பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி வரலாறு!

Date:

சலீம் அலி இந்திய பறவையியலாளர். இந்தியாவின் பறவை மனிதன் என அழைக்கப்படுபவர். முதன் முதலாகப் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை இந்தியாவில் நிகழ்த்தியவர். பறவைகளைப் பற்றி அறிந்து கொள்வதை வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் தன் வாழ்க்கைப் பணியாகவே எண்ணி கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். பறவைகளின் வாழ்க்கை மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்து அவர் எழுதி வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் பெற்றவை.

சலீம் அலி பிறப்பு

சலீம் மொய்சுதீன் அப்துல் அலி அவர்கள் 1896 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்று பம்பாயில் கேத்வாடி என்ற ஊரில் குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை பெயர் மொய்சுதீன், தாய் – ஜீனத் உன்நிசா. சலீம் அலிக்கு ஒரு வயது இருக்கும் போது இவரது தந்தையும், மூன்று வயதாக இருக்கும் போது தாயும் இறந்துவிட்டார்கள். அதன் பின் இவரது மாமாவான அம்ருதின் என்பவர் தான் அனைவரையும் வளர்த்தார்.

சலீம் அலி வரலாறு

Credit: Astro ulagam

பறவைகள் மீது ஆர்வம்

அந்த காலத்தில் பறவைகளை வேட்டையாடுவது ஒரு பிரபலமான பொழுது போக்காக இருந்தது. அதோடு, அப்படி வேட்டையாடிய பறவைகளை பதப்படுத்தி வீடுகளில் வைத்திருப்பது கெளரவமாகக் கருதப்பட்டது. பறவைகளையும், விலங்குகளையும் அம்ருதீன் வேட்டையாடுவார். துப்பாக்கி சுடுவதில் திறமைசாலியாக இருந்த சலீம் அலி பறவைகளை பார்த்தவுடன் அதனை சுடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். தனது பத்தாவது வயதில் அப்படி ஒரு குருவியை சுட்ட போது அது துடிதுடித்து அவர் கண் முன் இறப்பதை கண்டார். அதன் கழுத்தில் இருந்த சின்ன மஞ்சள் திட்டு அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை அவருக்கு ஏற்படுத்தியது. இந்த கேள்விக்கு அவரது மாமாவுக்கும் பதில் தெரியவில்லை. அதனால் சலீம் அலியை  பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஆயிரக்கணக்கிளான பறவைகளை உயிரற்று மாதிரிகளாக வைக்கப்பட்டிருந்தன.

மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது – சலீம் அலி

சலீம் அலி எல்லாவற்றையும் பிரமிப்புடன் பார்த்தார். அங்கு பொறுப்பில் இருந்த பெர்லார்ட் என்பவர் சலீம் அலியின் சந்தேகங்களுக்கு பதில் அளித்ததோடு அங்கிருந்த எல்லா பறவைகளை பற்றியும் விளக்கினார். இறந்து போன பறவைகள் எப்படி பதப்படுத்தி பாதுக்காக்கப்படுகின்றன என்பதை பற்றியும் அங்கு அறிந்து கொண்டார். அன்று முதல் சலீம் அலிக்கு பறவைகளைப் பற்றிய ஆர்வம் இன்னும் அதிகரித்தது. அடுத்து, பறவைகள் எப்படி பறக்கின்றன, என்னவெல்லாம் சாப்பிடும், எப்படி வாழ்கின்றன என பல கேள்விகள் அவரிடம் எழுந்தன. அப்போதிலிருந்து சலீம் அலி பறவைகளை உற்று நோக்கிக் குறிப்பெடுக்கத் துவங்கினார்.

