இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையான DRDO (The Defence Research and Development Organisation) நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்த இருக்கிறது. இதற்காக 2.75 லட்சம் கோடி செலவில் ஆயுதங்கள் வாங்கப்பட இருக்கின்றன. இந்தத் தொகையானது சில சேவைகள் மற்றும் பிற துறைகளில் உள்ள பிரிவுகளை இந்திய ராணுவத்தோடு இணைக்கவும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

50,000 ஏவுகணைகள்
இந்திய ராணுவத்தின் சிறப்புப் பிரிவுகளுக்கு 50,000 டாங்கர்களில் தாங்கிச் செலுத்தக்கூடிய ஏவுகணைகள் வழங்கப்பட உள்ளன. ரேடார் மற்றும் வெடிமருந்துத் தொழில்நுட்பத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பெற்றிருக்கிறது. மேலும் எலெக்ட்ரானிக் மற்றும் வான்வெளி பாதுகாப்புப் பிரிவில் இந்தியாவின் சாதனைகள் அளப்பரியது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் DRDO வின் தலைவர் சதீஷ் ரெட்டி,” ரேடார் மற்றும் ஏவுகணைத் தயாரிப்பில் இந்திய ராணுவத்தின் மீது அரசிற்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்புத்துறையை வலுப்படுத்த சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது. அதன்பகுதியாகவே தற்போது 2.75 லட்சம் கோடி அளவிலான திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது” என்றார்.

என்னென்ன ஆயுதங்கள்?
DRDO தலைவர் வாங்கவேண்டிய ஆயுதங்களின் பட்டியலை அளித்துள்ளார். அதில் டாங்கர்களில் உபயோகிக்கும் துப்பாக்கிகள், டாங்கர்கள் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஏவுகணைகள், சோனார் மற்றும் அதிக எடையுள்ள வெடிபொருட்கள் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் இந்திய கப்பல் படைக்கு அதிக எடையுள்ள வெடிபொருட்களால் வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கி ஏவுகணைகள் வழங்கப்பட இருக்கின்றன. இவை தவிர்த்து ஆகாஷ் தற்காப்பு ஏவுகணை வின்வெளித்துறைக்கும், கப்பற்படைக்கும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய கடற்பகுதியில் தனது ஆதிக்கத்தை சீனா அதிகரித்துவரும் நிலையில் இந்திய அரசின் இப்புதிய அதிரடி அறிவிப்பு மிகுந்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பாதுகாப்புத் துறையின் பலத்தை தொடர்ந்து அதிகரித்துவரும் இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை உலகமே உற்றுக் கவனித்து வருகிறது.