இந்த வார ஆளுமை – ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி – செப்டம்பர் 9, 2019

0
51

கல்கி என அழைக்கப்படும் ரா. கிருஷ்ணமூர்த்தி ஒரு தமிழ் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், திரைக்கதை ஆசிரியர், கலை விமர்சகர், சுதந்திர போராட்டத்திற்காக தன் படிப்பை துறந்தவர், சரித்திர கதைகளின் முன்னோடி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் என பலவற்றை எழுதியவர். புதிதாக எழுத விரும்புபவர்களுக்கு இவரது சிறு கதைகளும் வரலாற்று கதைகளும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

writer kalkiCredit: Appadvice

பிறப்பு 

கல்கி அவர்கள் 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மாயவரத்தை அடுத்த புத்தமங்கலம் என்ற கிராமத்தில் ராமசாமி அய்யர் – தையல்நாயகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது முழு பெயர் ராமசாமி அய்யர் கிருஷ்ணமூர்த்தி (ரா.கிருஷ்ணமூர்த்தி) என்பதாகும்.

காந்தி எழுதி வந்த சுயசரிதையை  தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார் கல்கி!!

கல்வி

கல்கி, அவரது சொந்த கிராமமான புத்தமங்கலத்தில் ஆரம்பக் கல்வி கற்ற பின், திருச்சி தேசியக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார். 1920 ஆம் ஆண்டு காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய சமயத்தில் காந்தி, ராஜாஜி, டாக்டர் ராஜன் ஆகியோர் மீது அதிக பற்று கொண்டிருந்த கல்கி அவர்கள் விடுதலைப் போரில் பங்கு கொள்ள வேண்டுமென்று படிப்பை நிறுத்தி விட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்து ஓராண்டு சிறைத் தண்டனை அளித்தனர்.

நவசக்தி

விடுதலையான பிறகு, திருச்சியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். அங்கு காங்கிரஸ் கட்சிக்காக அவர் எழுதிய பிரசுரங்கள் மூலம் அவருடைய எழுத்துத் திறமையைத் தெரிந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், திரு.வி.க.வின் பத்திரிகையில் சேரும்படி ஆலோசனை கூறி, சிபாரிசுக் கடிதமும் கொடுத்தார். கல்கியின் எளிய இனிய தமிழ் நடையால் கவரப்பட்ட  திரு.வி.க., உடனே கல்கிக்கு “நவசக்தி” இதழில் துணை ஆசிரியர் பதவி கொடுத்தார். நவசக்தியில் பணிபுரிந்து, தமிழ்த்தேனீ என்ற பெயரில் உலகச் செய்திகளைத் திரட்டிக் கொடுத்தார் கல்கி. முக்கிய மாநாடுகளுக்கு நவசக்தியின் சிறப்பு நிருபராகச் சென்று, அந்த நிகழ்ச்சிகளைத் நவசக்தியில் தொகுத்து எழுதினார். காந்தி “யங் இந்தியா” பத்திரிக்கையில் எழுதி வந்த சுயசரிதையை இவர் தமிழில் மொழிபெயர்த்து “சத்திய சோதனை” என்ற பெயரில் வெளியிட்டார்.

1927 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு “ஏட்டிக்குப் போட்டி” என்ற நகைச்சுவைக் கட்டுரையை கல்கி எழுதி அனுப்பினார். கல்கி என்ற புனைபெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் கட்டுரை இதுதான். அது பிரபலமானதால் தொடர்ந்து விகடனில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். இந்த சமயத்தில், திருச்செங்கோட்டில் “காந்தி ஆசிரமம்” நடத்திக் கொண்டிருந்த ராஜா, “விமோசனம்” என்ற பெயரில் மது விலக்குப் பிரசாரத்துக்காக ஒரு பத்திரிகை நடத்தப் போவதாகத் தெரிவித்தார். இதனால் நவசக்தியில் இருந்து விலகி திருச்செங்கோடு சென்று, “விமோசனம்” பத்திரிகையின் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார் கல்கி.

parthiban kanavuCredit: hashreview

சுதந்திர போராட்டங்கள்

1930 ஆம் ஆண்டு காந்தி உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். அதில் பங்கு கொண்ட ராஜாஜி, வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சி சிறை சென்றார். அந்த சமயத்தில் ராஜாஜியின் அனுமதிடன், விமோசனம் பத்திரிக்கையை நிறுத்தி விட்டு, கோபிச்செட்டிப்பாளையத்தில் தடையை மீறி பேசி கல்கி கைதானார். அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விடுதலையான பிறகு ஆனந்த விகடனில் துணை ஆசிரியரான கல்கி தொடர்ந்து எழுதி வந்தார். விகடனில் கல்கி எழுதிய முதல் தொடர்கதையான “கள்வனின் காதலி” கல்கியின் புகழைப் பரப்பியது. மேலும் இவர் எழுதிய “தியாக பூமி” நாவல் புதிய எழுச்சியையும், தேச பக்தியையும் தூண்டும் படி இருந்தது.  அது திரைப்படமாகவும் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.