சலீம் அலி கல்வி

கல்லூரி முதலாம் ஆண்டுக்கு பிறகு படிப்பைத் தொடர சலீம் அலிக்கு விருப்பம் இல்லாமல் போனது. அதனால் அவரது குடும்பத் தொழிலான சுரங்கம், மர வேலைகளைப் பார்ப்பதற்காக, 1914 ஆம் ஆண்டு பர்மாவுக்குச் சென்று தொழிலில் ஈடுபட்டார். ஆனாலும் அந்த வாழ்வு அவருக்கு திருப்திகரமாக இல்லை. 1917 ஆம் ஆண்டு அவரது  மாமா அம்ருதின் இறந்ததனால் சலீம் அலி மீண்டும் பம்பாய்க்கு திரும்பினார். அங்கு தாவர் கல்லூரியில்  வணிகவியல் படிக்கத் தொடங்கினார். கூடவே பறவைகள் மீது இருந்த ஆர்வத்தால் செயின்ட் சேவியர் கல்லூரியில் அவர் விலங்கியல் பிரிவிலும் சேர்ந்தார். அதாவது காலையில் தாவர் கல்லூரியில் வணிகவியலும், மதிய நேரத்தில் சேவியர் கல்லூரியில் விலங்கியலும் என்று படித்துக் கொண்டிருந்தார். அங்கு விலங்கியல் துறையின் தலைவராக இருந்த எதெல்பெர்ட் பிளாட்டர் (Ethelbert Blatter) என்பவர் பறவைகள் மீதான இவரது ஈடுபாட்டை அறிந்து, பறவைகள் பற்றிய எல்லா விஷயங்களையும் தெளிவாக  விளக்கினார். பறவைகளின் குடும்ப விவரங்கள், உடல் அமைப்புகள், வாழ்க்கை முறைகள், வெளித்தோற்றங்கள், சிறப்பியல்புகள் என்று எல்லாவற்றையும் கற்க ஆரம்பித்தார் சலீம் அலி. அதே சமயம் பறவைகள் மீது இவர் கொண்ட அதீத அன்பினால் பலரது கேலிக்கும் ஆளாகியிருக்கிறார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) பறவையியல் தொடர்பாக பொருளாதாரப் பிரிவு ஒன்றைத் தொடங்க காரணமாக இருந்தவர சலீம் அலி !

திருமணமும் ஜெர்மனி பயணமும்

1918 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவருடைய 18 வயதிலேயே தெஹ்மினா   (Tehmina) என்பவரை திருமணம் செய்து கொண்டார். தெஹ்மினா மற்றவர்கள் போல இல்லாமல் சலீம் அலியின்  பறவை ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். எனினும் வறுமை இவர்களை வாட்டியது. இந்திய விலங்கியல் கழகத்தில் ஒரு பறவையாளார் வேலை காலியாக இருந்த போதும், அந்த பணிக்கு தேவையான பல்கலைக்கழக பட்டம் இல்லாததால் சலீம் அலிக்கு  அந்த வேலையும் கிடைக்கவில்லை. இருந்தாலும் பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் வழிகாட்டி (Guide) பணி  கிடைத்தது. பறவைகளைப் பற்றி தனக்கு தெரிந்ததை அங்கு வருபவர்களிடம் சொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தார் சலீம் அலி. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவரால் அந்த பணியை தொடர முடியவில்லை. பறவைகள் பற்றி இன்னும் முறையாக கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சலீம் அலி ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு சென்றார். அங்கு இர்வின் ஸ்ட்ராஸ்மன் ( Irwin Strassman ) என்பவரிடம் பறவைகள் பற்றிய  பல விஷயங்களை கற்றார்.

தூக்கணாங்குருவி ஆய்வு

1930 ஆம் ஆண்டு பெர்லினில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பினார் சலீம் அலி. அப்போது நிதிப்பற்றாக்குறை காரணமாக பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் அவர் ஏற்கனவே பார்த்த வழிகாட்டி பணியும் இல்லை. அதனால் மும்பையில் கிஹிம் என்ற கடலோர கிராமத்தில் வசிக்க ஆரம்பித்தார். அங்கு தோட்டத்துடன் கூடிய வீட்டில் வாழ்ந்தார். அது சலீம் அலிக்கு நல்லதாகவே அமைந்தது. ஏனெனில் அவர் வீட்டின் அருகே இருந்த மரங்களில் ஏராளமான தூக்கணாங்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்தன. அந்த அனுபவம் அவரை தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறை பற்றி ஒரு நூல் எழுதத் தூண்டியது. அதே ஆண்டு தூக்கணாங்குருவிகள் பற்றி ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு புகழ் பெற்றார்.

