28.5 C
Chennai
Sunday, April 14, 2024

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிப்பு

Date:

இந்தியாவில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு மத்திய அரசின் சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 80 வயதுக்கு மேலான முதியோருக்கு மாதம் 500 ரூபாயும், மற்ற முதியோருக்கு 200 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த தொகை கடந்த 2007 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பாண்டில் இதற்கென ரூ.9,975 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள்.

arun-jaitley
Credit: NDTV

பட்ஜெட்

இந்த உதவித்தொகை உயர்வு குறித்த அறிக்கையை தேசிய ஊரக மேம்பாட்டுத்துறை மத்திய நிதியமைச்சகத்திடம் அளித்துள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்படுமேயானால் அரசிற்கு கூடுதலாக 30,000 கோடி செலவாகும். இத்திட்டம் குறித்து சென்ற ஆண்டு துவக்கத்திலேயே ஆலோசனைகள் மற்றும் கள ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற ஐந்துமாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக இல்லை என்பதனால் இத்திட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற அக்கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனெனில் கிராமப்புற மக்களிடையே குறிப்பாக பின்தங்கியவர்களைக் கவர இம்மாதிரியான திட்டங்கள் அவசியமாகிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர இருப்பதால் இத்திட்டம் கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

poverty line
Credit: poverty line

பயனாளிகள் யார்?

இந்தியாவிலிருக்கும் 3 கோடி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இதனால் பயன்பெறுவர். இதில் 80 லட்சம் விதவைகள், 10 லட்சம் மாற்றுத்திறனாளிகள், 2.20 கோடி ஏழை முதியோர்கள் அடக்கம். தற்போது ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்மூலம் இந்தத் தொகையானது ரூபாய் 800 ஆக உயர்த்தப்பட உள்ளது.

80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.500 வழங்கப்பட்டுவரும் நிலையில் இது ரூ.1200 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதனால் ஆதரவற்ற மக்களின் வாழ்வில் ஒளியினை வழங்கிட முடியும். மாநில அரசுகளும் குறிப்பிடத்தக்க நிதியை இத்திட்டத்திற்கென மத்திய அரசிற்கு வழங்குகின்றன.

இந்தியாவின் மூத்தகுடிகள்

2011 கணக்கெடுப்பின்படி, 60 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கையானது 10.39 கோடி ஆகும். இதில் 60% முதியவர்கள் தங்கள் குடும்பங்களினால் புறக்கணிப்பிற்கு உள்ளாகின்றனர். மேலும் வயதானவர்களில் 66% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பதாக அகில இந்திய மூத்த குடிமக்கள் நல இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி 1.5 கோடி முதியவர்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னந்தனியாக வசித்து வருகின்றனர். வயது மூப்பின் காரணமாக பணியில்லாமல், கிடைக்கும் சொற்ப உதவித்தொகையை வைத்தே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

old poor people
Credit: Momocha Lousamba – WordPress.com

மருத்துவத் துறைக்கென இந்திய அரசு வருடந்தோறும் 10,000 கோடியை ஒதுக்குகிறது. இந்தியாவின் மொத்த ஜி.டி.பி யில் இந்தத் தொகை 1.2 % ஆகும். 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த சதவிகிதம் 2.5 ஆக இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் முன்னேறிய உலக நாடுகள் பலவற்றிலும் மருத்துவத்திற்கென 6% நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த பின்னடைவிற்கு மிக முக்கிய காரணம் மக்கட்தொகை பெருக்கமும், வேலையில்லா திண்டாட்டமுமே ஆகும்.

உதவித்தொகை அவசியம்தானா?

இந்தியாவில் மற்ற துறைகளில் வழங்கப்பட்டுவரும் மானியங்கள், உதவித்தொகைகள், சலுகைகளுடன் இந்த முதியோருக்கான உதவித்தொகையை ஒப்பிடுப்பார்த்தல் கூடாது. ஏனெனில் இந்த மானியங்கள் குறிப்பிட்ட தொழில்களில் ஏற்பட்டும் லாப விகித சரிவுகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தவோ அரசின் சார்பில் அளிக்கப்படுபவை. ஆனால் முதியோருக்கான உதவித் தொகைகள் ஆதரவற்ற நிலையில் இருக்கும் விளிம்புநிலை மக்களை ஒரு வேளையாவது வயிறார உணவருந்தச் செய்யக்கூடிய திட்டமாகும்.

இருப்பினும் இம்மாதிரியான உதவித்தொகைகள் நீண்ட காலத்திற்கு பயன்தராது. எதிர்காலத்தில் இந்த பிரச்சனையை சமாளிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிக அவசியம். இந்தியாவில் வறுமை ஒழிப்புத்திட்டங்கள் என எடுத்தால் பத்து திட்டங்களை அரசு அறிவித்திருக்கிறது. இவை சரியான முறையில் செயல்படுத்தப்பட்டிருந்தாலே பல சிக்கல்களைத் தவிர்த்திருக்க முடியும். இதில் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் மத்திய மற்றும் மாநில அரசால் பரம ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் இந்த அற்பத்தொகை கூட அவர்களுக்கு சரிவர கிடைப்பதில்லை.

OLD-AGE-HOME-INDIA
Credit: What’s Up Life

பல படிநிலைகளைத் தாண்டி இந்தப்பணம் பயணிக்கும்போது இப்படியான ஊழல்கள் நடைபெறுவது தவிர்க்க முடியாததாகின்றன. வீட்டில் இருந்து துரத்தப்பட்டு, அந்திமக்காலத்தில் மங்கிய கண்களோடு மரணத்தைத் தள்ளிப்போடும் பலரால் இதை எதிர்த்துக்கேட்க முடிவதில்லை. இந்தியா அதன் உட்கட்டமைப்புகளில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். வேலைவாய்ப்பில் தன்னிறைவு பெறும்வரை இம்மாதிரியான உதவித்தொகைகளும் அவசியமாகின்றன.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!