என்ன தான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் சில விஷயங்களை மனிதனால் மாற்ற முடிவதில்லை. அதிலொன்று தான் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமை. இப்படிக் கழிவகற்றுகையில் விஷ வாயு தாக்கி ஏராளமானோர் மரணிக்கின்றனர்.
விஷ வாயுத் தாக்குதல்கள்
கடந்த மூன்றாண்டுகளில் புனே மாநகராட்சியில் பணி செய்யும் 6826 தூய்மைப் பணியாளர்களில் 327 பேர் இறந்து போயிருக்கிறார்கள். பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்பட்ட நோய்த் தொற்றுகளால் அவர்களின் இறப்பு நேர்ந்துள்ளது என்று அந்த மாநகராட்சியே அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்த வேலைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 30 – க்கும் அதிகமானோர் இறந்ததையொட்டி சென்ற வருடம் சென்னை உயர் நீதிமன்றம், கைகளால் மலம் அள்ளுவோர் மறுவாழ்வளித்தல் சட்டம் 2013-ஐ மத்திய மாநில அரசுகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது.
இந்தியாவில் கைகளால் கழிவகற்றும் முறையில் கட்டப்பட்ட சுமார் 26 லட்சம் கழிப்பறைகள் இன்றும் இருக்கின்றன. சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லாததன் காரணமாகவே கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பரிந்துரைகளும் போராட்டங்களும்
1949 – இல் பார்வே கமிட்டி(Barve Committee), 1957 – இல் தூய்மைப்பணி நிலை பற்றிய விசாரணைக் குழு (Scavenging Conditions Enquiry Committee), 1968 தொழிலாளர் குழுவிற்கான தேசிய ஆணையம் (National Commission of Labour Committee) மற்றும் கையால் மலம் அள்ளுவோருக்கான தேசிய ஆணையம் (National Commision for Safai Karmacharies ) என அத்தனை ஆணையங்களும், குழுக்களும் தூய்மைப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தன. பல வடிவங்களில், பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் நடந்து வந்தாலும் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
மனிதக் கழிவுகள் மட்டுமின்றி சாக்கடைத் தொட்டிகளை மனிதர்கள் சுத்தப் படுத்துவதும் ஏற்க முடியாத ஒன்றாகும். அதிலிருந்து வெளிப்படும் விஷ வாயுக்கள் கொடூரமான பாதிப்புகளை மனிதர்களுக்கு ஏற்படுத்தும். துப்புரவுப் பணியாளர்கள் விஷ வாயு தாக்கி மரணிக்கும் செய்திகள் நாம் அன்றாடம் கடக்கும் ஒன்றாகி விட்டன. இப்போது தான் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கழிவுகளை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறை சோதனை அடிப்படையில் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த முறை நாடு முழுவதும் பரவ வேண்டும்.
பில் கேட்ஸ் அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பம்
இந்நிலையில் தான், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவறைகளைப் பற்றிய கண்காட்சி (Reinvented Toilet Expo) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அங்கு தான் அவர் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கழிப்பறைத் தொட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பின்னர் அவர் உரையாற்றிய போது, “நாட்டில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாததால் பலர் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, இதற்கு எதிராக புதிய தொழில்நுட்பம் கொண்ட கழிவறையைக் கொண்டு வர வேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு சுமார் 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.
இறுதியாக ஒரு புதிய கழிப்பறைத் தொட்டி இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மனிதக்கழிவுகளை அகற்ற தண்ணீர் தேவையில்லை. இதில் சேர்க்கப்பட்டுள்ள ரசாயனம், மனிதக்கழிவுளை உரமாக மாற்றி விடும். மேலும், இதனை எந்த பாதாள சாக்கடையுடன் இணைக்கத் தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவை போன்ற கண்டுபிடிப்புகள் தான் மானுடம் மாண்புற வழிவகுக்கும். தற்கால அவசர மற்றும் அத்தியாவசியத் தேவையும் இவை போன்ற வளர்ச்சிகள் தான்.