வ. உ. சி ஒரு சுதந்திர போராட்ட வீரர். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த தமிழன். தொழிலாளர்கள் நலனுக்காக தனது சொத்தில் பெரும்பகுதியை செலவு செய்த வள்ளல்.
பிறப்பும் கல்வியும்
வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை அவர்கள், 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஆறு வயதில் தமிழ் கற்ற வ. உ. சி அவர்கள் ஒரு அரசாங்க அலுவலரிடம் ஆங்கிலம் கற்றார். பதினான்கு வயதில் தூத்துக்குடிக்கு சென்று புனித சேவியர் பள்ளியிலும், கால்டுவெல் பள்ளியிலும் அதன் பிறகு திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரி உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி கற்றார். தாலுகா அலுவலகத்தில் கொஞ்ச காலம் பணிபுரிந்த வ. உ. சி அவரது தந்தை ஆலோசனை படி திருச்சி சென்று சட்டம் படித்தார். 1894 ஆம் ஆண்டு தேர்ச்சியும் பெற்றார்.
வழக்கறிஞர் பணி
1895 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார் வ. உ. சி. குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்த வ. உ. சி ஏழைகளுக்காக இலவசமாக வாதாட ஆரம்பித்தார். பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்ற வ. உ. சி சில வழக்குகளில் சமாதானத்தை வலியறுத்தி பிரச்சனையை தீர்த்து வைத்து நன்மைகள் செய்தார். 1900 ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு சென்று அங்கும் புகழ் பெற்ற வழக்கறிஞராக செயலாற்றினார்.
வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை என்பதன் சுருக்கமே வ.உ.சி.
திருமணம்
வ. உ. சி. யின் திருமணம் 1895 ஆம் ஆண்டு வள்ளியம்மாள் என்பவருடன் நடைபெற்றது. ஆனால் பிரசவத்தின் போது அவர் இறந்து விட்டார். அதனால் மீனாட்சி என்பவரை மறுமணம் புரிந்து கொண்டார்.

பாரதியார் நட்பு
வ. உ. சி யும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் அவர்கள் நாட்டின் விடுதலை பற்றியே பேசி வந்தனர். தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களிடம் விடுதலை உணர்வை தட்டி எழுப்பும் பாரதியாரின் பாடல்கள் வ. உ. சி க்கு மிகவும் பிடித்தமானவை.
கப்பலோட்டிய தமிழன்
நாட்டின் விடுதலைக்காக வ.உ.சி. அவர்கள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டார். அவரின் முதல் எதிர்ப்பு ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த கப்பல் கம்பெனி. அது தான் இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. வ. உ. சி. இந்தியர்களுக்காக முதன் முதலில் 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி “சுதேசி நாவாய் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். தொடக்கத்தில் வாடகை கப்பலையே வாங்கி போக்குவரத்துக்கு பயன்படுத்தினார். ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் வணிகம் சிறப்பாகாது என புரிந்த பின் சொந்த கப்பல்கள் வாங்க முடிவெடுத்தார். பல போராட்டங்களை தாண்டி எஸ்.எஸ்.காலியோ மற்றும் எஸ்.எஸ்.லாவோ என்ற நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு கப்பல்களை வாங்கினார். இந்த மகத்தான சாதனை இந்திய முழுக்க பரவியது. இந்திய மக்கள் அனைவரும் சுதேசி கப்பலில் பயணிப்பதை மிகவும் விரும்பினர்.
