[சட்டம் தெளிவோம்]: அத்தியாயம் 1 – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம் தொடர்பான முழு விவரம்

Date:

இந்த வாரம், அடிப்படையாக அனைத்து மக்களும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றான நமக்கிருக்கும் அடிப்படை மனித உரிமைகள் (Basic Human Rights) பற்றிக் காணலாம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் வாய்ந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தனையாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆவணம் ஒன்றை உருவாக்கியது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் “அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்” அறிமுகம் செய்யப்பட்டது. 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன.

அந்த மனித உரிமைப் பிரகடனத்தின்படி நமக்கிருக்கும் உரிமைகள் யாதெனில்:

1. சமத்துவ உரிமை – சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனசாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

2. இனம், மொழி, மதம், நிறம், பால், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபாடின்றி உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

4. யாரும் யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.

5. எவரும் சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடைமுறைகளுக்கோ உட்படுத்தப்படக்கூடாது.

6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை

7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கு எல்லோரும் உரித்தானவர்கள்.

8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு.

9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.

10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.

12. எவரும் பிறருடைய தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் தலையிடாமல் இருப்பதற்கான சட்டப் பாதுகாப்பு உரியமையுடைவராவார்.  

13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.

14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் புகலிடம் கேட்க உரிமை உண்டு.

15. ஒவ்வொருவருக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை உண்டு.

16. தகுந்த வயதடைந்த எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை ஒவொருவருக்கும் உண்டு. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.

17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் அதனைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 

18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி எந்தத் தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.

20. எவருக்கும் சமாதான முறையில் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள, யாவருக்கும் உரிமை உண்டு. கூட்டத்தில் இணைவதற்கு எவரையும் கட்டாயப்படுத்தலாகாது. 

21. அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை அனைவருக்கும் உண்டு. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

22. சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமையுடைவராவர்.

23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், விரும்பிய தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.

24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் ஒவொருவருக்கும் உரிமை.

25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினரது, உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.

அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.

தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை. சகல குழந்தைகளும் சமூகப் பாதுகாப்பிற்கு உரிமையுடவர்கள்.

26. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் இருத்தல் வேண்டும்.

27. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் அனைவருக்கும் உரிமையுண்டு.

28. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபெறும் உரிமை.

29. ஒவ்வொருவரும் தனது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பயன்படுத்தும்போது பிறரது உரிமையை பாதிக்காதவாறு இருக்க வேண்டும்.

30. இந்த பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் இணையதளத்தில் இந்த பிரகடனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பும் உள்ளது.

இந்த மனித உரிமைப் பிரகடனத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.எனினும் மனித உரிமைகள் குறித்து அனைத்து மக்களிடமும், போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை.

மனித உரிமைகள் குறி்த்து மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேலும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கவும் உதவும். இதற்கான பணியில் கல்வி அறிவு பெற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இத்தொடரின் அடுத்த பகுதியை இங்கே படிக்கவும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!