தமிழ் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் எம். என். நம்பியார். நாயகன், நாயகனின் நண்பன், காமெடியன், வில்லன், குணசித்திரம் என்று பலவிதக் கதாபாத்திரங்களில் நடித்தவர். எனினும் வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் சிறந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர் நம்பியார்.
Credit: Infoqueenbee
பிறப்பு
எம். என். நம்பியார் அவர்கள் 1919 ஆம் வருடம் மார்ச் 7 ஆம் தேதி கேரளாவில், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பெருவமூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் கேளு நம்பியார் மற்றும் லட்சுமி அம்மாள். எம். என். நம்பியார் பெயரில் உள்ள எம் என்பது அவரது தந்தையின் இல்ல பெயரான மஞ்சேரி என்பதையும், என் என்பது அவரது பெற்றோர் அவருக்கு வைத்த நாராயணன் என்ற பெயரையும் குறிக்கும்.நம்பியாரின் எட்டாவது வயதில் அவரது தந்தை இறந்த பின்பு அவரது குடும்பம் உதகமண்டலத்திற்கு குடிபெயர்ந்தது. அங்கிருந்த நகராட்சி பள்ளியில் நம்பியார் தொடக்க கல்வி கற்றார்.
நம்பியாரின் முதல் திரைப்படம் 1935 ஆம் ஆண்டு வெளியான “பக்த ராம்தாஸ்”
நாடகத்துறை
பொருளாதார பிரச்சனைகளால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனதால் நம்பியார் அவருடைய 13 ஆம் வயதிலேயே நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடக குழுவில் சேர்ந்தார்.நாடகங்களைக் கண்டு கலை ஆர்வம் கொண்டிருந்த நம்பியாருக்கு அந்த குழுவில் முதலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நாடகக் நிறுவனத்தின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார்.இதனால் நாடகக் குழுவுடன் சேலம், மைசூர், தஞ்சை என பல இடங்களுக்கு நம்பியாரும் செல்ல வேண்டி இருந்தது. இந்த நாடகக் குழுவில் ஏற்பட்ட உணவுப் பழக்கத்தால் சிறுவயது முதலே சைவ உணவுக்குப் தன்னை பழகிக்கொண்டார் நம்பியார். மேலும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நடிப்புடன் வாய்ப்பாட்டும் ஆர்மோனியமும் கற்றுக்கொண்டார். பல முயற்சிகளின் பலனாய் நம்பியாருக்கு அவருடைய 15 ஆம் வயதில் “நச்சுப் பொய்கை” என்ற நாடகத்தில் பெண் நீதிபதி வேடம் கிடைத்தது.
திரைத்துறை
நவாபின் “ராம்தாஸ்” என்ற நாடகத்தை 1935 ஆம் ஆண்டு “பக்த ராம்தாஸ்” என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். நாடகத்தில் நடித்த அனைவருமே படத்திலும் நடிக்க, நடிகைகளே இல்லாத அந்தப் படத்தில் நகைச்சுவை வேடத்தில் மாதண்ணா என்ற கதாபாத்திரத்தில் நாற்பது ருபாய் சம்பளத்துடன் நடித்தார் நம்பியார்.இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும்.
அப்போது நவாப் குழுவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தவர் கே.சாரங்கபாணி. சில காரணங்களால் அவர் நாடகத்தை விட்டு விலகியதால் , அவர் ஏற்ற அனைத்து நகைச்சுவை வேடங்கள் நம்பியாருக்கு கிடைத்தன.
Credit: The Hindu
நம்பியார் அவருடைய 23 ஆம் வயதில் நவாப் குழுவிலிருந்து விலகி டி. கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கே “கவியின் கனவு” நாடகத்தில் ராஜகுரு வேடம் ஏற்று, அவருடைய முதல் வில்லன் நடிப்பை மேடையில் வெளிப்படுத்திப் புகழ்பெற்றார்.
