நடப்பு குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு குடியுரிமை மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டுவர இருக்கிறது. இதனால் யாருக்கு லாபம்? யார்யார் பயன்பெறுவார்கள்? ஏன் மக்கள் இதனை எதிர்க்கிறார்கள்? என்பதைக் கீழே காணலாம்.

குடியுரிமை மசோதா
2016 ஜூலையில் இம்மசோதா நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு இப்போது மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ள இம்மசோதாவானது இந்திய குடியுரிமை சட்டம் 1955 ல் சில மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளது. அதன்படி எந்தவித தகுதியான ஆவணமுமின்றி இந்தியாவில் குடியேறிய பங்களாதேஷ் ,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேரந்த ஹிந்து , சீக்கியம், பவுத்தம், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்துவ இன மக்கள் இனி சட்டவிரோதமாக குடியேறிவர்களாக கருதப்படமாட்டார்கள். மேலும் இவர்கள் இந்தியக் குடியுரிமை பெறவும் இம்மசோதா வழிசெய்கிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இச்சமுதாய மக்கள், 1955 சட்டத்தின் படி இந்தியக் குடியுரிமை பெற இயலாது. ஏனெனில் 1955 சட்டத்தின் படி தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் மட்டுமே அவர்களுக்கு குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும்.
இந்த சட்டத்திருத்தம் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இம்மக்கள் மேற்கூறிய நாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்திருப்பின் அவர்கள் இந்திய குடியுரிமையை அனுபவிக்க முடியும்.

எதிர்ப்பு
இத்திருத்தப்பட்ட மசோதாவானது அரசியலமைப்பின் விதி 14 (Right To Equality) ஐ மீறுவதாக உள்ளது. விதி 14 ன் படி இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் மற்றும் நீதியின் முன் எந்தவித இன, மொழி, சமயக் காரணங்களால் வேறுபடுத்த முடியாது. குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் இவ்விதி மீறப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஏற்கனவே அஸ்ஸாம் மக்கள் “ NRC “ மூலம் “இந்திய குடிமக்கள்” என நிருபிக்கப் போராடிவரும் நிலையில் இம்மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.