இராமானுஜன் தமிழகத்தை சேர்ந்த கணித மேதை. தூக்கத்தில் கூட கணிதத்தை நேசித்தவர். பூச்சியத்திற்கும் மதிப்பு உண்டு என்று கூறியவர். 1914 முதல் 1918 வரை 3000கும் மேற்பட்ட புதுத் தேற்றங்களை கண்டறிந்தவர். இவர் கண்டறிந்த தேற்றங்கள், உண்மைகள் தான் இன்றும் பல துறைகளில் பயன்பட்டு வருகின்றன.

இராமானுஜன் இளமைப் பருவம்
இராமானுஜன் அவர்கள் சீனிவாசன் – கோமளம் தம்பதியினருக்கு மகனாக 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருக்குப் பின் பிறந்த மூன்று குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில், இவரும் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமலே இருந்தார். முதலில் காஞ்சிபுரத்தில் தொடக்க கல்வியில் சேர்ந்தார். பின் அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு குடியேற அங்கு ஒரு பள்ளியில் தொடக்க கல்வி பயின்றார். அப்போதே அவருக்கு கணிதத்தின் மேல் அதிக ஈடுபாடு இருந்தது. அவரது குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்த போதும் தொடக்க கல்வியில் முதலிடம் பெற்றார்.
கணித ஆர்வம்
இராமானுஜன் அவரது 13 வயதிலேயே லோனி (S.L Lony) என்பவர் எழுதிய முக்கோணவியல் (Trigonometry) புத்தகத்தையும் 15 வயதில் ஜி.எஸ் கார் (G.S Carr) என்பவர் எழுதிய கணித புத்தகத்தையும் (Carr’s Synopsis) படிக்க ஆரம்பித்தார். அவை இவரது கணித ஆர்வத்தை மேலும் தூண்டின. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. ஆனால் அவற்றில் பலவற்றுக்கு நிரூபணங்கள் இல்லை. இராமானுஜன் அந்த தேற்றங்களுக்கு நிரூபணங்களை கண்டறிந்தார். அதோடு அவரே பல புதுப்புது தேற்றங்களையும் கண்டறிந்தார். ஆனால் அவற்றை எழுதி வைக்கக் கூட அவரிடம் காகிதங்கள் இல்லை. அவ்வளவு ஏழ்மையிலும் கணிதத்தின் மேல் இருந்த ஆர்வம் மட்டும் அவருக்கு குறையவில்லை. தொடர்ந்து பல தேற்றங்களை கண்டுபிடித்துக் கொண்டே இருந்தார். 1903 ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். பின்பு கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் F.A (First examination in Arts)படிக்கத் தொடங்கினார். அதற்கு உதவித்தொகையும் பெற்றார். ஆனால் கணிதத்திலேயே அவர் கவனம் முழுவதும் இருந்ததால் கணிதத்தில் முதலிடம் பெற்றவர் மற்ற பாடங்களில் தோல்வி அடைந்தார். அதனால் அவருக்கு கிடைத்த உதவித்தொகையும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சென்னை பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். அங்கும் அவரால் பட்டம் பெற முடியவில்லை. இதனால் மீண்டும் கும்பகோணம் சென்ற இவருக்கு ஜானகி என்பவருடன் திருமணம் நடந்தது.