ஓவியர் மாதவனின் பரிந்துரையுடன் ஜுபிடர் பிக்சர்ஸில் கம்பெனி நடிகராகச் சேர்ந்த நம்பியாருக்கு ஜுபிட்டர் பிக்சர்ஸின் நான்கு படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் விளைவாக முதல் படத்தில் நடித்த 9 ஆண்டுகளுக்குப் பின் நம்பியார் நடித்த படம் தான் 1946 ஆம் ஆண்டு வெளியான “வித்யாபதி”. இந்த படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட நாராயண பாகவதர் என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்துக்காக மொட்டை அடித்துக்கொண்டார் நம்பியார். 1947 ஆம் ஆண்டு “ராஜகுமாரி” படத்தில் தான் முதன் முதலில் எம். ஜி. ராமச்சந்திரனுடன் (M.G.R) இணைந்து நடித்தார். இந்த படத்தில் வில்லனாக இல்லாமல் நகைச்சுவை சாகசக் கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் விளைவாக ஐந்து படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நம்பியார்.
சிறந்த வில்லன்
சர்வாதிகாரியாக மகாவர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நம்பியாரை அடக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்த “சர்வாதிகாரி” படம் நம்பியார் வாழ்வில் பெரும் திருப்பமாக அமைந்தது. அது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் அதன் பிறகு எம்.ஜி.ஆர் கதாநாயகன் என்றால் நம்பியார் தான் வில்லன் என்ற நிலை உருவானது. இந்த ஹீரோ – வில்லன் கூட்டணியில் உருவான பல படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தன. அதே சமயம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற பிற கதாநாயகர்களுக்கும் வில்லனாக நடித்து வெற்றியும் கண்டார் நம்பியார். அதன் பிறகு எத்தனையோ வில்லன் நடிகர்கள் வந்த போதும் எம்.என்.நம்பியாரின் இடத்தை யாராலும் கைப்பற்ற முடியவில்லை என்பதே உண்மை.
வில்லாதி வில்லனாகப் புகழ்பெற்றிருந்தாலும் பாசமலர், ரகசிய போலீஸ் 115, கண்ணே பாப்பா போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து அசத்தினார் நம்பியார்.
ஐயப்ப கடவுள் மேலிருந்த பக்தியால் தொடர்ந்து 65 ஆண்டுகள் சபரிமலைக்குப் புனித யாத்திரை சென்று வந்தவர் நம்பியார்!
திருமணம்
1946 ஆம் ஆண்டு நம்பியார் அவரது உறவு பெண்ணான ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நம்பியாரும் எம்.ஜி.ஆரும் நண்பர்கள் என்பதால் இந்த திருமணத்தில் நம்பியாருக்கு மாப்பிள்ளைத் தோழனாக எம்.ஜி.ஆர் இருந்தார். இவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். பாஜகவில் முக்கிய தலைவராக இருந்து மறைந்த சுகுமாரன் நம்பியார் இவரது மூத்த மகனாவார்.
Credit: Deccanchronicle
பக்தி
நம்பியார் சிறந்த ஐயப்ப பக்தராக இருந்தார். தனது நாடக குரு நவாப் ராஜமாணிக்கத்துடன் 1942-ல் முதல் முறை சபரிமலைக்குச் சென்றார். அதன் பின்னர் ஐயப்ப கடவுள் மேலிருந்த பக்தியால் தொடர்ந்து 65 ஆண்டுகள் சபரிமலைக்குப் புனித யாத்திரை சென்று வந்தார். மேலும் பல திரையுலகப் பிரபலங்களுக்குக் குருசாமியாக இருந்து சபரிமலைக்கு அழைத்துச் செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
சிறப்புகள்
தமிழில் மட்டும் இல்லாமல் , “ஜங்கிள்” என்ற ஆங்கிலப் படத்திலும், “கணவனே கண்கண்ட தெய்வம்” படத்தின் இந்தி மொழி பதிப்பிலும் நடித்த நம்பியார் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நாடகத்துறையை மறக்காத நம்பியார் தனது “நம்பியார் நாடக மன்றம்” மூலம் “கவியின் கனவு”, “கல்யாண சூப்பர் மார்க்கெட்” ஆகிய இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார். திகம்பரசாமியார் எனும் வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்துள்ளார் நம்பியார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பங்கை பாராட்டி தமிழக அரசு 1968 ஆம் ஆண்டு கலைமாமணி விருதையும், 1990 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் விருதையும் இவருக்கு வழங்கியது.
மறைவு
உடல் நலமின்மையால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நம்பியார் அவர்கள் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி அவருடைய 89 ஆம் வயதில் காலமானார்.
மார்ச் 7 ஆம் தேதி நம்பியார் அவர்களின் நூறாவது பிறந்தநாளை நியோதமிழ், இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது.