தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தினை தங்களது கூட்டணிக்கு அழைத்துவர தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் முயன்று வந்தன. பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரிடையாகவே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவில் சிகிச்சை முடித்து திரும்பிய கேப்டனை அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு, அதிமுகவின் ஒபிஸ் என பல பெரும்புள்ளிகள் சந்தித்தனர்.

உடல்நலம் குறித்த பேச்சுவார்த்தைதான் என்று சொல்லப்பட்டாலும் அது அரசியல் காய் நகர்த்தலின் ஒரு அங்கமாகவே பேசப்பட்டது. இத்தனை தலைவர்கள் சந்தித்து பேச்சவார்த்தை நடத்தும் அளவிற்கு தேமுதிக வலுவான கட்சியா? தமிழகத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வல்லமை அக்கட்சிக்கு இருக்கிறதா? பார்க்கலாம்.
தோற்றம்
விஜயகாந்தின் அரசியல் வரலாறு 1993 ஆம் ஆண்டே துவங்கிவிட்டது. அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் அந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றிபெற்றனர். இது கேப்டனை அரசியல் நோக்கி இழுத்துவந்தது. அதன்பிறகு 2005 ஆம் ஆண்டு தேமுதிக கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.
அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். பாமகவின் கோட்டையாகச் சொல்லப்படும் விருத்தாச்சலத்தில் “முரசு” கொட்டினார் விஜயகாந்த்.

முதல் தேர்தலிலேயே MLA ஆன விஜயகாந்த் அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சித்தலைவர் என்னும் அந்தஸ்தைப் பெற்றார். அந்தத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களைக் கைப்பற்றியது. விஜயகாந்தின் இந்த மாபெரும் வெற்றியினால் திமுக தமிழகத்தின் மூன்றாம் கட்சியாகிப்போனது.
தமிழகத்தில் தேமுதிகவிற்கு 7 – 8% வாக்குவங்கி இருந்தது. கடைசியாக 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர திமுக மற்றும் அதிமுக பாடுபட்டன. கடைசியாக மக்கள் நலக்கூட்டணியில் மாட்டி தனது தோல்வியைத் தானே எழுதிக்கொண்டார் கேப்டன்.
இருப்பினும் தமிழகத்தில் தேமுதிகவின் வீச்சின் மீது இன்னும் பிரதான கட்சிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதன் காரணமாவே அதிமுக படாதபாடு பட்டு தேமுதிகவை கூட்டணிக்கு இணைய வைத்திருக்கிறது.
அதிமுக – தேமுதிக கூட்டணி
ஒருவழியாக அதிமுகவின் தொடர் பேச்சுவார்த்தையின் விளைவாக கூட்டணிக்குள் வந்திருக்கிறது தேமுதிக. பாட்டாளி மக்கள் கட்சியைவிட அதிகமான தொகுதிகள், ராஜ்யசபாவில் ஒரு இடம், உள்ளாட்சித் தேர்தலில் 20% இடங்கள், 21 தொகுதிகளில் வர இருக்கும் இடைத்தேர்தலில் தாங்கள் முன்னர் போட்டியிட்ட இடங்களைத் தங்களுக்கே கொடுக்கவேண்டும் என அடுக்கடுக்காக கோரிக்கைகளை முன்வைத்தது தேமுதிக.

பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் பாமகவுக்கு இணையாக 7 தொகுதிகளை அளிக்க அதிமுக தலைமை ஒப்புக்கொண்டதாகவும், உள்ளாட்சி தேர்தல் ஒதுக்கீடு குறித்து பின்னர் பேசலாம் எனக் கூறப்பட்டதாகவும், ராஜ்ய சபா சீட்டுக்குப் பதில் மத்திய அரசின் வாரியத்தலைவர் பதவிகள் 2 வழங்குவதாகவும் பாஜக தலைமையிடமும் பேசி தேமுதிகவை இணங்க வைத்துள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் பிளான்
விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் கூட்டணி குறித்து சூசகமாக தகவல் தெரிவித்ததும் பாஜக – அதிமுக கூட்டணி சற்றே ஆடிப்போனது. ஸ்டாலினின் வியூகம் விஜயகாந்த்தை கூட்டணிக்கு அழைப்பது மட்டுமல்ல. அதையும் தாண்டி அரசியல் நுணுக்கங்களைத் தொட்டிருந்தார் ஸ்டாலின்.
தேமுதிகவின் மதிப்பை சற்றே உயர்த்திவிட்டார் ஸ்டாலின். அதன் காரணமாகவே ஐந்து இடங்கள் ஒதுக்குவதாக இருந்த அதிமுக பின்னர் ஏழு இடங்களுக்கு ஒத்துக்கொண்டது. அதிமுகவின் இடங்களைக் குறைக்கும் ஸ்டாலினின் யுக்தி இதில் கடைசியில் வெற்றிபெற்றிருக்கிறது.

உடல்நிலைக் காரணங்கள், முக்கியமான முடிவுகளில் ஏற்பட்ட துல்லியமின்மை ஆகியவற்றால் தமிழக அரசியலில் இருந்து வெகுதூரம் தள்ளிப்போயிருக்கிறார் கேப்டன். அதனால் வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் விஜயகாந்த் தனது பழைய ரெக்கார்டுகளை நிரூபிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.