சட்டம் தெளிவோம் ! – அத்தியாயம் 8 – சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்கள்

1
356
Sattam_Thelivom_Series

இந்திய தண்டனைச் சட்டத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் படி, குற்றங்கள் இரண்டு வகைப்படும். அவை.

  • சிவில் குற்றங்கள்
  • கிரிமினல் குற்றங்கள்

இரண்டு வகைக் குற்றங்களுக்கும் என்ன வேறுபாடு தெரியுமா?

பெரிதாக எல்லாம் ஒன்றும் இல்லை. இப்போது நீங்கள் ஒருவருக்குக் கடன் கொடுத்திருக்கிறீர்கள். அவர் வெகு நாட்களாகியும் வாங்கிய தொகையைத் திருப்பிக் கொடுக்கவில்லை. அவரிடம் பணத்தை வசூல் செய்து தருமாறு நீங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்தால் அது சிவில் வழக்கு.

அதுவே, நீ எப்படி என் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருக்கலாம் என்று கோவப்பட்டு, வழக்குப் போடாமல் அவரையே போட்டுத் தள்ளி விட்டால் அது கிரிமினல் வழக்கு.

கடன் பிரச்சனை. வயல் வரப்புப் பஞ்சாயத்துகள், சொத்துப் பங்கீடுகள் போன்ற, நீதிமன்றம் நடுவராக இருந்து நியாயத்தைச் சொல்ல வேண்டிய வழக்குகள் எல்லாம் சிவில் வழக்குகள் ஆகும். இவை சார்ந்த குற்றங்களும் சிவில் குற்றங்கள்.

கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் போன்ற, நீதிமன்றங்களால் குற்றம் சாட்டப் பட்டவர் தண்டனை பெற வேண்டிய வழக்குகள் எல்லாம் கிரிமினல் வழக்குகள். அத்தகைய குற்றங்கள் கிரிமினல் குற்றங்கள்.

தண்டனை அளிக்கும் முறை

நீதிமன்றத்தால் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னரே அவரைக் குற்றவாளி எனக் கூற வேண்டும். அதுவரை அவரைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறுவதே நீதிமன்றத்தின் மரபு.

சட்டத்தின் பார்வையில், குற்றவியல் வழக்கில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னால், அக்குற்றத்திற்கு உண்டான சாட்சி மற்றும் குற்றம் செய்தவரின் நோக்கம் மற்றும் யாரால் அல்லது யாருடைய தூண்டுதலின் பேரால் குற்றம் நிகழ்த்தப் பட்டது, எந்தச் சூழ்நிலையில் அக்குற்றச் செயல் நடைபெற்றது என்பதனையும், அக்குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் அக்குற்றச் செயலினால் ஏற்பட்ட விளைவுகள் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

மேலும், அதனால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை மற்றும் குற்றம் செய்தவரின் வயது, பாலினம் மற்றும் இது போன்ற குற்றச் செயல்கள் தொடராமல் இருக்க வேண்டியதன் அவசியம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கப்படும்.

வழக்குப் பதிவு செய்வதற்கான கால அவகாசம்

கிரிமினல் வழக்குகளைப் பொறுத்த வரை குற்றச் செயல் நடைபெற்ற உடன் வழக்குப்  பதிவு செய்தல் அவசியம். சிவில் வழக்குகளைப் பொறுத்த வரை கால நிர்ணயம் ஏதும் கிடையாது. ஆனால், சில சமயங்களில் கால தாமதத்திற்கு நீதிமன்றத்தில் விளக்கம் தெரிவிக்க நேரிடும்.

அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பின்னரே வழக்குப் பதிவு செய்ய முடியும். எந்த வகையான வழக்குகளாக இருந்தாலும், கால தாமதம் செய்தால் சில சமயங்களில் வழக்குப் பதிவு செய்ய முடியாமலோ அல்லது எதிராளிக்குச் சாதகமாக மாறவோ வாய்ப்புள்ளது. எனவே, கால தாமதத்தைத் தவிர்த்தல் நல்லது.