இந்தியா தேர்தல் திருவிழாவிற்குத் தயாராகிவருகிறது. கட்சிகள் தங்களது வியூகங்களை கச்சிதமாக அமைத்துவருகின்றனர். பிரதான தேசியக் கட்சிகளான காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. வழக்கம்போல் விவசாயிகளுக்கு, வேலைவாய்ப்புக்கு, பாதுகாப்பிற்கு என இரு கட்சிகளுமே பல்வேறு திட்டங்களை பல்வேறு பெயர்களில் செயல்படுத்திவருகிறது. இன்று நேற்று அல்ல. இம்மாதிரியான வழக்கம் சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கின்றன. ஆனால் இந்நேரம் வரையிலும் நம்மால் எந்தத் துறையிலும் தன்னிறைவைப் பெறமுடியவில்லை. இதற்கான் மிக முக்கிய காரணம் ஒன்று தான். அது மையப்படுத்தப்பட்ட அதிகாரம்.
அதிகார குவிப்பு
நேரு கால இந்தியாவில் இதற்கான வாய்ப்பு கிடைக்காமலே போனது. காரணம் சுதந்திர இந்தியா மலர்ந்த நாட்களில் ஏற்பட்ட கலவரங்கள், இனக்குழுக்களின் மோதல்கள், பழங்குடியினரின் தவிப்புகள் என இந்தியா என்னும் தேசம் உருவாகிய பிறகும் அந்த உணர்வு மக்களிடையே சென்று சேரவில்லை. அப்படியான நேரங்களில் வேறுவழியில்லாமல் மத்தியில் அதிகாரக்குவிப்பு நடைபெற்றது. ஆனால் இன்றைய தேதியிலும் அதே மாதிரியான போக்குதான் இருக்கிறது. குறிப்பாக கிழக்கு இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, திரிபுரா, மேகாலயா, அசாம், போன்ற மாநிலங்களில் பூர்வ குடிகளான பழங்குடியினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலைகள் இருக்கின்றன. ஒரு புறம் நக்சலைட்டுகள் பிரச்சனை. சரி, வடக்கே காஷ்மீரில் பேசவே வேண்டாம். அதேநேரத்தில் தென்னிந்தியாவை பார்க்கும்போது நிலைமை மாறியிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய 70 ஆண்டுகளில் தென்னிந்திய மாநிலங்கள் மிகச்சிறந்த வளர்ச்சி விகிதங்களைப் பெற்றுள்ளன. இது கல்வியினால் சாத்தியாமக்கப்பட்ட ஒன்று.
வேற்றுமை
கல்வி என்னும் ஒரு புள்ளியில் தான் தென்னிந்தியாவும், வடமற்றும் கிழக்கு இந்தியாவும் வேறுபடுகின்றன. நீட் போன்ற தேசிய அளவிலான கல்வித்தகுதி என்று வரும்போது ஓரளவு தாக்குபிடிக்கக்கூடிய தமிழக மாணவர்களே சிரமப்படும்போது, வாழ்வில் முதன்முறை கல்வி நிலையங்களுக்குச் செல்லும் தலைமுறையைச் சேர்ந்த மக்களை அதிக அளவில் கொண்ட கிழக்கு மாநிலங்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது. இந்த நிலைமையை மாற்ற கல்வி தேசிய பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

ஏனெனில் கல்வி நடைமுறை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாதபோது தேர்வுமட்டும் ஒரே மாதிரி நடத்துவது பெருங்குழப்பங்களை விளைவிக்கும். அதேபோல் இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வில் விலக்கு, ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு எல்லாம் தேசியப் பட்டியலில் கல்வி இருக்கும்வரை தற்காலிக தீர்வை மட்டுமே தரும். அதனால் தான் காங்கிரஸ் இந்த முறை இந்த மாற்றத்தை கொண்டுவர இருப்பதாக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் மாநில சுயாட்சியின் முதல் விதையை விதைத்திருக்கிறது.
பகிரப்படவேண்டிய உரிமைகள்
இந்தியா போன்ற பல கலாச்சார விழுமியங்களைக் கொண்ட நாட்டில் அந்தந்த இனங்களுக்கான முக்கியத்துவத்தை அளித்தே ஆக வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி மருத்துவ பல்கலைகழகங்கள், அரசு பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.கல்வி பாடத்திட்டத்தினை வரையறை செய்யும் உரிமையும் மாநிலத்திற்கு உண்டு. எனவே அந்தந்த மாநில அரசு கல்வி நிறுவனங்களுக்கு அந்த அரசே மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கவேண்டும்.
தனி நாடு கோரிக்கை, சிறப்பு மாநில அந்தஸ்து என கோஷங்கள் வலுத்துவரும் நிலையில் இம்மாதிரியான அடிப்படை உரிமைகளை மாநிலங்களுக்கு வழங்குவது பதற்றத்தைத் தணிக்கவும் செய்யும். கல்வியில் தொடங்கி இது பல துறைகளுக்கும் பரவும் பட்சத்தில் இந்தியாவின் பன்முகத்தன்மை அதே அழகோடு உலக அரங்கில் முன்னேறும் என்பதில் ஐயமில்லை.