ஆனால் இந்தியர்கள் எப்போதும் அடிமையாகவே இருக்க வேண்டும் என எண்ணிய ஆங்கிலேய அரசுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. சுதேசி கப்பல் நிறுவனத்தை முடக்க பல திட்டங்கள் போட்டு செய்யல்படுத்தினர். ஆங்கிலேய கப்பல்களின் பயண கட்டணத்தை குறைத்தனர். அடுத்து வ. உ. சி. யிடம் சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ஒரு லட்சம் பணம் தருவதாக கூறினார்கள். வ. உ. சி. யோ அதை மதிக்கவே இல்லை. ஆங்கிலேய அரசு, சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலர் மூலமாக பல விதமான தொல்லைகளை வ.உ.சி க்கு கொடுத்துப் பார்த்தது. கடைசியில் இந்திய கப்பல் ஆங்கிலேயரின் கப்பலை மோத வந்தது என்று பொய் வழக்கும் போட்டது. ஆனால் வ. உ. சி யின் பேச்சு திறமையால் அந்த வழக்கும் எடுபடவில்லை.
அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று பயணிகளுக்கு இலவச பயணத்தையும் இலவச பொருட்களையும் கொடுத்து பல உத்திகளை தொடர்ந்து கையாண்டனர். இறுதியில் அவர்களுக்கு ஈடு கொடுக்காமல் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி திவாலாகும் நிலைமைக்கு சென்றது.

தொழிலாளர்கள் நலம் காத்தவர்
தூத்துக்குடியில் “கோரல் மில்” என்ற தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்குக் கூலி மிகக் குறைவு. ஆனால் அவர்கள் நாள் முழுவதும் இடைவேளை இல்லாமல் பன்னிரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக கடினமாக உழைக்க வேண்டும். விடுமுறையும் கிடையாது. தொழிலாளர்கள் செய்த சிறு தவறுகளுக்கும் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். தொழிலாளர்களின் இந்த நிலையை கண்டு பொங்கிய வ. உ. சி. தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யும் படி தூண்டினார்.
வ. உ. சி. யின் பேச்சால் கவரப்பட்ட தொழிலாளர்கள் அவர் தலைமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் வ. உ. சி. தொழிலாளர்களுக்கு பொதுமக்களின் துணையுடனும் தனது சொந்த சொத்துக்களின் மூலமாகவும் உதவினார். வேலை நிறுத்தம் மேலும் மேலும் தீவிரமடைததால் நிர்வாகம் கூலியை உயர்த்தவும், வேலை நேரத்தைக் குறைக்கவும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை அளிக்கவும் சம்மதித்தனர். இந்த வகையில் வ. உ. சி. தொழிலாளர்கள் நலனுக்காக பாடுபட்டு முன்னோடியாக திகழ்ந்தார்.
ஆங்கில இதழான “ஸ்டேட்ஸ் மேன்” தீர்ப்பு நியாயமற்றது என்றும் வ.உ.சி.யின் தியாகம் போற்றத்தக்கது என்றும் குறிப்பிட்டது!!
கைது
தொடர்ந்து வ. உ. சி. சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை தனது பேச்சின் மூலம் மக்களிடம் விதைக்க ஆரம்பித்தார். தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்த பெருமை வ. உ. சி. க்கு எப்போதும் உண்டு. மக்கள் வ. உ. சி. சொன்னபடியே செய்ய ஆரம்பித்தனர். அந்நிய பொருட்களை எதிர்த்தனர். நிலைமையை கவனித்த ஆங்கிலேயே அரசு 1908 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி அவரை கைது செய்தது. இதை அறிந்த மக்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானது தான் மிச்சம். அதன் பிறகு நடைபெற்ற வழக்கில் 40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை வ. உ. சி. க்கு வழங்கப்பட்டது.
