28.5 C
Chennai
Wednesday, September 30, 2020
Home இந்த வார ஆளுமை தமிழ்நாட்டு காந்தி 'தமிழ்த் தென்றல்' திரு.வி.கல்யாணசுந்தரனார் வாழ்க்கை வரலாறு

தமிழ்நாட்டு காந்தி ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கல்யாணசுந்தரனார் வாழ்க்கை வரலாறு

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

திரு.வி. கல்யாணசுந்தரனார் அவர்கள் ஒரு எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், சிறந்த சிந்தனையாளர், பத்திரிகையாளர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர். தமிழ் மொழி பற்றும், நாட்டு பற்றும் மிக்கவராக திகழ்ந்தவர். தமிழை எழுத்து நடையிலேயே பேசியவர். மேடை தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர். இந்திய விடுதலைக்கு மட்டுமல்லாமல், தொழிலாளர் முன்னேற்றம், பெண்ணுரிமை, இளைஞர் வளர்ச்சி, சமயப் பொதுமை, தமிழ் மொழி வளர்ச்சி முதலிய துறைகளில் ஈடுபட்டுப் பெரும் தொண்டாற்றியவர் இவர்.

Credit: tnpsc tamil notes

பிறப்பு

திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்கள் 1883 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி விருத்தாசல முதலியார், சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த இடம் காஞ்சிபுரத்தில் உள்ள துள்ளம் என்ற சிற்றூர். இவரது முன்னோர்கள் திருவாரூரைச் சேர்ந்தவர்கள். திருவாரூர் விருத்தாசல கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க.

கல்வி

திரு.வி.க வின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். திரு.வி.க வின் ஊரில் பள்ளிக்கூடம் இல்லை என்பதால் ஆரம்பகால கல்வியை இவரது தந்தையிடமே கற்றார். 1891 ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டையில் ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பிறகு 1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் நான்காம் வகுப்பு சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் முடங்கி உடல் நிலை சரி இல்லாமல் போனதால் அவருடைய பள்ளி படிப்பு தடைப்பட்டது. நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே பள்ளியில் சேர்ந்தார். எனினும், தவிர்க்க முடியாத காரணத்தினால் இறுதித் தேர்வினை அவரால் எழுத முடியவில்லை.

Also Read: தொடக்கக் கல்வி மட்டுமே படித்து பின்னாளில் பல துறைகளில் புதுப்புது கண்டுபிடிப்புகளை தந்த ஜி.டி. நாயுடு கதை!

“ஆண் எனும் அரக்கனாக வாழ்வதினும், பெண் எனும் தெய்வமாக வாழ்வதில் எனக்கு விருப்புண்டு” – திரு.வி.க.

ஆனாலும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட திரு.வி.க வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் தமிழ் நூல்களை முறையாக கற்று தமிழில் சிறந்த புலமை பெற்றார். கதிரவேற்பிள்ளையின் மறைவிற்கு பின்னர் திரு.வி.க, மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களைக் கற்றார். பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களும், மருவூர் கணேச சாஸ்திரிகளிடம் சிவகீதையும், அப்துல் கரீமிடம் திருக்குரானும் கற்றார். ஜஸ்டிஸ் சர்.டி.சதாசிவராவ் தொடர்பால் ஆங்கில அறிவும் பெற்றார். இப்படி பல நூல்களை கற்று தனது அறிவைப் பெருக்கினார்.

Also Read:நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 10 தமிழ் கிளாசிக் புத்தகங்கள்!

பணிகள்

1906 ஆம் ஆண்டு ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்தார் திரு.வி.க. அந்த சமயத்தில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் விடுதலை கிளர்ச்சி பேச்சுக்களை கேட்டு சுதந்திர போராட்டத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டால் அந்த வேலையை விட்டு நீங்கினார்.
1909 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். 1917 ஆம் ஆண்டு நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்தும் விலகி தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் நவசக்தி இதழின் ஆசிரியராக இருபது ஆண்டுகள் பணியாற்றினார்.இந்த பத்திரிக்கைகள் வாயிலாக தன் கொள்கைகளை பரப்பி மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார். இதனால் திரு.வி.க.வை, “தென்னாட்டுக் காந்தி” என்று தமிழ் மக்கள் போற்றினர். தமிழ்த்தென்றல் என்றும் திரு.வி.க அழைக்கப்படுகிறார்.

காந்தியடிகள் மீது பற்று

1919 ஆம் ஆண்டு தான் திரு.வி.க அவர்கள் மகாத்மா காந்தியடிகளை முதன்முதலாகச் சந்தித்தார். அதன் பிறகு காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தார். திரு.வி.க., காந்தியடிகளின் மேல் இருந்த பற்றால் அவரது வரலாற்றைச் சுருக்கமாகப் பத்திரிகைக் கட்டுரையாக எழுதி, சிறு நூலாக வெளியிட்டு, பின்னர் பெரு நூலாக “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்” என்ற பெயரில் 1926 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

Credit: wikipedia

தொழிற்சங்கம்

1918 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் தொடங்கியாவர் திரு.வி.க தான். சென்னைத் தொழிலாளர் சங்கம் என அதற்குப் பெயரிட்டு அதன் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார். இதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். போலீஸ் சங்கம், அச்சகத் தொழிலாளர் சங்கம், இரயில்வே தொழிலாளர் சங்கம் தோன்றக் காரணமானார்.

