[சட்டம் தெளிவோம்]: அத்தியாயம் 11 – பிரிந்து வாழும் காதல் கணவன்/மனைவியை சட்டம் சேர்த்து வைக்குமா?

Date:

நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்த தம்பதிகளுக்கு இணையாகக் காதல் திருமணம் செய்த தம்பதிகளும் இப்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து வருகின்றனர். காதலின் போது காதலரின் நல்ல குணங்களே கண்களில் தெரிய, காதலில் கசிந்துருகிய மனங்கள் திருமணம் என்ற பந்தத்திற்குள் இணைய விரும்புகின்றன. காதலிக்கும் போது ஒரு நாளின் சில மணி நேரங்கள் மட்டுமே சேர்ந்திருக்கும் போது தெரியாத, பல விவ(கா)ரங்கள் திருமணத்திற்குப் பின் வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழ முற்படும் போது தெரிந்து விடுகிறது.

திருமணத்திற்குப் பின் ஏற்படும் ஏமாற்றங்கள் கோபமாக மாறும் போது, அதற்கு சுற்றத்தில் உள்ளவர்கள் மேலும் எரிபொருள் ஊற்றி எரிய வைக்கும் போது, பாதிக்கப்பட்டுள்ளதாக உணருபவரின் பொருளீட்டும் திறன் மிக முக்கிய கிரியா ஊக்கியாக அமைந்து திருமண வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது.

கணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும் போது, அப்பிரிவை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது.

மணவாழ்வுரிமை மீட்புச் சட்டம்

மணவாழ்வுரிமை மீட்புச் சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்தச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், இந்துத் திருமணச் சட்டம், கிறிஸ்தவ திருமணச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.

Couple separation1மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக் கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையை விட்டு பிரிந்து சென்று விட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத் தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும்.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 22, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9, இந்திய கிறிஸ்தவர்களுக்கான திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மணவாழ்வை மீட்பதற்கும், தாம்பத்திய வாழ்வைப் பெறுவதற்குமான உரிமைகளை வலியுறுத்துகின்றன.

இந்தச் சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழ விரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவைப் பதிவு செய்ய வேண்டும்.

அந்த மனுவுடன் திருமணம் நடந்ததற்கான சான்றுகள், சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள் (தெரிந்திருந்தால்), மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றைக் குறித்துத் தெளிவான வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

எதிர்தரப்பினருக்கு அழைப்பாணை

இவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக்கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக் கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்தக் காரணங்கள் ஏற்கத் தகுந்ததாக இருந்தால், உரிய முறையில் மணவிலக்குப் பெறுவதற்கான ஆலோசனையுடன் அந்த வழக்கு தீர்க்கப்படும். அதற்கான காரணங்களை உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும்.

imagesபிரிந்து வாழ்வதற்கான காரணங்களை எதிர் தரப்பினர் உரிய முறையில் நிரூபிக்காவிட்டால், அவர் கூறும் காரணங்கள் ஏற்கத் தகுந்தது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு, மனுதாரருடன் இணைந்து வாழுமாறு எதிர்தரப்பினருக்கு உத்தரவு வழங்கி வழக்கு தீர்க்கப்படும்.

சமரசத்திற்கு வாய்ப்பு

சின்னஞ்சிறு அற்பக் காரணங்களுக்காக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்குத் தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து கொள்ளவும் இந்த வழக்கின் போது தேவையான வாய்ப்புகள் உள்ளன.

சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!