இந்த வார ஆளுமை – உசைன் போல்ட் – ஆகஸ்ட் 21, 2019

0
154

உசைன் போல்ட் ஒரு தடகள வீரர். 100 மீட்டர்,  200 மீட்டர் மற்றும் 4 × 100 மீட்டர் ஓட்டங்களில் தொடர்ந்து ஜாம்பவானாக திகந்தவர். 8 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ஜமைக்கா நாட்டின் பெருமையை உலகரிய செய்தவர். கடின உழைப்பு மூலம் கனவுகள் நனவாகும் என்ற வாக்கியத்திற்கு சொந்தக்காரர்.

அதிவேகம் என்ற சொல்லுக்கு மறு பெயர்!!

பிறப்பும் இளமையும்

உசைன் போல்டின் முழு பெயர் உசைன் செயிண்ட் லியோ போல்ட். 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி தான் அவரது பிறந்த தினம். ஜமைக்கா நாட்டில் உள்ள ஷெர்வுட் கான்டென்ட் என்ற நகரத்தில் வெல்லெஸ்லி மற்றும் ஜெனிஃபர் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் போல்ட். ஆரம்பத்தில் இருந்தே கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டிய உசைன் போல்ட் அவருடைய பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் பல பதக்கங்களை வென்றுள்ளார். அவருடைய 15 ஆவது வயதில் தடகளப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.

usain bolt in fieldCredit: Youngwitness

ஆரம்ப கால சாகசங்கள்

ஜமைக்கா நாட்டின் சார்பில், 2001 கரிஃப்டா விளையாட்டுகளில் முதல் முறையாக விளையாடி 400 மீட்டர் ஓட்டத்தில் 48.28 நொடியிலும், 200 மீட்டர் பந்தயத்தில் 21.81 நொடியிலும் ஓடி வெள்ளிப்பதக்கம் வென்றார். அதே ஆண்டு ஹங்கேரியில் நடைபெற்ற உலக இளையோர் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்றாலும் 21.73 நொடி என்ற அதிவேகத்தை நிகழ்த்திக் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார்.

போல்டின் அதிவேகம் அவருக்கு பெற்று தந்த பெயர் தான் மின்னல் வேக போல்ட்!!

அவருடைய சொந்த ஊரான கிங்ஸ்டனில் நடைபெற்ற 2002 ஆம் ஆண்டுக்கான உலக இளையோர் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தை அவருடைய முந்தய வேகத்தை விட இன்னும் வேகமாக ஓடி 20.61 நொடியில் கடந்து வெற்றி பெற்றார். இளையோருக்கான தடகள போட்டியில் தங்கம் வென்ற இளம் வீரர்களுள், போல்ட் நிகழ்த்தியது தான் மிக இள வயது வெற்றி.

2003-ம் ஆண்டு நடைபெற்ற கரிஃப்டா மற்றும் உலக இளையோர் தடகளப் போட்டிகளிலும் தங்கம்வென்று அசத்தினார். 2008 ஆம் ஆண்டில் நியூயார்கீல் ஐகேன் விளையாட்டரங்கில் நடைபெற்ற ரீபாக் கிராண்ட் ப்ரீ லீக்கில், 100 மீட்டர் ஓட்டத்தில் அவருடைய சக போட்டியாளர் அஸாஃபா பவலின் 9.74 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து, வெறும் 9.72 நொடியில் ஓடி புதிய உலக சாதனை படைத்தார் போல்ட்.

usain bolt runningCredit: SI

2008 ஒலிம்பிக்

இவ்வளவு சாதனைகள் இருந்த போதும் அவரது பெருமை உலகம் முழுவதும் பரவவில்லை. அந்த பெருமையை அவருக்கு தந்தது 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி. ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் 9.69 நொடியில் ஓடி, அவருடைய முந்தய சாதனையையும் முறியடித்து அகில உலக சாதனை படைத்தார். அதே போல, 200 மீட்டர் பந்தயத்திலும், அமெரிக்க வீரர் மைக்கேல் ஜான்சனின் 12 ஆண்டு சாதனையாக இருந்த 19.32 வினாடிகள் என்பதை முறியடித்து, 19.30 நொடியில் ஓடி, புதிய உலக சாதனை படைத்தார். அடுத்து நடைபெற்ற 4 × 100 தொடர் ஓட்டப்பந்தயத்திலும் ஜமைக்கா அணியில் மூன்றாம் பகுதியை போல்ட் ஓடி, மூன்றாவது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆனால், இந்தத் தொடரில் அவருடைய சக வீரர் நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்தத் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. எனினும் உசைன் நிகழ்த்திய சாதனை மட்டும் வரலாற்று உண்மை!! விளைவு, உலகம் புகழும் பெயரானது உசைன் போல்ட்!

