நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 350 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என மோடி மேல் ஆயிரம் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் அவரது கட்சி கடந்த முறை வென்றதை விட அதிக இடங்களில் வென்றிருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அந்தக்கட்சி 336 இடங்களில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் போட்டியிட்ட 17 மாநிலங்களில் ஒரு இடத்தைக்கூட அந்தக்கட்சியால் பெற முடியவில்லை.
காங்கிரசின் படுதோல்வி
ராகுல் காந்தி தலைமையில் மக்களவைத் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி மீண்டும் பரிதாப தோல்வியைப் பெற்றிருக்கிறது. இந்தியா முழுவதும் அந்த கட்சியால் வெறும் 83 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது. காங்கிரஸ் போட்டியிட்ட 17 மாநிலங்களில் ஒரு இடத்தைக்கூட அந்தக்கட்சியால் பெற முடியவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அமேதி தொகுதியில் ஸ்ம்ரிதி ராணி வெற்றிபெற்றிருக்கிறார். இது ராகுல் காந்திக்கு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும்.

தென் மாநிலங்களில் தமிழகம், கேரளா மட்டுமே காங்கிரசிற்கு கைகொடுத்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற காங்கிரஸ் இம்முறை கொஞ்சம் முன்னேறியிருக்கிறது என்பதைத்தவிர அக்கட்சிக்கு வேறு ஆறுதல் இல்லை.
என்ன காரணம்?
காங்கிரஸ் கட்சியின் இந்த படுதோல்விக்கு மிக முக்கிய காரணம் ராகுல் காந்தியால் வலுவான கூட்டணியை அமைக்க முடியாமல் போனதேயாகும். மோடி போன்ற பிக் ஹிட்டரை வீழ்த்த வேண்டுமென்றால் இந்தியாவின் பிரதான கட்சிகள் கைகோர்த்திருக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் அனேக பெரும்பான்மை கட்சிகள் மோடி எதிர்ப்பு முகத்தையே கொண்டிருந்தன.

கூட்டணி சேர்ந்து மோடி என்னும் பொது எதிரியை வீழ்த்த அவர்களால் ஒரு அணியாக திரள முடியாமல் போனதன் விளைவே பாஜகவின் இந்த பிரம்மண்ட வெற்றி. மாயாவதி, மம்தா ஆகியோரின் பிரதமர் கனவும் அவர்களை சோதித்துப்பார்த்திருக்கிறது. இதன் விளைவாகத்தான் மம்தாவின் கோட்டையான மேற்கு வங்கத்தை பாஜக இரும்பு சுத்தி கொண்டு நொறுக்கியிருக்கிறது. அங்கு பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
மாயாவதியின் தலைமையில் அமைந்த மகாகட்பந்தன் கூட்டணி மட்டமான தோல்வியைப் பெற்றிருக்கிறது. அவர்களுடைய சொந்த மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் அந்த கூட்டணி வெறும் 15 இடங்களில் தான் வென்றிருக்கிறது. அங்கே காங்கிரசின் நிலைமை மிக மோசம். ஒரே தொகுதி மற்றுமே காங்கிரசிற்கு கிடைத்திருக்கிறது. அதுவும் சோனியா காந்தியால் வந்தது. இல்லையெனில் அங்கேயும் ஸீரோ தான்.

மோடியை இரண்டு முறை திருடன் என்று கூறி, உச்சநீதிமன்றம் தலையிட்டு ராகுல்காந்தி மன்னிப்பு கேட்டது அவருடைய வெற்றிவாய்ப்பை பாதித்திருப்பதாக வல்லுனர்கள் கணிக்கிறார்கள். அடுத்தது, மாதம் 6000 வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கான கடன் போன்ற திட்டங்களை வெகுஜன மக்களிடம் கொண்டுபோய் அவர்களால் சேர்க்க முடியவில்லை. தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கடும் வீழ்ச்சியினை சந்தித்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறவே போராட வேண்டியிருக்கும்.
இந்தியாவின் அடிமட்ட நிலையில் தனது வலிமையை காங்கிரஸ் அதிகரிக்க பாடுபட்டால் ஒழிய இந்தியாவின் எதிர்காலத்தில் காங்கிரசிற்கு இடமில்லை.