜ்பாய் என்றால் மிகையில்லை.
- மற்றொன்று, அவர் பிரதமராக இருந்த காலத்தில் தான் முதன்முதலில் தமிழக சட்டசபைக்குள் பா.ஜ.க. அடியெடுத்து வைத்தது. அதன் பிறகு நடந்த எந்தத் தேர்தலிலும் அக்கட்சி வெற்றி பெற்றதில்லை. காரணம் எளிமையானது. வாஜ்பாய் போன்ற தலைவர்கள் அக்கட்சியால் முன்னிறுத்தப்படவில்லை.
மாற்றுக்கட்சியினரையும் மதிக்கும் மாண்பு கொண்ட தலைவரான அடல் பிகாரி வாஜ்பாயின் இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது.