நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரு சுதந்திர போராட்ட தலைவர். வெளிநாடுகளில் போர் கைதிகளாக இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் வீரத்தினை உலகறிய செய்தவர்.
பிறப்பு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஒரிசா (தற்போதைய ஒடிசா) மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஜானகிநாத் போஸ் – பிரபாவதி தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தார்.
சுபாஷ் சந்திர போஸ் 1920 ஆம் ஆண்டு நடந்த ஐ.சி.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்ச்சி பெற்றார்!

கல்வி
1902 ஆம் ஆண்டு போஸ் கட்டாக்கில் இருந்த பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்ப பள்ளியில் கல்வி கற்கத் தொடங்கினார். சிறுவயதில் இருந்தே அவருக்கு படிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் பயின்ற போஸ் இறுதி தேர்வில் இரண்டாவது இடத்தை பிடித்தார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை தொடர்ந்து படித்து வந்த போஸுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்பட்டது. முதலில் துறவறத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பிய போஸ் பின்னர் அவரது தந்தையின் அறிவுரையை ஏற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்து படித்தார். அங்கு ஆங்கிலேய இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியர் சி.எப். ஒட்டன் இந்தியர்களை அவமதித்து வந்ததால் ஏற்பட்ட சண்டை காரணமாக போஸும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடர முடியாதபடி செய்யப்பட்டனர். 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்த போஸ், இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார். பெற்றோரின் விருப்பப்படி லண்டன் சென்று ஐ.சி.எஸ் படித்து 1920 ஆம் ஆண்டு நடந்த ஐ.சி.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு
1919 ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, போஸை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடச் செய்தது. இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த மக்கள் மீது ஆங்கில அரசு தாக்குதல் நடத்தி கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், ஆங்கிலேயர் ஆட்சி மீது போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. இதனால் லண்டனில் தான் படித்துப் பெற்ற பணியை ராஜினாமா செய்தார். 1921 ஆம் ஆண்டு இந்தியா வந்த போஸ், சி.ஆர் தாஸ் என்பவரை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். போஸின் திறமையை நன்கு அறிந்திருந்த சி.ஆர் தாஸ் தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக 25 வயதே நிரம்பிய போஸை நியமித்தார்.
அரசியல்
1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. ஆனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது. அப்போது கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக போஸ் பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பொதுக் கூட்டங்களுக்கு தடைவிதித்திருந்த ஆங்கில அரசு போஸின் தலைமையிலான தொண்டர் படையை சட்ட விரோதமானது என அறிவித்து, போஸையும் சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் கிடைத்தது. 1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாஸும் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டு மக்கள் ஆதரவையும் பெற்றனர்.
ரவீந்திரநாத் தாகூர் போஸிற்க்கு ‘நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார்
கருத்து வேறுபாடு
சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்த சி.ஆர் தாஸ், சுயாட்சிக் கட்சியை தொடங்கினார். மேலும் சுயராஜ்ஜியா என்ற பத்திரிக்கையையும் தொடங்கி போஸின் தலைமையின் கீழ் முழு பொறுப்பையும் ஒப்படைத்தார்.

1938 ஆம் ஆண்டு போஸ், காங்கிரஸ் தலைவரானதும், ரவீந்திரநாத் தாகூர் போஸை அழைத்துப் பாராட்டு விழா நடத்தி ‘நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார்.”மரியாதைக்குரிய தலைவர்” என்பது இதன் அர்த்தம். 1939 இல் போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு 1,580 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்த பட்டாபி சீதாராமையாவின் தோல்வி தனக்கு பெரிய இழப்பு என்று காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால் அவரைச் சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1939 ஆம் ஆண்டு அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியை தொடங்கினார்.
சிறையிலிருந்து வெளியேற்றம்
இரண்டாவது உலகப்போர் ஏற்பட்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் ஆங்கிலேய அரசு கோரியது. ஆனால், நேதாஜி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஆம் ஆண்டு நேதாஜியை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. முதலில் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நேதாஜி பின்பு சிறையிலிருந்து தப்பி செல்ல முடிவெடுத்தார். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேடி மாறுவேடத்தில் சிறையிலிருந்து தப்பித்தார். இத்தாலி செல்ல வேண்டும் என திட்டமிட்ட நேதாஜிக்கு ஹிட்லரிடம் இருந்து அழைப்பு வர, ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்துப் பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.
இந்திய தேசிய ராணுவம்
1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கினார். ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோவையும் பெர்லினில் இருந்து தொடங்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். பிறகு ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்ததும் ஜப்பான் சென்று உதவி கேட்டார். சிங்கப்பூரில் ராஷ் பிகாரி போஸ் தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவிர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 அக்டோபர் 21 ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். பர்மாவில் இருந்த படியே இந்திய தேசிய ராணுவப் படையை கொண்டு 1944ல் ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின் வாங்கியது. எனினும் போஸ் மனம் தளரவில்லை. ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைப்படுத்தும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார்.
திருமணம்
இந்தியாவின் விடுதலைக்கு உதவி பெற வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்தார். திருமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவில் இருந்த போஸ் 1934 ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலியை சந்தித்தார். 1937 டிசம்பர் 27 ஆம் தேதி எமிலியை திருமணம் செய்து கொண்டார்.
பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்ததும் முக்கியமான வரலாற்று நிகழ்வு. பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த நேதாஜி இந்திய ராணுவ படையில் பெண்களுக்கென ஜான்சி ராணி படையைத் தொடங்கினார்.
இறப்பு குறித்த சர்ச்சை
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்கு சென்று 1970 களில் இறந்துவிட்டதாகவும், ஒரு துறவியின் வடிவில் இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் நிலவுகின்றன. பல கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் இறப்பு இன்றும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.
ஜனவரி 23 நேதாஜி அவர்களின் பிறந்த நாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.