இன்று சென்னை தனது 379-வது பிறந்த தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்டது இன்றைய சென்னை.
மதராஸ் முதல் சென்னை வரை
நூற்றாண்டுகளைக் கடந்த வானுயர்ந்த கட்டிடங்கள், தொன்மையையும், வரலாற்றுச் சிறப்பையும், கட்டிடக்கலையில் நுணுக்கங்களையும் பறைசாற்றும் வகையில் அமைந்த பல கட்டிடங்கள், பெரிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் என காலத்திற்கேற்றாற் போல தன்னை மெருகேற்றிக் கொண்ட சென்னை தான் தென்னிந்தியாவின் நுழைவு வாயில் எனப்படுகிறது.

இந்த நகரத்தின் உருவாக்கம் நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டது. கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்தில் நுழைந்தவுடன், ‘பிரான்சிஸ் டே’ என்ற ஆங்கிலேய முகவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகப் பணிகளுக்காக, தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலகம் இயங்கிக் கொண்டிருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள பகுதியை, 22-08-1639-ஆம் நாளில் விலைக்கு வாங்கினார். அந்த அதிகாரப்பூர்வ நாளே சென்னை தினம் உருவான நாளாகக் கருதப்படுகிறது.
அந்த இடத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை எழுப்பி, குடியிருப்புகளை அமைத்துத் தங்களின் பணிகளை மேற்கொண்டனர். பின்னாளில் பலர் அதைச் சுற்றி குடியேறத் துவங்கினர். அப்போது அந்த பகுதியை மதராசப்பட்டணம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், திருவான்மியூர், திருவொற்றியூர் என பல சிறிய கிராமங்களை உள்ளடக்கி நகரமாக உருவானது மதராசப்பட்டினம். வடசென்னைப் பகுதிகளை மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னைப் பகுதிகளை சென்னைப்பட்டினம் என்றும் அழைத்தனர். ஆங்கிலேயர் இரண்டையும் ஒன்றிணைத்து மதராஸ் என்று அழைத்தனர். பின்பு அது மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக இருக்கிறது.
கதைகளின் நகரம்
“என்ன பெரிய சென்னை? புழுதியும், குப்பையுமா…எங்கே திரும்பினாலும் நெருக்கடி.” என்று சலித்துக் கொள்பவர்கள் பெரும்பாலும் சென்னைக்கு வந்திருக்காதவர்களாகவோ, அல்லது ஓரிரு நாள் வந்து சென்றவர்களாகவோ தான் இருக்க முடியும். சென்னை, யாராவது சில நாட்கள் வந்து தங்கி விட்டாலே, அவர்களை தன்னை வெறுக்கவே முடியாதவர்களாக மாற்றி விடும் மாபெரும் கவர்ச்சி பொருந்திய நகரம்.
இங்கு பல கலைஞர்களும், அம்மாக்களும் அனுதினம் வந்து இறங்குவார்கள். வருங்கால ரஜினிகாந்தையோ அல்லது சிம்ரனையோ நீங்கள் சாதாரணமாக சாலையில் கடப்பீர்கள். வருங்கால வைரமுத்துவும் வாலியும் உங்கள் தொடர்வண்டித் தோழர்களாக இருப்பார்கள். புத்தகங்களை மட்டுமல்ல பல எழுத்தாளர்களையும் கண்டு கொள்வீர்கள். இங்கு அனுதினம் நாம் கடக்கும் கதைகள் ஏராளம். வெற்றிகளின் கதை, தோல்விகளின் கதை, போராட்டங்களின் கதை, ஏமாற்றங்களின் கதை. சென்னை நமக்குக் கதைகளின் வாயிலாக, வாழும் கலை கற்பிக்கும் ஆசான்.
சென்னை என்றால் உழைப்பு
சென்னை அனைவருக்குமான நகரம். இங்கு தான் நாம் உழைப்பைக் கற்றுக் கொள்ள முடியும். சிறுவனிலிருந்து வயதானவர்கள் வரையிலும் எங்கு திரும்பினாலும் உழைத்துக் கொண்டிருப்பார்கள். வந்தவர்களை வாழ வைக்கும் சென்னை அல்ல இது. உழைப்பவர்களை ஏமாற்றாத சென்னை

அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப் படுத்தும் வித்தையை சென்னை கற்று வைத்திருக்கிறது. பையில் பத்து ரூபாய் இருந்தாலும் இங்கு பசியாற முடியும். எப்படி செலவு செய்வது என்றே தெரியாத செல்வந்தர்களுக்கும் இங்கு செலவு செய்ய வழி இருக்கும். வாழ்க்கைத் தரத்தில் இருவேறு துருவங்களில் இருப்பவர்களுக்கும், ஒரே மாதிரியான கொண்டாட்ட வாழ்வினைப் பரிசளிக்க சென்னையால் மட்டும் தான் முடியும்.
“காலத்திற்கேற்றார் போல மாறிக் கொண்டே இரு. ஆனால், உன் பழமை வாசத்தையும் விட்டுவிடாதே !” என்பது, சென்னை நமக்குக் கற்றுத் தரும் பாடம்.
நவநாகரீக விரும்பிகள் தான் சென்னையை விரும்புவார்கள் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால், பழமை விரும்பிகளால் தான் சென்னை பெரிதும் நேசிக்கப்படுகிறது. தன் ஒவ்வொரு இண்டு இடுக்குகளிலும் வரலாறுகளையும், பழமையையும் சேமித்து வைத்துள்ளது சென்னை. இங்கு ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு வாசம் உண்டு. வரலாறு உண்டு. “காலத்திற்கேற்றார் போல மாறிக் கொண்டே இரு. ஆனால், உன் பழமை வாசத்தையும் விட்டுவிடாதே !” என்பது, சென்னை நமக்குக் கற்றுத் தரும் பாடம்.
சென்னை அனைவருக்குமானது
இந்தப் பெருநகரம் யாருக்கும் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களை கட்டும் அதே அளவுக்கு, பகுத்தறிவுப் பரப்புரைகள் செய்யலாம். கர்நாடக கான சாபாவிற்கும் போகலாம். தாரை தப்பட்டை என்றும் கொண்டாடலாம். இருப்பவர்களுக்கு வணிக வளாகங்கள், இல்லாதவர்களுக்கு ரங்கநாதன் வீதியும், வண்ணாரப்பேட்டையும். 30 ரூபாய்க்கு அசைவச் சாப்பாடும் கிடைக்கும். 300 ரூபாய்க்குத் தேநீரும் கிடைக்கும். சென்னை யாரையும் ஏமாற்றுவதில்லை. யார் சுதந்திரத்திலும் தலையிடுவதில்லை. யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை.
சென்னை என்பது வார்த்தை அல்ல இங்கு வாழ்பவர்களின் உணர்வு.