28.5 C
Chennai
Friday, February 23, 2024

சுப்பிரமணியன் சந்திரசேகர்: விண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கதை!

Date:

சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள் இந்தியாவை சேர்ந்த வானியில் விஞ்ஞானி. எளிதாக புரியும் படி துல்லியமான ஆராய்ச்சி முடிவுகளை வழங்கிய இயற்பியலாளர். 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். தனது இருபத்தி ஏழாம் வயதிலேயே மிகச்சிறந்த விண்ணியற்பியல் அறிஞர் என்று பாராட்டப்பட்டவர்!

Subrahmanyan Chandrasekhar
Credit: Aljazeera

தோற்றம்

சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், 1910 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லாகூரில் (தற்போதய பாகிஸ்தான்) சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். இவரது தாயார், உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர். இவருக்கு ஆறு சகோதர்கள், மூன்று சகோதரர்கள் இருந்தனர். நோபல் பரிசு பெற்ற புகழ் பெற்ற விஞ்ஞானியான, சர். சி. வி. ராமன் அவரகள் இவருடைய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பத்தொன்பதாம் வயதிலேயே ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளிட்டுள்ளார்!!

இளமையும் கல்வியும்

இவருடைய குழந்தை பருவம் லாகூரில் ஐந்து வருடம் மற்றும் லக்னோவில் இரண்டு வருடங்கள் என கழிந்தது. அதன் பிறகு குடும்பம் சென்னைக்கு குடிபெயர அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தான் தொடங்கியது. சந்திரசேகர் தனது பதினோராம் வயதில் சென்னையில் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். பின்னர் மாநிலக் கல்லூரியில் மேல்நிலை கல்வியைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் 1927 ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் B.A இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

1928 ஆம் ஆண்டு ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் என்ற ஜெர்மனிய இயற்பியலாளர் இந்தியா வந்திருந்த பொழுது, சென்னை மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கெனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர் அவர்கள், அவரை சந்தித்து, இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய புதிய ஆராய்ச்சிகளை பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். இந்த அனுபவம் அவருக்கு இயற்பியலில் இன்னும் ஆர்வத்தை அதிகரித்தது. அதே சமயம் 1930 ஆம் ஆண்டு சந்திரசேகரின் சித்தப்பா சர் சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்றது, சந்திரசேகரின் இயற்பியல் ஆராய்ச்சிக்கு இன்னும் உத்வேகமூட்டியது.

சுப்பிரமணியன் சந்திரசேகர் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

அதனால் ஆராய்ச்சிகள் பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் கவனமும் செலுத்தினார். விளைவு அடுத்த ஆண்டே தன்னுடைய ஆராய்ச்சியின் முதல் கட்டுரையை வெளிட்டார். அது பற்றி சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும் அதற்கடுத்த ஆண்டு வரிசையாக இரண்டு கட்டுரைகளை வெளியிட்டார். வெறும் பத்தொன்பது வயதில் இவர் வெளியிட்ட இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் இந்திய அரசின் நன்மதிப்பு அவருக்கு கிடைத்தது. 1930 ஆம் ஆண்டு பண உதவி பெற்று மேல் படிப்பிற்காக இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.

Subrahmanyan Chandrasekhar Teaching
Credit: sciencephoto

பேராசிரியர் ஆர். எச். ஃபவுலர் என்பவற்றின் கீழ் ஆராய்ச்சி மாணவராகத் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார் சந்திரசேகர். 1933 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற போது லண்டன் ராயல் சொசைட்டி இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாயின. பிறகு ட்ரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சிப் பேராசிரியராக சேர்ந்தார். அங்கு தான் உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுனராக விளங்கிய பேராசிரியர் ஆர்தர் எடிங்டன் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

விண்மீன்கள் ஆராய்ச்சி

பின்னர், இங்கிலாந்து சென்று மீண்டும் தன்னுடைய ஆய்வு பணிகளை தொடர்ந்த அவர், விண்மீன்களின் கட்டமைப்பு பற்றி பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தம்முடைய ஆராய்ச்சிகளைப் பற்றி பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்றினார். பிறகு, 1937 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர் பணி அவரைத் தேடி வர மிகுந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்கா சென்று பணியைத் தொடர்ந்தார். அங்கு மாணவர்களுக்குக் கல்வி கற்பித்ததுடன் ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். மேலும் இதுவரை தாம் செய்த ஆய்வுகளைத் தொகுத்து “நட்சத்திரங்களின் அமைப்பு” என்ற நூலையும் வெளியிட்டார். 1951 முதல் 1971 வரை வானியல் இதழ் ஒன்றின் மேலாய்வாளராகவும் இருந்துள்ளார்.

