18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் – அடுத்தது என்ன ?

0
69

டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணா, சட்டப்பேரவை தலைவர் தனபாலின் உத்தரவு செல்லும் என்று இன்று  தீர்ப்பளித்துள்ளார்.

குறிப்பிட்ட 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த இருந்த தடையும் இந்தத் தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் முகாந்திரம்

கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகிய இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய சூழலில், மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணாவுக்கு இந்த வழக்கு அனுப்பப்பட்டது.

அந்தத் தீர்ப்பில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவு செல்லுமென அறிவித்தார். அதே அமர்வின் சக நீதிபதியாக இருந்த சுந்தர், சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என அறிவித்தார்.

இந்நிலையில், முன்பு இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், தன் முன்பு வைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தாமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் நீதிபதி சத்யநாராயணா கூறியுள்ளார்.

“சட்டமன்ற சபாநாயகருக்கான அதிகாரங்கள் என்ன என்பதை வரையறை செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று நீதிபதி சத்யநாராயணா குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி என்ன?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 – ஆம் தேதி, அப்போதைய பொறுப்பு ஆளுநர் சி. வித்யாசாகர் ராவைச் சந்தித்த டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சருக்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த 19 பேரிடமும் விளக்கம் கேட்டு அ.தி.மு.கவின் கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். இவர்களது செயல், தானாக முன்வந்து அ.தி.மு.கவின் உறுப்பினர் தகுதியிலிருந்து வெளியேறுவதற்குச் சமம் என்பதால் இந்த 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேந்திரன் சபாநாயகரிடம் ஆகஸ்ட் 24 – ஆம் தேதியன்று கோரினார்.

இவர்களில் எஸ்.டி.கே. ஜக்கையன் பிறகு ஆளும் பிரிவுக்கு ஆதரவாளராகி விட்டார். செப்டம்பர் 17 – ஆம் தேதியன்று சபாநாயகரைச் சந்தித்த அவர், டிடிவி தினகரன் தரப்பினர் தன்னை வற்புறுத்தி ஆளுனரைச்  சந்திக்க அழைத்துச் சென்று விட்டதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, மீதமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் செப்டம்பர் 18 – ஆம் தேதியன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 1986 – ஆம் ஆண்டு விதிகளின் படியும் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் படியும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி எம். துரைசாமி, மறு உத்தரவு வரும் வரை இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என செப்டம்பர் 20 – ஆம் தேதியன்று இடைக்காலத் தடைவிதித்தார்.

அறிந்து தெளிக !
ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே விதி.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்

  •  தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி),
  • ஆர். முருகன் (அரூர்),
  • எஸ். மாரியப்பன் கென்னடி (மானாமதுரை),
  • கே. கதிர்காமு (பெரியகுளம்),
  • சி. ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்),
  • பி. பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி),
  • வி. செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி),
  • எஸ். முத்தைய்யா(பரமக்குடி),
  • பி. வெற்றிவேல் (பெரம்பூர்),
  • என்.ஜி. பார்த்திபன் (சோளிங்கர்),
  • எம். கோதண்டபாணி (திருப்போரூர்),
  • டி.ஏ. ஏழுமலை (பூந்தமல்லி),
  • எம். ரங்கசாமி (தஞ்சாவூர்),
  • ஆர். தங்கதுரை (நிலக்கோட்டை),
  • ஆர். பாலசுப்பிரமணி (ஆம்பூர்),
  • எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன் (சாத்தூர்),
  • ஆர். சுந்தர்ராஜ் (ஓட்டப்பிரடாரம்),
  • உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்)

தற்போதைய அவை பலம் என்ன?

234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப் பேரவையில், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் போஸ் ஆகியோர் மரணமடைந்ததால் தற்போது மொத்தம் 232 இடங்கள் உள்ளன.

இதில் தி.மு.க. 88 உறுப்பினர்களையும், காங்கிரஸ் 8 உறுப்பினர்களையும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1 உறுப்பினரையும் பெற்றுள்ளன.

டி.டி.வி தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆளும் எடப்பாடி கே. பழனிசாமி பிரிவுக்கு 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது.

இடைத்தேர்தல் நடந்தால் ?

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மரணம் காரணமாக காலியான இரண்டு தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெறுகிறதோ அது ஆட்சியமைக்கும். ஆனால், அடுத்த வருடம் நடக்கும் பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்தே சட்டமன்றத் தேர்தலை நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.