100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10 மீட்டர் தூரத்தை வெறும் 0.81 வினாடிகளில் கடந்து அசத்தியுள்ளார் உசைன் போல்ட்!!

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 நொடியில் ஓடி, அவரது சாதனையை மீண்டும் முறியடித்து உலக சாதனை படைத்தார். அதே போல 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பந்தயத்தூரத்தை 19.19 நொடியில் கடந்து மீண்டும் உலக சாதனை படைத்தார்.

மொத்த 100 மீட்டரையும் மின்னல் வேகத்தில் கடந்த காணொளி இதோ உங்களுக்காக…

2012 ஒலிம்பிக் சாதனை

2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில் வரிசையாக மூன்று தங்கம் வென்று அசத்தினார்.

Usain Bolt Gold medalsCredit: urbanislandz

2013-ம் ஆண்டு நடைபெற்ற “கோல்டன் காலா” மற்றும் “உலக சாம்பியன்ஷிபப்” போட்டிகளில் 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று உலக தடகளப் போட்டிகளில் உச்சங்களை தொட்டார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் பந்தயங்களின் 30 ஆண்டு வரலாற்றின் அதிக வெற்றிகளைக் பெற்ற தலைச் சிறந்த வீரர்களுள் ஒருவர் என்ற பெருமையை பெற்றார் போல்ட்.

2015-ம் ஆண்டு பெய்ஜிங் உலகப் போட்டிகளில், மீண்டும் 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று வெற்றியின் நாயகனாக வலம் வந்தார்.

2016 ஒலிம்பிக்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில் வழக்கம் போலவே மூன்று தங்கம் வென்று அசைக்க முடியாத சாதனைகளைப் படைத்தார். இதன் மூலம் மூன்று ஒலிம்பிக்கில் தொடர்ந்து தங்கம் வென்ற தங்கமகன் என்ற பெருமையை அடைந்தார். தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த முறையும் உணமையாக்கினார்.

சிறப்புகள்

பங்கிற்ற ஒவ்வொரு போட்டியிலும் தன்னை தானே வென்று புதிய புதிய வரலாறுகளை படைத்த அவரது அதிவேகம் தான், “மின்னல் வேக போல்ட்” (Lightining Bolt) என்ற பெயரை இவருக்கு பெற்று தந்தது.

அதிலும் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10 மீட்டர் தூரத்தை வெறும் 0.81 வினாடிகளில் கடந்து அசத்தியுள்ளார் உசைன் போல்ட்.

இவரின் சாதனைகளை கௌரவிக்கும் விதத்தில் IAAF, ஒவ்வொரு வருடமும் வழங்கும் “சிறந்த உலக விளையாட்டு வீரர்” பட்டத்தை 2008, 2009, 2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் பெற்றார். மேலும் பல விருதுகளை வென்றுள்ள உசைன் போல்ட் சாதனைகளின் பிறப்பிடம்!!!

usain bolt foot ballCredit: Abs-cbn

கடந்த 2017 ஆம் ஆண்டு தடகள போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த போல்ட் பல நாள் கனவாக இருந்த ஆசையை நிறைவேற்ற சிறிது காலம் கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு அண்மையில் “தன் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது என்றும், இனி வியாபாரத் துறையில் முழு கவனம் செலுத்தவுள்ளதாகவும்” போல்ட் அறிவித்தார்.

தனது கடின உழைப்பாலும், அதி வேக ஓட்டத்தாலும் உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்த உசைன் போல்டின் பிறந்த நாள் ஆகஸ்ட் 21 ம் தேதி. அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது நியோதமிழ்!