இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட அன்றே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவித்தார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. அதன்படி வங்கிகளில் இருந்து பணத்தினை எடுத்துச்செல்வோர் அதற்குரிய ஆவணங்களை வைத்திருப்பது அவசியம் சென்னை மாவட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
நடவடிக்கை
தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றும் நோக்கில், அளவுக்கு அதிகமான பணப்பரிமாற்றத்தை கண்டறிய ரிப்பன் மாளிகையில் சிறப்புக்கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. அதில் பேசிய கோ.பிரகாஷ், ” சென்னை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் சேமிப்பு கணக்கில்இருந்து வழக்கத்துக்கு மாறாகவோ, சந்தேகத்துக்கிடமாகவோ இரு மாதங்களில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்வோரின் பெயர் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் வருமானவரித் துறைக்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் தெரிவிக்க வேண்டும்.
முகவர்கள், நிறுவனங்கள் ஆகியவை வங்கிகளில் இருந்து பணம் எடுத்துச் செல்லும்போது அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பவும், வேறு கிளைகளுக்கும் பணத்தை எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்களையும், அடையாள அட்டையும் உடன் வைத்திருக்க வேண்டும்” என்றார்.
1 லட்சம்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது கட்சியின் பெயரில் உள்ள வங்கிக்கணக்கில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணப்பரிமாற்றம் நடைபெற்றால் அந்த வங்கிகள் உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் வங்கிகளில் நடைபெறும் தினசரி பணப்பரிமாற்றம் குறித்த அறிக்கையை மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட அடுத்தநாளே திருவாரூரில் 50 லட்சம் சிக்கியது. தேர்தலுக்கு காலம் குறைவாகவே இருப்பதால் இனிவரும் காலங்களில் இப்படியான செய்திகள் அதிகம் வரும் என்பதில் சந்தேகமில்லை.