மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்ற மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது .
நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன, அது எப்படி நடைபெறுகிறது என்பது குறித்த ஒரு பார்வை இதோ:
நம்பிக்கையில்லா தீர்மானத்தை யார் கொண்டுவரலாம்?
ஒரு அரசு ஆட்சியில் இருக்க வேண்டுமானால், லோக்சபாவில் பகுதிக்கும் மேற்பட்ட உறுப்பினர் பலத்தை அது கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என எந்த ஒரு மக்களவை உறுப்பினருக்கு சந்தேகம் வந்தாலும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம். இதற்காக காரணம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. சபாநாயகர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்றால் வாக்கெடுப்பு நடத்துவதே ஒரே தீர்வு.
லோக்சபா விதிமுறை பிரிவு 198ன்கீழ், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நம்பிக்கை இல்லா தீர்மானம் எங்கே கொண்டுவர முடியும்?
பாராளுமன்றம் இரு அவைகளை உள்ளடக்கியது. அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டது மக்களவை அல்லது லோக்சபா. மாநிலங்களவை அல்லது ராஜ்யசபா எனப்படும் மற்றொரு அவை குடியரசுத் தலைவர்களால் நேரடியாக நியமிக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டது.எனவே மக்களவையில் மட்டுமே, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். மாநிலங்களவையில் கொண்டுவர முடியாது. லோக்சபா விதிமுறை பிரிவு 198ன்கீழ், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எப்படி கொண்டுவர வேண்டும்?
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது பற்றி காலை 10 மணிக்கு முன்பாக சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வமாக உறுப்பினர் தகவல் தெரிவிக்க வேண்டும். அதை சபையில் சபாநாயகர் வாசித்து காட்டுவார். குறைந்தபட்சம் 50 எம்.பிக்கள் ஆதரவாவது இருந்தால்தான், நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு தகுதி பெறும்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் முடிவு என்ன?
நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 நாட்களுக்குள் ஒருநாள், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். முன்னதாக தீர்மானத்தின் மீது, விவாதம் நடைபெறும். ஒருவேளை அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால், உடனடியாக ஆட்சி ராஜினாமா செய்யப்பட வேண்டும்.
ஜூலை 20 ம் தேதியன்று நடைபெறவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய விளக்கப்படம் இங்கே உங்களுக்காக…