2 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட 30 லட்சம் மதிப்புள்ள மண்டபம்

0
43
scam
Credit: PaGaLGuY

வீடு கட்ட எத்தனை நாட்கள் ஆகும். ஒரு ஆறுமாதம்? என்னதான் இயந்திரமாய் வேலை செய்தாலும் மூன்று மாதத்திற்கு முன்னால் கதை ஆகாது. ஆனால் அருணாச்சல பிரதேசத்தில் வெறும் இரண்டே நாட்களில் 30 லட்சத்திற்கு மண்டபம் ஒன்று கட்டப்பட்டதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதை தீவிரமாகத் துருவி விசாரித்த மாணவர் குழு அப்படி ஒரு கட்டடமே இல்லை என கண்டுபிடித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் கிராம நிர்வாக அதிகாரி முதல் அரசு அதிகாரிகள் பலரிடம் இந்தக் கட்டிடம் திறக்கப்பட்டதற்கான ஒப்புதலை வாங்கியிருக்கிறார் அந்த ஒப்பந்தகாரர்.

Know-revelation
Credit: India TV

 30 லட்சம்

அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள லிரோமோபா பகுதியில்தான் இந்த இன்விசிபில் கட்டிடம் இருந்திருக்கிறது. இந்த மாவட்டத்தின் சமூக மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் இந்த மண்டபத்திற்கென ஒதுக்கப்பட்டது. கலை நிகழ்சிகளுக்காகவும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. 2016 -17 ஆம் நிதியாண்டில் இதற்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது. ஆனால் கட்டுமானப்பணிகள் துவங்கப்படவே இல்லை. எனவே அங்குள்ள கார்கு கார்டி என்னும் மாணவர் அமைப்பு மண்டபத்தின் கட்டுமானப்பணிகள் குறித்த விபரத்தை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்திருந்தனர். அதில் வந்த முடிவுதான் அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது.

2 நாள் கட்டிடம்

தகவல் அறியும் உரிமையின் மூலம் இவர்களுக்குக் கிடைத்த பதிலில் கட்டிடத்திற்கான வேலைகள் மார்ச் 29 ஆம் தேதி 2017 ல் துவங்கப்பட்டு மார்ச் 31 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டே நாளில் மொத்த பணிகளும் நடைபெற்றதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவிக்கிறது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு விசாரணையில் புதிய புதிய திருப்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கட்டப்படாத கட்டிடத்திற்கு திறப்புவிழா கொண்டாடப்பட்டதாகவெல்லாம் தகவல் இருக்கிறது.

scam
Credit: PaGaLGuY

இந்த வழக்கில் பல அரசு அதிகாரிகள் தொடர்பு உள்ளதால் இதற்கென தனிப்படை அமைக்கவேண்டும் என மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார். தரமில்லாத சாலைகள், கட்டிடங்கள் என வளர்ந்துவந்த ஊழல் தற்போது இந்த நிலையில் இந்தியாவில் நிலைபெற்றிருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.