மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் தெலுங்கான ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் கீழே இறக்கியிருக்கிறது. மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரை பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜகவிற்கு இந்தத் தேர்தல் முடிவினால் கடும் நெருக்கடி எழுந்துள்ளது.

சரிந்த கோட்டைகள்
மூன்று முறை சத்தீஸ்கர் மாநிலத்தை ஆண்ட பாஜக இன்று பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் முதல்வராக இருந்த வசுந்த்ரா ராஜே சிந்தியா தனது பதவியை இழக்கிறார். பாஜகவின் மற்றுமொரு கோட்டையாக இருந்த மத்திய பிரதேசமும் பாஜகவின் கைகளை விட்டு பறிபோகும் நிலையில் இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களின் வெற்றி பாராளுமன்றத் தேர்தலுக்கு மிக முக்கியம். ஏனெனில் இந்த மாநிலங்களில் மட்டும் உள்ள பாராளுமன்றத் தொகுதிகள் 65 ஆகும். அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சிக்கு இந்த வெற்றி மாபெரும் உளவியல் உத்வேகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாஜகவின் புகழ்பெற்ற மோடி அலை அதன் பழைய வீச்சை இழந்துவிட்டதா? என்பதே தற்போது பில்லியன் டாலர் கேள்வி.
மிசோரம் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அங்கே தோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதேபோல் பலராலும் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது.
தப்பிக்குமா தாமரை
2014 தேர்தலில் பாஜகவின் பாகுபலியாக செயல்பட்டவர் பிரதமர் மோடி. குஜராத்தின் வளர்ச்சியும், மோடியின் நிர்வாகத்திறனும் இந்திய மக்களிடையே நல்ல செல்வாக்கை அந்த கட்சிக்குப் பெற்றுத்தந்தன. அதன்பின்னால் நடந்த வடகிழக்கு மாநிலத் தேர்தல்களிலும் அந்த கட்சி ஏறுமுகத்தையே சந்தித்தது. ஆனால் நாட்டின் பிரதமரைத் தேர்வு செய்யும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் மாநிலங்களான இவற்றில் ஏற்பட்டுள்ள தோல்வி அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்தத் தோல்வியிலிருந்து பாஜக எப்படி வெளிவரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ராகுல் அலை?
காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது பதவியேற்புக்குப் பின் பெற்ற பெரும் வெற்றி இதுவாகும். அனுபவமின்மை, வாரிசு அரசியல் என எதிர்க்கட்சிகள் அவ்வப்போது எழுப்பும் சீண்டல்களுக்கு ராகுல் காந்தி தற்போது தன் வெற்றியின் மூலம் பதிலளித்துள்ளார். ஆட்சியை இழந்த மிசோரத்தில் செய்ய வேண்டியவை, அடுத்து வரும் தேர்தலில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதன் மூலம் காங்கிரசின் வெற்றி, தோல்வி அமையும். எனவே ராகுல் காந்தியின் தோள்களில் சுமை கூடியுள்ளது. அதை அவர் சமாளிப்பரா? சறுக்குவாரா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும்.
தற்போதைய காங்கிரஸின் வெற்றி பாஜகவின் மீதுள்ள எதிர்ப்பலையால் கிடைத்தது என வைத்துக்கொண்டாலும், அடுத்த ஆண்டுத் தேர்தலுக்கு முன் பாஜக கட்சிக் கொள்கைகளில் பெரியளவில் மாற்றத்தினைக் கொண்டுவரவேண்டும் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.