இந்தியாவில் தேர்தல் திருவிழா நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றன. முன்னணிக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சரவெடிக்கு திரி கிள்ளியிருக்கிறார்கள். அடுத்து பரப்புரை. பட்டி தொட்டியெங்கும் குழாய்கள் ஒலிக்க இருக்கின்றன. அதன்பின் வாக்குப்பதிவு. கடைசியாக தேர்தல் முடிவுகள். யார் வென்றார்கள்? எவ்வளவு வாக்குகள் வித்தியாசம்? தோல்வி. டெபாசிட் காலி யார்? என்றெல்லாம் விதவித செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். தோல்வி சரி. புரிகிறது. அதென்ன டெபாசிட் இழப்பு? பார்ப்போம்.

டெபாசிட்
தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர் மாவட்ட தேர்தல் ஆணையத்திடம் அதற்கான விண்ணப்பம் பெற்று தம்முடைய தகவல்களை குறிப்பிட்டு அதனை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வழங்கவேண்டும். இதுவே வேட்புமனு தாக்கல் எனப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 158 (1951) ன் படி தேர்தலில் போட்டியிடும் நபர் குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக (Deposit) கட்டவேண்டும்.
மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ரூபாய் 10,000 டெபாசிட்டாக கட்டவேண்டும். இதுவே நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தால் தொகை 25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
டெபாசிட் கிடைக்குமா?
வேட்பாளர் கட்டிய டெபாசிட் தொகையானது கீழ்க்கண்ட சூழ்நிலையில் வேட்பாளரிடமோ அல்லது அவரைச் சார்ந்தவரிடமோ வழங்கப்படும்.
- தேர்தல் ஆணையம் வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் வேட்புமனு அளித்தவரின் பெயர் வராமல் இருந்தால் தேர்தல் ஆணையம் அவருடைய டெபாசிட் தொகையைத் திரும்ப அளித்துவிடும்.
- தேர்தலுக்கு முன்பே வேட்பாளர் மரணமடைந்தாலும் தொகை திரும்ப வழங்கப்படும்.
- தேர்தல் முடிவில் அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தால் டெபாசிட் வேட்பாளருக்கு திரும்ப கொடுக்கப்படும். அதாவது ஒரு தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 60 என்றால் வேட்பாளர் குறைந்த பட்சம் 10 ற்கு அதிக (11) வாக்குகளைப் பெற்றிருக்கவேண்டும்.
- தேர்தல் ஆனையத்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் பணம் கிடைக்கும்.
- வேட்புமனுவை திரும்பப்பெற கடைசித் தேதிக்குள் வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கிக்கொண்டால் கட்டிய பணம் நிச்சயம் கிடைக்கும்.

டெபாசிட் காலி
பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்கு அதிகமான வாக்குகளைப் பெறாத வேட்பாளரின் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது. இதுவே டெபாசிட் இழப்பு எனப்படுகிறது. சரியாக ஆறில் ஒரு பங்கு வாக்கைப் பெற்றிருக்கிறார் என்றாலும் டெபாசிட் கிடைக்காது.
இப்படி தேர்தல் ஆணையத்திற்கு கிடைக்கும் பணமானது அரசிடம் ஒப்படைக்கப்படும். தேர்தல் செலவினங்களுக்கு இது உதவும்.