நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி இந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். சென்ற தேர்தலில் மோடி இதே தொகுதியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது நினைவிருக்கலாம். வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி களமிறங்குவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் ராகுல் காந்தியின் வயநாடு பிரச்சாரத்தின் போதுகூட இதுகுறித்த கேள்விகள் அவரிடம் (பிரியங்கா) வைக்கப்பட்டன. அதற்கு ராகுல் காந்தி தான் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கவேண்டும் என பிரியங்கா தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாரணாசி தொகுதியில் அஜய் ராய் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யார் இந்த அஜய் ராய்?
காசிப்பூர் மாவட்டத்தில் பிறந்த அஜய் ராய் இதுவரை 5 முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது மோடியை எதிர்த்து களமிறங்கும் ராய் முன்னாள் பாஜக உறுப்பினர் ஆவார். ஆமாம். ராய் படிக்கும் காலத்திலிருந்தே பாஜக மாணவர் அணியில் இருந்திருக்கிறார். கோலஸ்லா தொகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதன்முறை வெற்றி பெற்றார். அவருடைய முதல் தேர்தலும் இதுதான்.
அதே போல் 2002, 2007 ஆண்டு தேர்தல்களிலும் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றிகளை பெற்றார். ஆனால் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது அஜய் ராய்க்கும் கட்சி மேலிடத்திற்கும் மோதல் வந்தது. ராய் லோக் சபா தேர்தலில் சீட் கேட்க கட்சி மறுத்திருக்கிறது. இதனால் அஜய் சமாஜ்வாதி கட்சியோடு தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால் அந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதே ஆண்டு (2009) கோலஸ்லா சட்டபேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். ஆனால் மறுபடி வில்லங்கம் வந்தது. அதன் பின்னர் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார். இதற்கிடையே கோலஸ்லா தொகுதியில் இருந்து பிந்த்ரா தொகுதி தனியாக பிரிக்கப்பட்டது.
பிந்த்ரா பெரும்பான்மை விவசாயிகளைக் கொண்ட தொகுதி. இங்கு நடைபெற்ற 2012 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் அஜய். இதில் வெற்றிபெற்றதன் மூலம் பாஜக தவிர்த்து முதன்முறை காங்கிரஸ் சார்பில் இவர் பெற்ற முதல் வெற்றியாக இது அமைந்தது.
அஜய் ராய் இதுவரை லோக்சபா தேர்தல்களில் இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியையே சந்தித்திருக்கிறார். மேலும் சென்ற 2014 ஆம் ஆண்டு தேர்தலிலும் மோடியை எதிர்த்து ராய் போட்டியிட்டு 7.34 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். ஆகவே ராயின் இந்த போட்டி மிகுந்த சவாலானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.