வர இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்ற வாரம் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு சுவாரஸ்ய திட்டங்கள் பட்டியலிடப்பட்டிருந்தாலும், ” தேசத்துரோக சட்டப் பிரிவை நீக்குவோம், ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மறு ஆய்வு செய்வோம் என்னும் திட்டங்களுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், இந்தியாவின் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி காங்கிரஸ் கட்சியின் இந்த இரண்டு திட்டமும் நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் செய்யும் துரோகம் என விளாசியுள்ளார். சரி, அப்படியென்ன இருக்கிறது அந்த திட்டத்தில்?
தேசத்துரோக சட்டம்
வன்முறையைத் தூண்டும் விதத்திலோ, பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலோ நடந்துகொள்ளும் நபர்களின் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 124 A ன் கீழ் வழக்குத் தொடுக்கலாம். இது பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இந்தியாவில் இருக்கிறது.
வன்முறை மற்றும் பொது அமைதியைக் காக்க கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தினை அரசியல்வாதிகள் தங்களுடைய சொந்த நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர். தங்களுடைய அரசை எதிர்ப்பவர் அனைவரையும் இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்கத் துடிக்கிறார்கள் பல அரசியல்வாதிகள்.
கடந்த ஆண்டு பீமா கோரேகான் வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 மனித உரிமை ஆர்வலர்கள் மீதும் இதே சட்டம் பாய்ந்தது. குடிமக்கள் சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடிய 2 பத்திரிக்கையாளர்கள் மீது கடந்த ஜனவரியில் இதே சட்டம் பாய்ச்சப்பட்டது.
இதனையடுத்து காங்கிரஸ் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை நீக்குவதாக அறிவித்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துவருகின்றனர்.
என்ன சொல்கிறது பாஜக?
அரசாங்கத்திடம் மீதுள்ள மக்களின் அதிருப்தி போராட்டங்களின் மூலமாக வெளிவருவது உலக வரலாறு அறிந்த உண்மை. இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. தன்னுரிமை பறிக்கப்படும்போதும், அத்தியாவசியங்களுக்கு அவதிப்படும் போதும் மக்கள் அரசாங்கத்திடம் முறையிடுகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் காரணமே அரசுதான் என்ற நிலையில் மக்களிடம் இயல்பாக போராட்டக்குணம் வெடிக்கிறது. இதனை எதிர்ப்பதும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறைதான். தன்னை எதிர்ப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் இந்தச் சட்டத்தை பாஜக ஆதரிக்கிறது.
சிறப்பு ஆயுதப் படைகள்
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதற்காக சிறப்பு ஆயுதப்படைகளை இந்திய அரசு அந்த மாநிலம் முழுவதும் நிறுத்தியிருக்கிறது. இதனை எதிர்த்து அம்மாநில மக்கள் போராடிவருகின்றனர். காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நினைக்கும்போது போது அந்தப்பகுதிக்கு மட்டும் ஏன் கூடுதல் ராணுவப் படை குவிப்பு?

ராணுவ வீரர்களின் கெடுபிடி அதிகமாக இருப்பதால் தங்களுடைய அன்றாட வேலைகள் நிமித்தமாக வெளியே செல்லகூட அச்சமாக இருப்பதாக அங்கிருக்கும் இந்தியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீரை சுட்டிக்காட்டி அடிக்கடி உலக நாடுகளில் மார்தட்டிக்கொள்ளும் இந்திய அரசு, காஷ்மீருக்கு மட்டும் ஏன் இந்த தண்டனையை அளிக்கிறது.
தங்களை சக இந்தியனாக/ மக்களாக மதிக்காமல் ஏன் தீவிரவாதிகளாக அரசாங்கம் பார்க்கவேண்டும்? என்ற காஷ்மீர் மக்களின் கதறலில் நியாயம் நிச்சயமாய் இருக்கிறது.
இதனைத் தடுக்கும் விதமாக காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் சிறப்பு படைகள் அனைத்தும் பின்வாங்கப்பட்டு, இந்திய எல்லையில் நிறுத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.
இதுவும் தப்பு
காங்கிரசின் இந்த திட்டத்திற்கும் பாஜக முகம் சிவக்கிறது. அடிக்கடி வன்முறைகள் நடக்கும் என்று காரணம் கூறி இந்த சட்டத்தை வைத்து காஷ்மீரைக் கட்டுப்படுத்த நினைக்கிறது பாஜக. அதாவது ராணுவத்தின் உதவியோடு மக்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வது. அப்படியென்றால் இதற்குப் பெயர் மக்களாட்சியா? சர்வாதிகார ஆட்சியா?
ராகுல் காந்தியின் இந்த இரண்டு அறிவிப்புகளும் இப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பாஜகவும் மறக்காமல் அதனைத் தாக்கிப் பேசி வருகிறது.