பட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்

Date:

2019 – 20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். தேர்தல் நேரம் என்பதால் மக்களுக்கான பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். முடிவும் அப்படியே வந்திருக்கிறது. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களைக் கவரும் பல திட்டங்களை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அருண் ஜெட்லிக்கு  உடல்நிலை சரியில்லாததால் இடைக்கால நிதியமைச்சரான பியூஷ் கோயல் இந்த இடைக்கால பட்ஜெட்டை அறிவித்தார். 2019 பட்ஜெட்டில் என்னென்ன இருக்கிறது என பார்ப்போம்.

budget
Credit: Moneycontrol

வருமான வரி

தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை ஆண்டுக்கு ஊதியம் பெறுபவர்கள் எந்தவிதமான வருமானவரி செலுத்த வேண்டியத் தேவையில்லை. ரூ.6.50 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்கள், பிஎப், பங்கு வர்த்தகம், பரஸ்பர நிதித்திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்தால் வருமானவரி செலுத்தத் தேவையில்லை.

மின்சாரம்

பியுஷ் கோயல் இன்று மக்களைவையில் பேசும்போது, “நாடுமுழுவதும் உள்ள வீடுகளுக்கு மின்வசதி அளிக்கும் திட்டம் ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்கிறது. ஏறக்குறைய 2.50 கோடி வீடுகளுக்கு மின்வசதி கிடைக்கவில்லை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் சவுபாக்கியா திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி செய்து தரப்படும். இதன்படி, 2019 மார்ச் மாதத்துக்குள் மீதமுள்ள 2.50 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

சவுபாக்கியா திட்டத்தின் கீழ் இதுவரை, 2,48,19,168 குடும்பங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 – ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சவுபாக்கியா திட்டத்தில் இதற்காக ரூ.16,320 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுவரை 2,48, 47, 762 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தானில் 8,460 வீடுகள், சத்தீஸ்கரில் 20,134 வீடுகளுக்கும் மின்வசதி இல்லை. இந்த வீடுகளுக்கு மின்வசதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

விவசாயம்

அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் கிராமங்களாக மாற்றப்படும். ரூபாய் 75 ஆயிரம் கோடி செலவில் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் அடைவார்கள். மூன்று தவணைகளாக, 2 ஏக்கர் அளவு வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத் திட்டம்

உலகிலேயே மிகப்பெரிய ஓய்வூதிய திட்டமான பிரதம மந்திரி சிரம் யோகி திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்படும். மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். 500 கோடி ரூபாய் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனாளிகள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவார்கள். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மத்திய அரசின் பங்களிப்பு 10% இருந்து 14% மாக உயர்த்தப்பட்டிருக்கிறது.  பி.எஃப். சந்தாதாரர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 6 லட்சம் வழங்கப்படும். நிரந்தர வைப்பு மற்றும் அஞ்சலக வைப்பு நிதியில் சேமிக்கும் பணத்துக்கும் கிடைக்கும் வட்டிக்கு ரூ.40 ஆயிரம் வரை TDS பிடிக்கப்படாது. இந்த வரம்பு முன்பு ரூ.10 ஆயிரமாக இருந்தது.

பாதுகாப்புத்துறை 

ராணுவத்திற்கு கூடுதல் பட்ஜெட் ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இரயில்வே

ரயில்வே துறைக்கு 64,587 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறது அரசு. தேசம் முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராசிங் குறைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏற்படும் விபத்துகளும் குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ரயில்வே சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது மேலும் மேகாலயா, மிசோரம், திரிபுரா மாநிலங்கள் ரயில்வே வரைபடத்தில் இணைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை 

பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் மூலமாக 1.03 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளி வந்துள்ளது.  50 ஆயிரம் கோடி கணக்கில் வராத சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன மற்றும்  ரூ.6,900 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட ரூ. 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

வரிச்சலுகை

40 ஆயிரம் ரூபாய் வரையிலான வைப்பு நிதிக்கு (Fixed Deposit) வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகைக்கான வரிச்சலுகை வரம்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் இரண்டாவது வீட்டுக் கடனுக்கும் வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இரண்டாவது வீட்டுக்கடனையும் வருமான வரிக்கணக்கில் காட்டி சலுகை பெற்றுக்கொள்ளலாம். தன்வசம் உள்ள 2வது வீட்டை வாடகைக்கு விடும் போது அதற்கு விதிக்கப்படும் வருமான வரி உச்சவரம்பு ரூ.1,80,000 இருந்து ரூ.2,40,000-யாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொழில்துறை

ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைக்கப்படும். பசுக்களுக்கான நலத் திட்டங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இரண்டு சதவீதம் வட்டி சலுகை அளிக்கப்படும். கடன்களை உரிய நேரத்தில் செலுத்தும்  மேலும் மீன்வளர்ப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மூன்று சதவீதம் சலுகை அளிக்கப்படும்.மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் மக்களின் நலனுக்காக மீன்வளத்துறை அமைச்சகம் துவங்கப்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒதுக்கீடு 58 ஆயிரத்து 166 கோடியாக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையில் நிலவும் மிகமுக்கிய பிரச்சினையான வீடியோ திருட்டை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும். மேலும் படப்பிடிப்பிற்கான அனுமதி எளிய வகையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணர்களை குறிவைத்து கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தப் புதிய அறிவிப்புகள் எம்மாதிரியான முன்னேற்றத்தைத் தரபோகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!