எழுதிய நூல்கள்

திரு.வி.க அவர்கள் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு பல நூல்களை எழுதினார்.
அவருடைய தமிழாசிரியர் நா. கதிரவேல் பிள்ளையின் மறைவுக்குப் பின், அவர் வாழ்க்கை வரலாற்றை “நா. கதிரவேல் பிள்ளை சரித்திரம்” என்ற பெயரில் எழுதியுள்ளார். “பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை”, “இந்தியாவும் விடுதலையும்”, “திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்”, “பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி”, “உள்ளொளி” ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

முருகன் அல்லது அழகு, சைவத்திறவு, சைவத்தின் சமரசம், கடவுட் காட்சியும் தாயுமானவரும், இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார் வரலாறு, தமிழ் நூல்களில் பெளத்தம், சீர்திருத்தமா?, தமிழ்ச் சோலை போன்ற உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளார்.

“திரு.வி.க அவர்கள், தமிழ்நாட்டுக் காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கினார்” – கல்கி

மேலும் திரு.வி.க., குசேலோபாக்கியானம், திருநாவுக்கரசர் தேவாரம், காரைக்காலம்மையார் திருமுறை ஆகியவற்றுக்குக் குறிப்புரை எழுதி அவற்றை வெளியிட்டுள்ளார். உலக பொதுமறையான திருக்குறளில் முதல் 100 குறள்களுக்கு நவசக்தி இதழில் தொடர்ந்து விரிவுரை எழுதி திரு.வி.க., அவற்றை “பாயிரம்’, “இல்லறவியல்’ என்று பிரித்து வெளியிட்டுள்ளார். இவரது எழுத்தாற்றல் தான் இவரது தமிழ் நடைக்கு “திரு.வி.க. நடை‘”என்ற பெயரை பெற்று தந்தது.

தமிழ் மொழிப் பற்று

தாய் மொழியான தமிழ் மீது அதீத பற்று கொண்ட திரு.வி.க, வடமொழிச் சொற்கள் இல்லாமல் தூய தமிழிலேயே பேசவும் எழுதவும் வேண்டும் என வற்புறுத்தினார். அதனை நடைமுறையில் பின்பற்றவும் செய்தார். அதே சமயம் தமிழை வளர்க்க வேண்டும் என்றால், பிறமொழியை வெறுக்க வேண்டும் என்று பொருள் இல்லை என்ற கொள்கை கொண்ட இவர் ஆங்கில மொழியிலும் புலமை பெற்றிருந்தார்.

உரைநடை, சொற்பொழிவு, பத்திரிகைக் கட்டுரை, கவிதை, உரை, பதிப்பு முதலான பல்வேறு துறைகளின் வாயிலாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அயராமல் பாடுபட்டவர் திரு.வி.க. புதிய உரைநடையின் தந்தை என்றும் தமிழ் மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டவர். இவரது உணர்ச்சிமிகு பேச்சுக்கு அப்போது இளைஞராக இருந்த அறிஞர் அண்ணா ரசிகராக இருந்தார்.

திருமண வாழ்க்கை

1912 ஆம் ஆண்டு அவருக்கு கமலாம்பிகை என்பவருடன் திருமணம் நடந்தது. இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918 ஆம் ஆண்டு ஆண்டு அவரது மனைவி எலும்புருக்கி நோயால் காலமானார். அதன் பிறகு அவரது உறவினர்கள் மறுமணத்திற்கு வற்புறுத்திய போதும் அதனை தவிர்த்து பெண்ணின் பெருமை இவ்வுலகில் சிறக்க தனது எழுத்துக்கள் வாயிலாக அரும்பாடு பட்டார். அவரது நுால்களில் எல்லாம் பெண்களின் பெருமையை பற்றி எழுதினர்.

Also Read:பெற்றோர் சண்டையிடுவதால் குழந்தைகளுக்கு இவ்வளவு பிரச்சினைகள் வருமா?

இறப்பு

1943 ஆம் ஆண்டு திரு.வி.க விற்கு மணிவிழா எடுக்கப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார்.வாழ்நாள் முழுவதும் எளிமையாக மட்டுமே வாழ்ந்த திரு.வி.க அவர்கள் இறுதி நாட்களில் சர்க்கரை வியாதியால் கண்பார்வை இழந்து, 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி காலமானார்.

திரு. வி. க வை கவரவிக்கும் வகையில் 2005 ஆம் ஆண்டு இந்திய அரசு அவரது உருவப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை வெளியிட்டது.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -