ஒரு சிறந்த அரசானது எந்த ஒளிவு மறைவுமில்லாமல், வெளிப்படைத் தன்மையோடு இருத்தல் வேண்டும். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டதே தகவல் அறியும் உரிமைச் சட்டம். அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டது தான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005.
இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசு. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது.
இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால், அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும்.
- Credit : The Better India
- அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்
- அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
- அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடிமக்களுக்கு, அத்தகைய தகவல்களை அளிக்க வகை செய்வதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.
- அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.
போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.
தகவல் என்றால் என்ன?
தகவல் என்பது எதைக் குறிப்பிடுகிறது என்கிற எண்ணம் நமக்கு வரலாம். பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே “தகவல்” என்ற பிரிவின் கீழ் வைக்கப்படுகின்றன. இதன்படி கீழ்காணும் அனைத்தும் தகவல்கள்தான்.
1. அரசிடமுள்ள ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தல்
2. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை நகல் எடுத்தல்
3. அரசின் பணிகளைப் பார்வையிடுதல்
4. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிடுதல்
5. சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்
6. தேவையான தகவலைத் தேவைப்படும் வடிவத்தில் பெறுதல்

அரசிடமிருந்து தகவல்களைப் பெறுவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது? என்கிற கேள்வி நமக்குத் தோன்றலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளும், அதன் வெளிப்படையான தன்மையும் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் ஓரளவு லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவை குறைய வாய்ப்பிருக்கிறது.
அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும், திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேர்கின்றனவா என்பதையும் நாம் இந்தத் தகவல் உரிமைச் சட்டத்தின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறைகள் இருப்பின் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.
அது சரி. எப்படி தகவல் அறியும் உரிமை மூலம் தகவல்களைப் பெறுவது என்று கேட்கிறீர்களா ? அரசிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கான வழிமுறைகளை இந்தப் பகுதியின் தொடர்ச்சியாக அடுத்த வாரம் பார்க்கலாம்.