நம் சுவர்களில் நம்முடைய அனுமதியைப் பெறாமல் விளம்பரம் செய்பவர்களை நாம் எப்படி அனுகுவோமோ அதேபோல் பொதுச் சுவற்றை நாசம் செய்பவரையும் நாம் தடுக்க வேண்டும். நம்முடைய வரிப் பணத்தைக்கொண்டு கட்டப்படும் பொதுச்சொத்தை பாதுகாப்பதும் நம் கடமைகளுள் ஒன்றாகும். அப்படி கடமை உணர்ச்சி பொங்கிய திருச்சியின் சில மனிதகுல மாணிக்கங்கள் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் பயன்படுத்தும் பாலத்தில் விளம்பரம் செய்தால் இலவசமாக செய்வினை வைக்கப்படும் என சமூக விரோதிகள் சிலர் எழுதியிருக்கின்றனர். இதனை எழுதியது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
தென்னூர் பாலம்
திருச்சியில் உள்ள தென்னூர் பாலத்தின் தூண்களில் தான் இப்படி எழுதப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடமான இந்த பாலத்தின் கீழே உள்ள தூண் ஒன்றில்,” நோட்டிஸ் ஓட்டுபவர் மீது இலவசமாக சிறந்த முறையில் செய்வினை வைக்கப்படும்” என விஷக்கிருமிகள் சிலரால் எழுதப்பட்டிருக்கிறது. அதனருகே பள்ளி இருப்பதால் மாணவர்களுக்கு இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என அப்பகுதியில் வசிப்போர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
திருச்சியின் பெரும்பான்மையான பாலங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைய திருச்சி மாநகராட்சி அலுவலகம் ஒப்புதல் அளித்திருந்தது. TVS டோல்கேட், மன்னார்புரம் பகுதிகளில் தன்னார்வலர்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் ஓவியங்கள் மற்றும் தலைவர்களின் படங்களை வரைய அனுமதி கொடுக்கப்படிருந்தது. தென்னூர் பாலத்திற்கு இதன் அடிப்படையிலேயே தன்னார்வலர்களை அனுமதித்ததாக திருச்சி மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுதியவர் யார் என காவல்துறை விசாரித்து வருகிறது.

காதல் தொல்லை
நோட்டிஸ் ஓட்டுபவர்கள் ஒருபுறம் இருந்தாலும் காதலர்கள் தான் அதிகம் பொதுச் சொத்திற்கு வேட்டு வைக்கிறார்கள். பூங்கா, கோவில் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலெல்லாம் தம்பதி சகிதமாக சென்று அங்குள்ள சுவர்களில் தங்களது பெயர்களை கிறுக்கி விடுகிறார்கள். இப்படிப்பட்ட மனநலம் குன்றிய மனிதர்களால் தான் அரசாங்க சொத்துகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. கர்நாடகா மாநிலத்தில் உள்ள ரங்கனாதிட்டு பறவைகள் சரணாலயமும் இவர்களது காதலுக்கு விதிவிலக்கல்ல.
டிசம்பர் மாத காலத்தில் மட்டும் 40,000 பறவைகள் இங்கு வருகின்றன. சைபீரியா லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் விதவிதமான பறவைகளைக் காண்க வருடத்திற்கு 3 – 4 லட்சம் மக்கள் அங்கு கூடுகிறார்கள். இப்படி வருபவர்கள் அங்கு விளைந்து நிற்கும் மரங்களில் தங்களது பெயர்களை செதுக்கிவிட்டுச் செல்கின்றனர். புதுப்புது மரங்களைத்தேடி காடுகளின் உள்ளே செல்கிறார்கள். இதனால் அங்குவரும் பறவைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

இதனைத் தடுக்கும்விதமாக அங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருக்கிறது. மேலும் மரங்களை சிதைக்கும் நோக்கில் நடந்துகொள்பவர்களின் மீது வழக்கு பதியப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடும் பெரும்பான்மையானோர் படித்தவர்கள். பொதுச் சொத்திற்கோ அடுத்தவருக்கோ நம்மால் எவ்வித பாதிப்பும் இருக்கக்கூடாது என்பது கூடத் தெரியாதவர்கள் எதைத்தான் படித்தார்கள் எனத் தெரியவில்லை. ஒருவேளை மரத்தினைக் காதலியுங்கள் என்பதை தவறாக புரிந்து கொண்டார்களோ ?