வரதட்சணை எனும் பாவச்செயல் – அன்றும் இன்றும்

0
93

பெண்களுக்கு எதிரான வரதட்சணைக் கொடுமைகள் மற்றும் இது தொடர்பான இறப்புகளைத் தடுக்கும் வகையில் 498A சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது.

இந்தப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக கைது செய்யப்படுவர் என்ற வகையில் இந்தச் சட்டம் அமைந்திருக்கிறது.

எவையெல்லாம் வரதட்சணை ?

பணமாகக் கேட்பது, பெண்ணுக்கு நகை, ஆணுக்கு நகை, இருவருக்கும் உடைகள் கேட்பது, சீர்வரிசையைச் சீதனமாகக் கேட்பது, பெண்ணுக்கு ‘பெட்டி சீர்’ என்று தனியாக, (இதில்… உடை, செருப்பு, ஜமக்காளம், தலையணை, அதன் உறை, அழகு சாதனப் பொருட்கள் உட்பட சோப்பு சீப்பு கண்ணாடி என வாழ்வியல் அவசியப் பொருட்கள் அனைத்தும் இந்தப் பெட்டியில் அடங்கும்). மேலும், சீதனம் என்னும் பெயரில், குடும்ப வாழ்வுக்கு அவசியமான அண்டாகுண்டா தட்டுமுட்டு சாமான்கள், அவசிய ஃபர்னிச்சர் முதல் ஏசி, கார் என்று ஆகி, அதோடு ஒரு வீட்டையும் கேட்டு வாங்குகிறார்கள்.

மேலும், கல்யாண விருந்து போடச் சொல்லுதல், கல்யாண பத்திரிக்கை அடிக்க- போஸ்டர் அடிக்கச் சொல்லுதல், திருமண மண்டபச் செலவு, விருந்தினரின் போக்குவரத்து ஏற்பாட்டுச் செலவு, விருந்தினரைத் தங்க வைக்க செலவு, சில சமயம் மாப்பிள்ளைக்கு இன்னும் சிறப்பான அதிக வருவாயில் வேலை வாய்ப்பு -மாமனார் சிபாரிசில் அல்லது லஞ்சத்தில் வாங்கிக் கொள்ளுதல் என பல செலவினங்களைப் பெண் வீட்டார் தலையில் கட்டுதல் என மேற்படி எல்லாமே மொத்தமாகச் சேர்த்துத் தான் “வரதட்சணை”யாகி விடுகிறது.

விருப்பப் பட்டு செய்தல் என்பது வேறு.கட்டாயப்படுத்தி கஷ்டப் படுத்தி பெண் வீட்டிலிருந்து வாங்கும் ஒவ்வொரு பொருளும் வரதட்சணைக் கணக்கில் தான் சேரும்.

வரதட்சணை தோன்றிய கதை

சங்க கால நூல்களில் வரதட்சணை என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. அகநானூறு, புறநானூறு, கலிப்பா, பரிபாடல் ஆகிய நூல்கள் ஆடவரின் வீரத்தைப் பார்த்தே பெண் மாலையிட்டாள் என்று கூறுகின்றன.

ஒரு பெண், ஆடவரை மணக்க பணம்/நகை/தங்கக் காசுகளை வரதட்சணையாக அளிக்கப்பட்டது என்று எந்த சங்க கால நூலிலும் கூறப்படவில்லை. ஆடவரும் அதை விரும்பவில்லை. கடந்த 19-ஆம் நூற்றாண்டில் தான் இந்த  வரதட்சணைப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இப்போது போல அல்ல. சில வருடங்களுக்கு முன்பு வரை கணவன் முகத்தையே பெண்  திருமணத்தன்று தான் பார்க்க முடியும். “நம் மகள் புது இடத்திற்குச் சென்று எந்தப் பொருள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல், யாரிடம் எதைக் கேட்பது என்று தெரியாமல் சிரமப்பட்டு விடக் கூடாது” என்பதற்காகத் தான் முதன்முதலில் பெண்ணைப் பெற்றவர்கள் அந்தப் பெண்ணிற்குத் தேவையான பொருட்களை கொடுத்து விடத் தொடங்கியிருப்பார்கள்.

பின் அது புகுந்த வீட்டில் தன் மகள் உரிமை கோர அடிப்படைத் தேவையாகக் கொள்ளப்பட்டு அள்ளிக் கொடுக்கும் பழக்கமாக மாறியது. இதுவே சிறிது சிறிதாக மாறி பல பெண்களின் வாழ்வைச் சீரழித்தது. இன்றும் வரதட்சணைக் கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

Credits : Maps of India

வரதட்சணை ஒழிப்புச் சட்டங்கள்

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை:

  • வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டப்படி குற்றமாகும். இக்குற்றத்திற்கு,  சிறைத் தண்டனையுடன் ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணையை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன் ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில் அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • ஒரு பெண்ணின் கணவனோ அல்லது அவள் கணவனின் உறவினரோ அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

வரதட்சணை மரணங்கள்

இத்தனை சட்டங்கள் போட்டாலும், கடந்த 12 ஆண்டுகளில் இந்தக் கொடிய வழக்கம் தொடர்பான மரணங்கள் அதிகரித்துள்ளதாக தேசியக் குற்ற ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 1, 2001 முதல் டிசம்பர் 31, 2012 வரையிலான 12 ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் 91,202 வரதட்சணை தொடர்பான மரணங்கள் நடந்திருக்கின்றன. ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத்திற்கு 12 அல்லது 5 நிமிடதிற்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப் படுகிறாள்.

ஆனால், குறிப்பிடத் தகுந்த அளவில், பொய்யான வரதட்சணைப் புகார்களும் கொடுக்கப் படுகின்றன. எந்த சட்டத்தில் தான் ஓட்டை இல்லை சொல்லுங்கள்?

பெண்களே எதிர்பார்க்கின்றனர்

இதற்கெல்லாம் மேலாகத்  தற்போது பெண்களே தங்கள் தாய் தந்தையரிடம் அழுத்தமாக வரதட்சணைக் கோரிக்கையை வைக்கின்றனர். செல்லும் இடத்தில் தான் கஷ்டப்படக் கூடாது. கணவனைச் சார்ந்து இருக்கக் கூடாது. ஒருவேளை நாளை கணவனைப் பிரிந்து தனியாக வாழ நேர்ந்தாலும் தனக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இருக்க வேண்டும் என இன்றைய பெண்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.

கண்டிப்பாக, எந்தப் பெண்ணும் கணவனை மட்டுமல்ல யாரையும் முழுமையாகச் சார்ந்து இருக்காமல் சுதந்திரமாகத் தான் வாழ வேண்டும். ஆனால், அதற்கான வழிமுறைகளை நாம் தான் தேடிக் கொள்ள வேண்டும். பெற்றோரை வஞ்சித்து நாம் பொருளாதார சுதந்திரத்தைத் தேடக் கூடாது.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, பெற்றோரின் பணத்திலோ அல்லது மாமனாரின் பணத்திலோ சுக வாழ்வு வாழ வேண்டும் என நினைத்தால்,  நாளை நீங்கள் பெருமை கொள்ள என்று உங்கள் வாழ்வில் எதுவும் இருக்காது என்பதே நிதர்சனம்.