பொதுவாக, அரசியலில் சின்னம் என்பது, ஒரு கட்சிக்கு/வேட்பாளருக்கு மக்களைக் கவர்வதில் மற்றும் தங்களுக்கு வாக்குகள் சேகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றது. அதாவது, சின்னம்தான் வேட்பாளர்கள் வாக்காளர்களுடன் இணைவதற்கான முக்கியமான ஒரு பிரச்சாரக் கருவி. ஒரு நிறுவனம் தனது பொருளை விளம்பரம் செய்யும் பொழுது, தனது பிராண்டை மக்கள் மனதில் பதியவைப்பது எப்படி முக்கியமானதோ, அப்படித்தான் அரசியல் கட்சிகளுக்கு சின்னமும்.
நம் தேர்தல் ஆணையம் கட்சிகளை மூன்றாகப் பிரிக்கிறது. 1) அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள்; 2) அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள்; 3) பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள். தேர்தல் ஆணையம் சுமார் 200 பொது சின்னங்களைக் கொண்டுள்ளது. அவை தேர்தலுக்கு முன், அங்கீகரிக்கப்படாத ஆயிரக்கணக்கான மாநிலக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
தேர்தல் ஆணையம், தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) ஆணை 1968 “Election Symbols (Reservation and Allocation) Order 1968”-ன் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கின்றது. அதிலிருந்து சில விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசியல் கட்சிகளுக்கான சின்னங்கள் ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஒதுக்கப்பட்ட சின்னம்(Reserved) மற்றும் பொது சின்னம் (Free) என இரு வகைகளாக, தேர்தல் ஆணையம் சின்னங்களைக் குறிப்பிடுகிறது.
‘ரிஸர்வ்ட் சின்னம்’ என்பவை, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களாகும். ‘பொதுச்சின்னம்’ என்பவை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில், பதிவு செய்யப்படும் புதிய கட்சிகள் அங்கீகரிக்கப்படும். அதேபோல அவர்கள் கோரும் சின்னமும் பொது சின்னம் பட்டியலிலிருந்து வழங்கப்படும்.
தேர்தல் ஆணைய விதிகளின்படி, பதிவு செய்யப்படும் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். அவர்கள் கேட்கும் சின்னமும் பொதுப் பட்டியலிலிருந்து வழங்கப்படும். ஒரு வேட்பாளர் நியமன ஆவணங்களை தாக்கல் செய்யும் பொழுது, பொது சின்னங்களின் பட்டியலிலிருந்து 3 சின்னங்களை தேர்ந்தெடுத்து, தான் விரும்பும் முன்னுரிமை வரிசைப்படி தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். அவற்றில், ஒரு சின்னம் கட்சி/வேட்பாளருக்கு வழங்கப்படும் (வேட்பாளர் கோரிய வரிசைப்படி). முதலில் வந்தவர்களுக்கு முதலில் சின்னம் என்ற அடிப்படையில் இது ஒதுக்கப்படுகிறது.
தேர்தலில் போட்டியிட புதிதாக பதிவு செய்யப்பட்ட புது கட்சிகளுக்கும், பல ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட்டும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத (அங்கீகரிக்கப்படாத) கட்சிகளுக்கும் பொதுப் பட்டியலில் இருந்தே சின்னங்களை தேர்தல் ஆணையம் வழங்குகின்றது.
ஒரு பதிவு செய்யப்பட்ட – அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட பின்னரே, சுயேட்சை வேட்பாளருக்கு மீதமுள்ள சின்னங்களைக்கொண்டு முடிவு செய்யப்படும்.