கணித ஆய்வுகள்
திருமணத்திற்கு பிறகு குடும்ப செலவிற்காக சென்னை துறைமுகத்தில் எழுத்தர் வேலைக்கு சேர்ந்த போதும் அவர் கணித ஆராய்ச்சியை மட்டும் நிறுத்தவே இல்லை. இவரது திறமை அறிந்து இவரது கணித ஆராய்ச்சி தொடர பலர் உதவி செய்தனர். அதன் விளைவாக 1911 ஆம் ஆண்டு இந்திய கணிதக்கழகத்தின் பத்திரிக்கையில் இவரது ஆய்வுக்கு கட்டுரை முதன் முதலில் வெளியானது. அதன் விளைவாக இந்தியா முழுவதும் பிரபலமானார். 1913 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் 75 ருபாய் சம்பளத்துடன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் ஆராய்ச்சிகள்
பலரது ஆலோசனைக்கு பின் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஹார்டி (G.H. Hardy) என்பவருக்கு இராமானுஜன் தான் கண்டுபிடித்த தேற்றங்கள் சிலவற்றை அனுப்பினார். அவர் அனுப்பிய 120 தேற்றங்களை பார்த்த ஹார்டிக்கு இராமானுஜனின் அளவிட முடியாத திறமை தெளிவாக தெரிந்தது. உண்மையில் அவரால் கூட பல தேற்றங்களை புரிந்து கொள்ள கூட முடியவில்லை. கணிதத்தில் அதிக ஞானம் இருந்தாலும் இராமானுஜன் கணிதத்தில் சில அடிப்படைகளும் தெரியாமல் தான் இருந்தார். ஏற்கனவே கண்டுபிடித்திருந்த சில தேற்றங்களையும் அவர் கண்டுபிடித்திருந்தார். எனவே ஹார்டி இராமானுஜன் இங்கிலாந்து வந்து ஆராய்ச்சி செய்ய அழைத்தார். பழமையில் ஊறியிருந்த அவரது தாயின் பல எதிர்ப்புகளையும் மீறி 1914 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். 1914 முதல் 1918 வரையில் ஹார்டியின் உதவியுடன் பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். 1918 ஆம் ஆண்டு இராமானுஜன் இங்கிலாந்தின் F.R.S ( Fellow of Royal Society) பட்டம் பெற்றார். மேலும் டிரினிட்டி கல்லூரியில்(Trinity College) பெல்லோவாகவும் தேர்தெடுக்கப்பட்டர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் இராமானுஜன் தான்.

மறைவு
துரதிஷ்டவசமாக இங்கிலாந்தின் குளிர், முதல் உலகப்போர், குடும்பத்தால் மன உளைச்சல் எனப் பல காரணங்களால் அவருக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போனது. மேலும் இராமானுஜன் கடுமையான காசநோயால் பாதிக்கப்பட்டார். இங்கிலாந்தில் கடைசி ஆண்டை மருத்துவமனையிலேயே கழித்த போது அவர் கணிதத்தை மட்டும் விடவில்லை. அவரது ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. கடைசியில் இராமானுஜன் இந்தியா திரும்பி சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனாலும் தொடர்ந்து உடல் நிலை மோசமான நிலையில் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் கணித மேதை இராமானுஜன் காலமானார். இன்றும் கூட பகுத்தறியப்படும் பல தேற்றங்களைத் தந்த இராமானுஜன் வெறும் 33 ஆண்டுகள் தான் வாழ்ந்துள்ளார்.
கணித மேதை
பை (PI) என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டதால் வகுத்து வரும் இலக்கம். எந்த வட்டத்திலும் PI ஒரு நிலையான (Constant) இலக்கம். மற்றவர்களை விட இவரது வழிமுறை தான் PI யின் மதிப்பை எளிமையாகவும் துல்லியமாகவும் தருகிறது.
கௌரவங்கள்
1962 ஆம் ஆண்டு இராமானுஜன் அவர்களின் 75 ஆவது ஆண்டு பிறந்தநாளில் மத்திய அரசு அவரது படம் இருக்கும் அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை சிறப்பித்தது. 2012 ஆம் ஆண்டு அவரது 125 ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட தொடக்க விழாவில் அப்போதைய பிரதமர் மன் மோகன் சிங் இராமானுஜன் அவர்களின் பிறந்த நாளை தேசிய கணித தினமாகவும், 2012 ஆம் ஆண்டை கணித ஆண்டாகவும் அறிவித்தார். இவரது வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி “ராமானுஜன்” என்ற தமிழ் படமும் “The Man Who Know Infinity” என்ற ஆங்கிலப் படமும் வெளியாகி உள்ளது. ஜெர்மனியும், சுவீடனும் ஆண்டு முழுவதும் கணித மேதை இராமானுஜன் என்ற பெயரில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் மாநாட்டை நடத்துகின்றன.
டிசம்பர் மாதம் 22 நாள் இராமானுஜன் அவர்கள் பிறந்த நாளை இந்த வார ஆளுமையாக எழுத்தாணி கொண்டாடி மகிழ்கிறது.