1939 ஆம் ஆண்டு  சலீம் அலியின்  மனைவி தெஹ்மினா உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். அது  சலீம் அலியை மிகவும் பாதித்து. அதன் பிறகு தன்  வாழ்வின் முழுநேரத்தையும் பறவை ஆராய்ச்சிக்காகவே செலவழிக்க ஆரம்பித்தார். வறுமையில் வாடிய  போது கூட பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியை விடாமுயற்சியோடு செய்து வந்தார்.

சலீம் அலி பயணங்கள்

பறவைகள் வாழ்கின்ற இடங்களுக்கே சென்று, அவற்றின் இயல்புகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து பல உண்மைகளை அறிந்தார் சலீம் அலி. பறவைகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்தார் சலீம் அலி. காஷ்மீர், பரத்பூர், ஹிமாலயா, ராஜஸ்தான் பாலைவனம், கேரளா, மேற்கு தொடர்ச்சி மலைகள், ஆப்கானிஸ்தான் பனிச்சிகரங்கள், நேபாளம், மியான்மர்என பல இடங்களுக்கு பயணித்துள்ளார். ஒரு கட்டத்தில் சலீமுக்கு பறவைகளைப் படம் பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. சிங்கப்பூரில் தொழிலதிபராக இருந்த லோக் வாந்தோ (Loke Wantho) என்பவருடன் இணைந்து பறவைகளை புகைப்படம் எடுப்பதில் ஈடுபட்டார்.

Salim Ali

Credit: Topyaps

1950 ஆம் ஆண்டு மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் காப்பாளராக பொறுப்பேற்றார் சலீம் அலி. அதே ஆண்டு ஸ்வீடன்  நாட்டில் நடைபெற்ற, 10 வது உலக பறவையியல் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

மகத்தான பங்கு

இந்தியாவில் பறவை ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைய சலீம் அலியின் பங்கு அதிகம். பறவையியல் தொடர்பாக நிதி உதவிகள் கிடைப்பதற்கு காரணமும் இவரே!. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) பறவையியல் தொடர்பாக பொருளாதாரப் பிரிவு ஒன்றைத் தொடங்க காரணமாக இருந்தார். சலீம் அலியின் தீவிர முயற்சியால், மும்பை பல்கலைக் கழத்தில், பறவையியல் பற்றிய இளங்கலை, முதுகலை, முனைவர் ஆகிய படிப்புகள் தோற்றுவிக்கப்பட்டது.

அதே போல  பறவைகள் பாதுகாப்பிலும் சலீம் அலியின் பங்கு அளப்பரியது.அவர் காலத்தில் பிரதமர்களாக இருந்த ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் உதவியுடன் சலீம் அலி இந்தியாவில் பறவைகள் குறித்து ஆய்வுகளை மேம்படுத்த வழி செய்தார். சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் குறித்து, சலீம் அலி அன்றே சுட்டிக்காட்டியதுடன், சுற்றுச் சூழலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

The book of indian birds

Credit: Abebooks

சலீம் அலி பல சரணாலயங்களும், தேசிய பூங்காக்களும் உருவாக காரணமாக இருந்தார்.  பறவைகளின் நீர் ஆதாரமாக இருந்த ஏரிகளை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தினார். பறவையியல் தொடர்பான பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்தார்

