தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுத்தல் கூடாது என உயர்நீதி மன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தண்ணீர் லாரி மற்றும் குடிநீர் பாட்டில்கள் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்தன. இதனால் சென்னையின் பல இடங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். தண்ணீரில்லாத நகரங்களின் பட்டியலில் சென்னை இடம்பெற இருக்கிறது. இதுகுறித்து விரிவாக கீழே காணலாம்.

2020 ல் சென்னை எப்படி இருக்கும் ?
சென்னையில் உள்ள நிலத்தடி நீர் முழுவதும் வற்றி உப்புநீராக மாறும் என நிதி ஆயோக் ஏற்கனவே எச்சரித்துள்ளது. சென்னையின் பல இடங்களிலும் நிலத்தடி நீர் மோசமாக வற்றிவிட்டது. எனவே அண்டை மாவட்டங்களான திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து தனியார் நிறுவனங்களால் தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னைப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே நீதிமன்றம் வணிக ரீதியில் நிலத்தடி நீரினைப் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சுமார் 1500 தண்ணீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
என்ன செய்யலாம் ??
நிலத்தடி நீரினைப் பொறுத்தவரை மழைப்பொழிவு மிக முக்கிய காரணியாகும். அடுத்து தண்ணீர் உட்புகும் நிலத்தினைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக ஆற்றுப்பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் எளிதாக நிலத்திற்குள் உட்புகுந்து நிலத்தடி நீருடன் கலந்துவிடும். தண்ணீர் அதிகப்பரப்பில் பரவி நிற்கும்போது ஊடுருவல் எளிதாக நடக்கும். ஆனால் சென்னை போன்ற இடங்களில் அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

நீர் மறுசுழற்சியை நோக்கி நகரவேண்டிய கட்டாயத்தில் சென்னை உள்ளது. ஏனெனில் தனிநபர் அதிகளவில் நீர் வீணாக்கும் நகரங்களில் சென்னை முன்னணியில் உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீரினைப் பயன்படுத்துவது நகரத்தின் ஒட்டுமொத்த நீர் தேவையினை 30% வரை குறைக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆனாலும் நிலத்தடி நீரினைப் பெருக்குவதே நிரந்தர தீர்வாகும். சென்னையைச் சுற்றியுள்ள குளம் மற்றும் ஏரிகளைத் தூர்வாருவதன் மூலம் நிலத்தடி நீரினைச் செறிவூட்ட முடியும். அதனைத் தவிர நமக்கு வேறு வழியும் இல்லை. இதை அப்படியே விட்டால் இன்னும் பத்தாண்டுகளில் நாம் மிகப்பெரிய புரட்சி ஒன்றினை சந்திக்க வேண்டியிருக்கும். காரணம் தண்ணீராய் இருக்கும்.