இந்தக் கொடிய தீர்ப்பைக் கேட்டு இந்திய மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆங்கில அரசை ஆதரிப்பவர்கள் கூட இந்த தண்டனையை கேட்டு வெகுண்டனர். தொடர்ந்து தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ததில் 10 ஆண்டு தீவாந்திரத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
செக்கிழுத்த செம்மல்
சிறையில் வ. உ. சி. க்கு கடுமையான வேலைகள் தரப்பட்டன. சணல் நூற்றார். கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். விளைவு, அவரது எடை மிகவும் குறைந்தது. இவரது நிலைமையை கண்டு வருந்திய சிறை இயக்குநர், சிறை அலுவலராக பணியேற்றுக் கொண்டால் தண்டனைக் காலம் குறையும் என்றும் இன்னும் பல நன்மைகள் கிட்டும் என்றும் வ. உ. சி. யிடம் கூறிய போதும் கூட வ. உ. சி. நாட்டுப்பற்றால் அந்த பதவியை மறுத்துவிட்டார். அதே சமயம், வ. உ. சி. சிறையிலிருந்த போது சுதேசி கப்பல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தது. சொந்தமாக வாங்கிய கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்ற நிலை அறிந்து வ. உ. சி. மிகவும் வருந்தினார். அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால் 1912 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி வ. உ. சி. விடுதலை அடைந்தார்.

விடுதலைக்குப் பின் வ. உ. சி. சென்னைக்குச் சென்று மண்ணெண்ணெய் கடையை ஆரம்பித்தார். மளிகை கடையும் வைத்தார். ஆனால் ஒரு வணிகராக அவரால் வெற்றி பெற இயலவில்லை. 1920 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வ. உ. சி. கலந்து கொண்டார். ஆனால் காந்திஜியின் அகிம்சை போராட்டங்களான சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை திலகரின் சீடராக இருந்த அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனது கொள்கையைத் தொடர்ந்தால் அது சுதந்திரப் போராட்டத்திற்கு இடையூறாகிவிடும் என எண்ணி அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.
நன்றி மறவாத பண்பு
வ. உ. சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்தார். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. ஈ.எச். வாலஸ் என்பவர் தான் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் புரிந்து, அவர் வழக்கறிஞர் பணியை தொடர அனுமதி அளித்தார். இதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே வ. உ. சி. தனது கடைசி மகனுக்கு “வாலேஸ்வரன்” என்று பெயரிட்டார்.
தமிழ் மொழி ஆர்வம்
1932 ஆம் ஆண்டு தூத்துக்குடி வந்த பின்பு தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். வ. உ. சி. நான்கு கவிதை நூல்களை இயற்றியுள்ளார். மேலும் இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார். வ. உ. சி. விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற பத்திரக்கைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். வ. உ. சி. ஜேம்ஸ் ஆலன் என்பவரின் நூல்களை மொழிபெயர்த்தும் உள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு “வ. உ. சிதம்பரனார் துறைமுகம்” என்று 2011 ஆம் வருடம் பெயரிடப்பட்டது!!
மறைவு
வ. உ. சி. அவர்கள் கட்சியில் இருந்து விலகி இருந்தாலும் கடைசி மூச்சு வரை ஆங்கிலேய அரசை எதிர்த்து வந்தார். கடன்களை செலுத்த முடியாமல் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்த வ. உ. சி. 1936 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி மறைந்தார்.

சிறப்புகள்
வ. உ. சி. யை கௌரவபடுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ஒட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த வீட்டினை நினைவு இல்லமாக மாற்றியுள்ளது. அதில் ஒரு நூலகமும், வ. உ. சி. சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் குறிப்புக்களும் வைக்கப்பட்டுள்ளன. இதே போல திருநெல்வேலியிலும் வ. உ. சி. நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழம் முழுவதும் பல இடங்களில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு “வ. உ. சிதம்பரனார் துறைமுகம்” என்று 2011 ஆம் வருடம் பெயரிடப்பட்டது.
1972 ஆம் ஆண்டு வ. உ. சி. யின் நூற்றாண்டு விழாவின் போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அவரது உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டார். கோயம்புத்தூர் மத்திய சிறையில் வ. உ. சி. இழுத்த செக்கு, சென்னை காந்தி நினைவு மண்டபத்தில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5 – இந்திய மக்களுக்காக போராடி, சிறை சென்று, செக்கிழுத்த போதும் மனம் தளராமல் கடைசி மூச்சு வரை இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வ.உ.சி யின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது நியோதமிழ்!