சலீம் அலி எழுதிய நூல்கள்

சலீம் அலி பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனத்தின் இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை, பறவைகள் பற்றிய அறிவோடு அவற்றை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.  கிட்டத்தட்ட 1,300 பறவை வகைகளை ஆவணப்படுத்தி தெளிவாகவும், எளிமையாகவும் எழுதியுள்ளார். சலீம் அலியின் படைப்புகளிலேயே மிகவும் புகழ்பெற்ற புத்தகமாக கருதப்படுவது  The Book of Indian Birds என்ற புத்தகம் தான். 1941 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் புத்தகம் அதிக வரவேற்பு பெற்றதோடு பல இந்திய மொழிகளிலும், வெளி நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

பறவைகள் இனம் அழியத் தொடங்கும்போது, மனிதர்கள் இனத்துக்கும் அழிவு தொடங்கும். அது நமக்குக் கொடுக்கப்படும் எச்சரிக்கை  – சலீம் அலி

1964 முதல் 1974 ஆம் ஆண்டு வரை சலீம் எழுதிய  பத்து தொகுதிகள் அடங்கிய Hand Book of birds of india and Pakistan என்ற புத்தகம் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழ்ந்த பறவைகளை பற்றி விளக்கியது. மேலும் The Book of Indian birds, The Birds kutch, Indian hill birds, The birds of kerala, The birds of Sikkim  போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார். இது தவிர சலீம் அலி சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் Common Birds என்ற நூலையும் எழுதியுள்ளார். 1985 ஆம் ஆண்டு சலீம் அவருடைய சுய சரிதையான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of a Sparrow) என்ற நூலை எழுதினார். அவரது பத்தாவது வயதில் அவர் சுட்டு வீழ்த்திய குருவியால் தான் அவருக்கு பறவைகள் குறித்த ஆர்வம் ஏற்பட்டது என்பதால் தனது சுயசரிதைக்கு அதனையே தலைப்பாக வைத்தார். பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அனைவருக்கும் சலீம் அலியின் புத்தகங்கள் வரப்பிரசாதமாக இருக்கும். சலீம் அலியின் உழைப்பால் தான் இந்தியப் பறவைகள் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

சலீம் அலி இறப்பு

பறவை ஆராய்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்கை  முழுவதையும் அர்ப்பணித்து எளிமையாய் வாழ்ந்த சலீம் அலி, புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்திருந்ததால் 1987 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி  அவருடைய 90 ஆவது வயதில் காலமானார்.

Salim Ali Stamp

Credit: Collector Bazar

சலீம் அலி விருதுகள்

1967 ஆம் ஆண்டு சலீம் அலி பிரிட்டிஷ் பறவையியல் கழகத்தின் விருதை பெற்று (The Gold Medal of British Ornithalogist) அந்த விருதை பெற்ற முதல் வெளிநாட்டுக் குடிமகன் என்ற பெருமையைப் பெற்றார். 1969 ஆம் ஆண்டு ஜான் சி. பிலிப்ஸ் நினைவு பதக்கத்தை பெற்றார். இந்திய அரசு சலீம் அலியை 1958 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷன் விருதையும் 1976 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் பெற்றார். 1985 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசாங்கம் அவருடைய மறைவுக்குப் பின் கோவையில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தை (Salim Ali Centrefor Ornithology and natural history) நிறுவியது. நெதர்லாந்து நாட்டு அரசின் Commander of the Netherlands விருதை சலீம் அலிக்கு 1973 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது. சலீம் அலிக்கு மரியாதை செய்யும் வகையில், இந்திய அரசு ஒரு அஞ்சல் தலையையும் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பறவைகள், காட்டுயிர் சரணாலயங்களுக்கு சலீம் அலியின் பெயரையும் சூட்டி கெளரவித்துள்ளது. சலீம் அலி, இன்னும் பல விருதுகளையும் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

நவம்பர் 12 – வறுமையான சூழ்நிலையிலும், ஆராய்ச்சிக்கான நிதி இல்லாத போதும் பறவைகள் மேல் கொண்ட ஆர்வத்தால் சற்றும் சளைக்காமல் விடாமுயற்சியோடு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பறவைகளின் பாதுகாப்பிற்காக வழி செய்த சலீம் அலியின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!