இந்த வார ஆளுமை – டி.எம்.சௌந்தரராஜன் – மார்ச் 24, 2019

0
346
T. M. Soundararajan
credit :bollywood cat
டி.எம்.எஸ் என்று அழைக்கப்படும் டி. எம் சௌந்தரராஜன் அவர்கள் தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் பலருக்கு பின்னணி பாடல்கள் பாடியவர். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, பல பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். டி.எம்.எஸ்.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
T. M. Soundararajan
credit: variety

பிறப்பும் ஆரம்ப வாழ்க்கையும்

டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் 1922 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். டி.எம்.எஸ் அவர்களுக்கு இளம் வயதிலேயே இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. அதனால் கர்நாடக சங்கீதத்தை மதுரையிலுள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியராக இருந்த சின்னகொண்டா சாரங்கபாணி பாகவதர் என்பவரிடம் கற்றார். அதன் பிறகு காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார். அவருடைய 21 ஆவது வயது முதல் கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார்.

திரையுலக வாழ்க்கை

தொடர்ந்து பல ஆண்டுகள் கச்சேரிகளில் பாடிய டி.எம்.எஸ்ஸின் குரல் சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குனரை மிகவும் கவர்ந்தது. அதனால் அவரது படமான “கிருஷ்ண விஜயம்” என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு டி.எம்.எஸ்ஸை ஒப்பந்தம் செய்தார். இந்தப் படம், 1946 ஆம் ஆண்டே எடுக்கப்பட்டிருந்தாலும், 1950 ஆம் ஆண்டு தான் வெளியானது. அந்த படத்தில் ஐந்து பாடல்களை டி.எம்.எஸ். பாடினார். அதே 1950 ஆம் ஆண்டு டி.எம்.எஸ் “மந்திரி குமாரி” படத்தில், “அன்னமிட்ட வீட்டிலே” என்ற பாடலைப் பாடினார். 1951ல் வெளியான “தேவகி” என்ற படத்தில் வந்த “தீராத துயராலே” என்ற பாடலைப் பாடி, நடிக்கவும் செய்திருந்தார். மேலும் கே.வி. மகாதேவனுடன் இணைந்து பக்திப் பாடல்களைப்  பாடினார்.
T. M. Soundararajan
credit :bollywood cat
சிவாஜி கணேசன் குரலில் டி.எம்.எஸ் பாடியதை கேட்ட இசையமைப்பாளார் ஜி.ராமநாதன் அவர்கள் சிவாஜி நடித்த “தூக்கு தூக்கி” படத்தின் பாடும் வாய்ப்புகளை வழங்கினார். அதன் பிறகு எம்.ஜி,ஆர் நடித்த “கூண்டுக்கிளி” படத்தில் டி.எம்.எஸ் பாடிய “கொஞ்சும் கிளியானப் பெண்ணை” பாடல் எம்.ஜி,ஆரை பெரிதும் கவர்ந்தது. அதனால் அவரது அடுத்த படமான “மலைக்கள்ளன்” திரைப்படத்தில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்” என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை வழங்கினார். அதன் பிறகு தமிழ்த்திரையுலகின் இருபெரும் தூண்களாக விளங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்கள் என்றாலே அது டி.எம்.எஸ் குரலில் தான் வெளிவந்தது. அதே சமயம் அவர்கள் குரலுக்கு ஏற்றபடி அழகாக பின்னணி பாடினார். மேலும் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் என பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான தனித்தனி குரலில் பாடும் தனித்துவம் பெற்றிருந்தார்.

நடிப்புத் திறமை

1962 ஆம் ஆண்டு வெளியான “பட்டினத்தார்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்தார். “அருணகிரிநாதர்” திரைப்படத்தில் நடித்து முருகக் கடவுள் மீது இவர் பாடிய ‘முத்தைத் திருபத்தித் திருநகை’ எனும் பாடல் மிகவும் புகழ்பெற்றது. மேலும் “கல்லும் கனியாகும்”,”கவிராஜ காலமேகம்” போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக உருவாக்கிய “செம்மொழியான தமிழ்மொழியாம்” பாடல் தான் டி.எம்.எஸ் பாடிய கடைசி பாடலாகும்.

திருமணம்

டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், 1946 ஆம் ஆண்டு அவருடைய இருபத்தி நான்காம் வயதில், சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர்.
T. M. Soundararajan
creedit :tmsmurugan

மறைவு

இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த டி.எம். சௌந்தரராஜன் 2013 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி காலமானார். அவர் மறைந்தாலும் அவரது குரல் காலத்துக்கும் அழியாமல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

விருதுகள்

டி.எம். சௌந்தரராஜன் பல விருதுகளைப் பெற்றுள்ளார். பாடகர் திலகம், சிங்கக் குரலோன், இசை சக்கரவர்த்தி, இசைக்கடல், எழிலிசை மன்னர், குரலரசர் என பல பட்டங்களைப் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு  இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதே போல தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். மேலும் பாரத் கலாச்சார் விருது, சௌவுராஷ்டிரா சமூக அங்கீகாரம் விருது, வாழ்நாள் சாதனையாளர் எம்.ஜி.ஆர் நினைவு விருது, வாழ்நாள் சாதனையாளர் சிவாஜி நினைவு விருது மற்றும் 2012 ஆம் ஆண்டு கைராலி ஸ்வராலயா யேசுதாஸ் விருது எனப் பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ ‘டாக்டர்’ பட்டம் அளித்து கௌரவித்தது. இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த பத்து கலைஞர்களுக்கு மத்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே தென்னிந்திய கலைஞர் என்று பெருமை பெற்றவர் டி.எம்.எஸ் தான்.
T. M. Soundararajan
credit: exclusivecoins
நேற்று மார்ச் 24 ஆம் தேதி டி.எம். சௌந்தரராஜனின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக எழுத்தாணி கொண்டாடி மகிழ்கிறது.