இந்தியாவில் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. ஐந்து வருட ஆட்சியைத் தக்கவைப்பாரா நரேந்திர மோடி?
வரலாற்றுப் புத்தகத்தில் புது அத்தியாயம் எழுதிடுமா காங்கிரஸ்?
என்ற கேள்விகளுக்கான விடையை நாம் தெரிந்துகொள்ள இன்னும் சில மாதங்கள் காத்திருக்கவேண்டும். ஆனால் கட்சியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இரு தரப்பிலும் தீவிர நிலையை எட்டியுள்ளன.

5 மாநிலங்கள்
மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை 5 மாநிலங்கள் தான் இந்தியாவில் மிகமுக்கிய இடங்களைப் பெறுகின்றன. அவை தமிழ்நாடு (39 தொகுதிகள்), உத்திர பிரதேசம் (80 தொகுதிகள்), பீகார் (40 தொகுதிகள்), மேற்கு வங்காளம் (42 தொகுதிகள்), மகாராஷ்டிரா (48 தொகுதிகள்). இந்த ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றும் தேசிய கட்சியே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் மாநிலங்கள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 530. (20 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்தும், 2 ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர்கள் ஜனாதிபதி மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்) இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் மொத்தம் 249 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதன்காரணமாகவே தமிழ்நாட்டின்மீது எப்போதும் தேசிய கட்சிகள் அதிக கவனம் செலுத்துகின்றன.
அதிமுக
மோடி அலை இந்தியாவைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த காலம். கூட்டணிக்காக பல முயற்சிகள் எடுத்தும் பாஜகவின் தந்திரம் தமிழ்நாட்டில் செல்லுபடியாகவில்லை. அதிமுக தனியாகவும் பாஜக தனியாகவும் தேர்தலைச் சந்தித்தன. மொத்தமுள்ள 39தொகுதிகளில் 37 இடங்களில் இமாலய வெற்றிபெற்றது ஜெயலலிதா தலைமயிலான அதிமுக கட்சி. பாஜகவின் சார்பில் பொன்.இராதகிருஷ்ணனும், கூட்டணிக் கட்சியான பா.ம.க – வின் சார்பில் அன்புமணியும் தலா ஒரு இடத்தைப் பிடித்திருந்தனர்.
மக்கள் நலக்கூட்டணி
ஜெயலலிதா இல்லாத அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, அமைச்சர்களின் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள், சி.பி.ஐ சோதனைகள் போன்றவற்றினால் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என அரசியல் வல்லுனர்கள் முன்பே கணித்திருந்தனர். அதே தான் நடந்திருக்கிறது. மற்றொருபுறம் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி குடைக்குள் வந்திருக்கிறது. இம்முறை தமிழகத்தில் பாஜக 5 தொகுதிகளிலும், பா.ம.க 7 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கிறது.
விஜயகாந்தின் தேமுதிகவின் ஆதரவு எந்தக்கட்சிக்கு என்பதில் இன்னும் குழப்பங்கள் நீடிக்கின்றன. இதனிடையே விருப்ப மனுக்கள் அளிக்கவும் தேமுதிக ஏற்பாடு செய்திருப்பது அரசியல் சூழ்நிலையை இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறது. தமிழக மக்கள் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிகவுடன் கூட்டணி அமையாதபட்சத்தில் அந்த வெற்றிடத்தை வாசனைக்கொண்டு நிரப்ப முயல்கிறது பாஜக. அதிகபட்சமாக த.மா.காவிற்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேநேரத்தில் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இடம்பெறுமேயானால் அதிமுகவால் 21-22 தொகுதிகளில் தான் நிற்க முடியும். இது தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி என்னும் அந்தஸ்திற்கு வேட்டுவைக்கும்.
தமிழகத்தில் பாஜக
இந்தியாவில் வேறெந்த மாநிலமும் பாஜகவிற்கு இத்தனை நெருக்கடி கொடுத்ததில்லை. 2014 ல் பழைய வரலாறுகளை எல்லாம் தூக்கியெறிந்து மகத்தான வெற்றியை அந்தக்கட்சி மத்தியில் பெற்றாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் தான் வெற்றிபெற முடிந்தது. இந்த நிலையை மாற்ற அந்தக்கட்சி பல வழிகளில் முயன்றுவருகிறது. அதன் ஒரு பகுதியே இந்த “மெகா கூட்டணி.” தமிழகத்தில் மீண்டும் முளைத்திருக்கும் மக்கள் நலக்கூட்டணி இந்த முறை வெற்றிவாகை சூடுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.