தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?

0
267

இந்திய தேர்தல் ஆணையத்தின் பணி, வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடிப்பது மட்டும் அல்ல. தேர்தல் விதிமுறைகளை அரசியல் கட்சிகள் முறையாக பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும் அதற்கு உண்டு.

அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். ஒருவேளை விதி மீறல்கள் நடந்தால் அதற்குரிய தண்டனையை கட்சிகள் ஏற்க வேண்டி வரும். மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அப்போதே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. அரசியல் கட்சிகள்  பின்பற்றவேண்டிய நடத்தை விதிமுறைகள் என்ன என்று பார்ப்போம்.

Sunil AroraCredit: Indian Express

விதிமுறைகள்

 • தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் இனி தேர்தல் முடியும் வரை ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களையோ நிதி உதவிகளையோ அறிவிக்கக் கூடாது. அதே போல் எந்த திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டும் விழா அல்லது தொடக்க விழாக்களை நடத்தக்கூடாது.
 • பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ, அரசு பணியாளர்களையோ பணியிட மாற்றம் செய்யக்கூடாது. யாருக்கும் தற்காலிக அல்லது நிரந்தர பணி நியமனமோ, பதவி உயர்வோ அளிக்கக் கூடாது. ஏதாவது அவசியம் என்றால் தேர்தல் ஆணையத்திடம்  ஒப்புதல் பெற்று  பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.
 • அரசு ஊழியர்களையோ, அரசின் வாகனங்களையோ கட்சி பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.

Credit: Indian Express

 • அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதி கிடையாது. வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகவோ இருக்கும் பட்சத்தில் அமைச்சர்கள் செல்லலாம்.
 • பிரச்சாரங்கள் நடத்தும் பொது மைதானங்கள், விமானங்களைத் தரை இறக்கும் ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த கட்சி பேதம் பார்க்காமல் ஆளும்கட்சி அனுமதிக்க வேண்டும்.
 • தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டும் என்றால் முதலில் முறையான அனுமதி பெற வேண்டும்.
 • சாதி, மதம், மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வையோ கலவரத்தையோ தூண்டும் வகையில் எந்த கட்சியும் உரை நிகழ்த்த கூடாது.
 • கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட சமய  வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.
 • மற்ற கட்சிகளின்  கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால ஆட்சி செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சனம் செய்யலாம். ஆனால் தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் செய்து பரப்புரையில் ஈடுபட கூடாது.
 • அதே போல மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் எந்த குழப்பமோ கலவரமோ விளைவிக்கக் கூடாது.
 • அரசியல் கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுவிட்டு தான் தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
 • அரசு திட்டங்களில் குறிப்பிட்ட அரசியல் தலைவரின் பெயர், படம் இடம் பெறக்கூடாது. அல்லது அப்படி இடம்பெறும் பெயர், படத்தை மறைக்க வேண்டும். அனுமதியின்றி பேனர்கள் வைக்கக்கூடாது.

Credit: India Today

 • ஆளுங்கட்சியினர்  கட்சி விளம்பரத்திற்கு எக்காரணம் கொண்டும் அரசுப் பணத்தை செலவு செய்யவே  கூடாது.
 • வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள், கூப்பன்கள் கொடுக்கக் கூடாது. அதே போல வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவதும்  கூடாது.
 • பிரச்சார தடைக் காலத்தில் பிரச்சாரம் செய்வதோ, ஒலிப்பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதோ  கூடாது.

இந்த விதிமுறைகளை அரசியல் கட்சிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீறினால் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும். ஆனாலும் தேர்தல் விதிமீறல் வழக்குகள் என்றே நீதிமன்றத்தில் பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன. தேர்தல் முடிந்தவுடன் அந்த வழக்குகளும் அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன என்பதே நிதர்சனம்.