சந்திரசேகர் வரையறை

சந்திரசேகர் அவர்கள் தனது 19 ஆவது வயதில் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தையும் குவாண்டம் கோட்பாட்டையும் பயன்படுத்தி ஒரு வானியல் கோட்பாட்டை உருவாக்கினார். வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடையுடன் இருப்பதால், அதன் உட்கரு அணு வினைகள் காரணமாக அணுகுண்டு போல வெடித்து பிரகாசமான “சூப்பர் நோவா” என்ற நட்சத்திரங்களைத் தோன்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார்.

அதே போல பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்பதையும் கண்டுபிடித்தார். இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல் குறித்து புரிந்து கொள்ளமுடிந்தது.

அவர் கண்டறிந்த மற்றுமொரு முக்கியமான கருத்து, நட்சத்திரங்களின் வாழ்நாள் பற்றியது. விண்வெளியில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் இறுதிக் காலம் என்பது அந்த நட்சத்திரம் எவ்வளவு பொருள் நிறையைக் கொண்டது என்பதைப் பொறுத்து அமைகிறது என்பதாகும். மிக அதிகமான பொருள் நிறையை கொண்டுள்ள நட்சத்திரங்கள் தங்களின் இறுதிநாளில் அதன் உள்ளார்ந்த செயல்பாடுகளால் நொறுங்கி, நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ (Neutron Star) அல்லது கருந்துளைகளாகவோ (Black Hole) மாறுகின்றன.

1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் சந்திரசேகர்!!

பொருள் நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள் நிறை உள்ள நட்சத்திரங்கள் எடுத்துக்காட்டாக சூரியனை விட ஏறத்தாழ எட்டு மடங்கு பொருள் நிறை குறைவாக உள்ள நட்சத்திரங்கள் வெள்ளைக் குள்ளன் (White Dwarf) என்னும் ஒரு அடர்த்தியான நிலையை அடைகின்றன.

Subrahmanyan Chandrasekhar receives the National Medal of Science

Credit: Uchicago news

சரி. அந்த அதிக நிறை என்பது என்ன அளவு என்பதையும் சந்திரசேகர் விளக்கியுள்ளார். சூரியனின் நிறையைப் போல 1.44 மடங்கு நிறை கொண்ட நட்சத்திரம் கண்டிப்பாக வெள்ளைக் குள்ளனாக மாற முடியாது. அது நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ (Neutron Star) அல்லது கருந்துளைகளாகவோ மாறும் என்று விளங்கியதோடு இந்த கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு வரையறையையும் அவர் வழங்கினார். இதுவே “சந்திரசேகர் வரையறை” ஆகும். இவரது இந்த வரையறை தான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றிய ஆய்வில் இன்றும் வழிகாட்டியாக இருக்கிறது.

இந்த ஆய்வுக்காக இவருக்கும் வில்லியம் பவுலர் என்பவருக்கும், 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சுப்பிரமணியன் சந்திரசேகர் எழுதிய நூல்கள்

விண்மீன் அமைப்பில் அறிமுக ஆய்வு (An Introduction to the Study of Stellar Structure), விண்மீன் இயக்கக் கோட்பாடுகள் (Priciples of Stellar Dynamics), கருந்துளைகளின் கணித நியதி (Mathematical Theory of Black Holes), பொதுவான வாசகருக்கு நியூட்டன் கோட்பாடு (Newton’s Principia for the Common Reader) உள்ளிட்ட பல நூல்களை சந்திரசேகர் எழுதியுள்ளார்.

Subrahmanyan Chandrasekhar

நோபல் பரிசு பெற்ற பின்பு சந்திரசேகர் பத்திரிக்கயாளர்களை சந்திக்கும் படம் | Credit: Thoughtco

மறைவு

ஒரு ஆராய்ச்சியாளராக மட்டுமல்லாமல், சிறந்த ஆசிரியராகவும் வாழ்ந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி இதய பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் தன்னுடைய 84 ஆவது வயதில் காலமானார்.

சிறப்புகள்

லண்டன் ராயல் சொஸட்டியின் உறுப்பினராக சந்திரசேகர் 1944 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். மேலும் 1952 பசிபிக் விண்ணியல் கழகத்தின் புரூஸ் பதக்கம், 1957 ஆம் ஆண்டு அமெரிக்க அறிவியல் கழகத்தின் ரம்ஃபோர்டு பதக்கம், 1966 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் பதக்கம், 1968 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்ம விபூஷண் விருது, 1984 ஆம் ஆண்டு ராயல் சொûஸட்டியின் காப்லே பதக்கம் உள்ளிட்ட உலக அளவிலான பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது நினைவாகப் பெயர்கள் சூட்டப் பட்டுள்ளன.

அக்டோபர் 19 – இயற்பியல் மற்றும் வானியலில் இருந்த மிகுந்த ஆர்வத்தால் இளம் வயதிலேயே விஞ்ஞானியாக ஆராய்ச்சிகள் செய்து, உயரிய விருதான நோபல் பரிசை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகரின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!