1952-53-ல் கல்கி எழுத ஆரம்பித்த  “பொன்னியின் செல்வன்” மூன்றாண்டுகள் தொடராக வெளிவந்தது!!

1940-ம் ஆண்டின் இறுதியில் தனி நபர் சத்தியாக்கிரகத்தைக் காந்தி தொடங்கிய போது அதில் கலந்து கொள்ள விரும்புவதாக காந்திக்குக் கல்கி கடிதம் எழுதி, அதற்கு அனுமதியும் பெற்றார். போராட்டத்தில் பங்கு கொள்வோர் சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதால் விகடன் இதழில் தன் துணை ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கல்கி போராட்டத்தில் பங்கு கொண்டார். அதன் விளைவாக 3 மாதம் கடுங்காவல் தண்டனையும் பெற்றார்.

Ponniyin SelvanCredit: alchetron

கல்கி

சிறையில் இருந்து விடுதலையான கல்கி அவருடைய நண்பர் டி. சதாசிவத்துடன் சேர்ந்து, சொந்தப் பத்திரிகை நடத்த முடிவெடுத்தார். காங்கிரஸ் போராட்டங்களில் கலந்து கொண்ட போதே கல்கியும் சதாசிவமும் நண்பர்கள். கல்கி என்ற பெயரில் இவர்கள் தொடங்கிய பத்திரிகை வெற்றிகரமாக அமைந்தது. கல்கியின் எழுத்துத் திறமையும், டி.சதாசிவத்தின் நிர்வாகத்திறனும் சேர்ந்து பத்திரிக்கையின் விற்பனையை வெகு விரைவில் பல்லாயிரக்கணக்கில் உயரச் செய்தன.

தமிழின் முதல் சரித்திர நாவலான “பார்த்திபன் கனவு” கல்கியில் தொடராக வெளியாயிற்று. அடுத்து “சிவகாமியின் சபதம்” கல்கிக்கு புகழைத் தேடித் தந்தது. சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாக கொாண்டு கல்கி எழுதிய “அலை ஓசை” அவருடைய சமூக நாவல்களில் புகழ் பெற்றது. இது கல்கிக்கு சாகித்ய அகாடமி விருதை பெற்று தந்தது. 1952-53-ல் கல்கி எழுதத் தொடங்கிய “பொன்னியின் செல்வன்” மூன்றாண்டுகள் தொடராக வெளிவந்தது. இது தமிழர்களின் வாசிப்பு பட்டியலில் இன்றும் இடம்பெறும் நூலாகும்.

மகாகவி பாரதியாரின் மீது மிகவும் ஈடுபாடு கொண்ட கல்கி, அவர் நினைவாக எட்டயபுரத்தில் ஓர் மணிமண்டபம் கட்டுவதற்கு முழு முயற்சி எடுத்தார். அதன் பிறகு மணிமண்டபம் கட்டப்பட்டு ராஜாஜி அவர்கள் திறந்து வைத்தார்.

kalki stampCredit: Wikipedia

இறப்பு

எழுத்தின் மூலம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெரும் தொண்டாற்றிய கல்கி, 1954 டிசம்பர் 5 ஆம் தேதி, அவருடைய 55-வது வயதில் காலமானார். சரித்திர நாவல்கள் மற்றும் சமூக நாவல்கள் என்று இரண்டு துறையிலும் இயங்கிய அவரின் நூல்கள் இன்றைக்கும் பெருமளவில் வாசிக்கப்படுகின்றன!!

இவரது  நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க இந்திய அஞ்சல் துறை இவர் உருவம் இருக்கும் சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது.

செப்டம்பர் 9 – சுதந்திர போராட்ட வீரரும், அழிய புகழ் பெற்ற சிறந்த நூல்களை தந்தவருமான கல்கியின் பிறந்த நாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்!