இந்தியா முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த அச்சங்களும், வதந்திகளும் பரவி வருகின்றன. ஒரு கட்சிக்கு வாக்களித்தால் வேறு ஒரு சின்னத்தில் விழுகிறது, மின்விளக்கு வேறு இடத்தில் மாற்றி எரிகிறது என்றால் நாம் என்ன செய்யவேண்டும்? பார்க்கலாம்.

VVPAT
1961 ஆம் ஆண்டு மத்திய சட்ட அமைச்சகத்தினால் தேர்தல் விதிமுறைகளில் மாற்றமானது கொண்டுவரப்பட்டது. புதிய மாற்றத்தின் அடிப்படையில் வாக்காளர்கள் தங்களுடைய ஓட்டு யாருக்கு விழுந்திருக்கிறது என்று சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அதனை அதிகாரிகள் உதவியுடன் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். இந்த முறையானது Voter Verifiable Paper Audit Trail (VVPAT) எனப்படுகிறது.
மாறி விழுந்த ஓட்டு
சமீபத்தில் சஹாரான்பூர் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற தாரா சிங் தனது ஓட்டை யானைச் சின்னத்தில் (பகுஜன் சமாஜ்வாதி கட்சி) அளித்துள்ளார். ஆனால் யானைச்சின்னத்தின் அருகில் உள்ள விளக்கானது எரியாமல் பாஜகவின் தாமரைச்சின்னத்திற்கு எதிராக விளக்கு எரிந்திருக்கிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாரா சிங் தேர்தல் அதிகாரியிடம் தனது குற்றச்சாட்டை தெரிவித்தார்.

தேர்தல் விதி 49MA
ஓட்டுப்போடும் வாக்காளர் பட்டனை அழுத்தும்போது வேறிடத்தில் விளக்கானது எரிந்தால் உடனடியாக அங்குள்ள தேர்தல் அதிகாரியை அழைத்து விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும். மேலும் எழுத்துப்பூர்வமாக தங்களது குற்றச்சாட்டை அளிக்கவேண்டும்.
சோதனை ஓட்டு
பிரச்சினை உள்ள வாக்காளர் அங்குள்ள தேர்தல் அதிகாரி, வாக்குச்சவடிக்கான ஏஜென்ட்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சோதனை ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார். அதிலும் அதே பிரச்சினை இருக்குமாயின் உடனடியாக ரிட்டனிங் ஆபீசருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவை நிறுத்திவைப்பார் தேர்தல் அதிகாரி.
தேர்தல் தொடங்குவதற்கு முன்பே வாக்குச்சாவடியில் வேட்பாளர்கள்/வாக்குச்சாவடி ஏஜென்ட்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டு பதிவு நடைபெற்ற பின்பே தேர்தல் துவங்கும். அதையும் தாண்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுகள் நடப்பதாக அறிந்தால் உடனடியாக அங்குள்ள தேர்தல் அதிகாரியை அணுகலாம். ஏனெனில் ஒவ்வொரு ஓட்டும் எதிர்கால அரசாங்கத்தை வடிவமைக்ககூடியவை. அதனால் மறக்காமல் வாக்களிப்போம். அதே நேரத்தில் இம்மாதிரியான சிக்கல் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உதவ வேண்டும்.