- டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் சட்ட படிப்பில் முதுகலை பட்டத்தை தங்கப்பதக்கத்துடன் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர்.
- காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய வழக்கறிஞர் பணியைத் துறந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்.
- இந்தியாவின் குடியரசு தலைவராக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர்!
முதல் குடியரசுத் தலைவர்
டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக இருந்தவர். இந்திய வரலாற்றில், குடியரசு தலைவர் பதவியை இரண்டு முறை ஏற்ற ஒரே குடியரசு தலைவர். மூன்று முறை காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர். சுதந்திர போராட்ட வீரரான இவர் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுக்களில் ஒருவராகவும் முக்கிய பங்கினை ஆற்றியவர்.

Credit: Aajtak
டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறப்பு
டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1884 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் சிவான் மாவட்டத்திலுள்ள செராடை என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை மகாவீர சஹாய் மற்றும் தாய் கமலேஷ்வரி தேவி. இவரது தந்தை பாரசீகம் மற்றும் சமஸ்கிருத மொழி அறிஞராக இருந்தார். குடும்பத்தில் கடைசி குழந்தையான இவருக்கு ஒரு சகோதரரும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சிறு வயதிலேயே தாய் இழந்த இவரை, இவரது சகோதரி தான் பார்த்துக் கொண்டார்.
இந்திய குடியரசு தலைவர் பதவியை இரண்டு முறை வகித்த ஒரே நபர்!!
டாக்டர் ராஜேந்திர பிரசாத் பள்ளிக்கல்வி
டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், தனது ஐந்தாவது வயதில் ஒரு இஸ்லாமிய மௌல்வியிடம் பெர்சியம், இந்தி, மற்றும் கணிதம் கற்க ஆரம்பித்தார். பிறகு, சப்ரா மாவட்ட பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு டி.கே கோஷ் அகாடமியில் இரண்டு வருடம் படித்தார். அடுத்து கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி மாதம் 30 ருபாய் உதவித் தொகைப் பெற்று தனது கல்வியைத் தொடர்ந்தார்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்லூரி படிப்பு
1902 ஆம் ஆண்டு, கொல்கத்தா பிரிசிடன்சி கல்லூரியில் (Presidency University) அறிவியல் மாணவராக சேர்ந்தார். “இந்த விடைத்தாளை எழுதியவன் என்னை விடத் திறமைசாலி!” என ஆசிரியர் பாராட்டும் அளவிற்கு படிப்பில் சிறந்து விளங்கினார். 1906 ஆம் ஆண்டு அவர் படிக்கும் காலத்திலேயே பீகார் மாணவர் அவையை உருவாக்கினார். பின்னர் பொருளியலில் கவனம் செலுத்த முடிவு செய்து 1907 ஆம் ஆண்டு பொருளியல் முதுகலை படிப்பில் முதல் மாணவனாக தேர்ச்சிப்பெற்றார்.
திருமணம்
டாக்டர் ராஜேந்திர பிரசாத், அவருடைய இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். 1896 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தனது பன்னிரண்டாம் வயதில் ராஜவன்ஷி தேவி என்கிற பெண்ணை மணந்தார்.

ஜவஹர்லால் நேரு மற்றும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் | Credit: The Print
சட்டப்படிப்பு
பட்டம் பெற்றவுடன் பீகார் முசாஃபர்பூரில் இருந்த லங்காட் சிங் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியில் சேர்ந்து பின்னர் அந்த கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார் டாக்டர் ராஜேந்திர பிரசாத். 1909 ஆம் ஆண்டு அந்த வேலையை விட்டுவிட்டு, சட்டம் படிக்க பெற கொல்கத்தா வந்தார். கொல்கத்தா சிட்டி கல்லூரியில் பொருளாதாரம் கற்பித்துக் கொண்டே சட்டம் படித்தார். 1915 ஆம் ஆண்டு சட்ட படிப்பில் முதுகலை பட்டத்தை தங்கப்பதக்கத்துடன் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று முடித்தார். 1937 ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முனைவர் (Doctorate) பட்டமும் பெற்றார்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் பணிகள்
சட்ட படிப்பில் முனைவர் பட்டம் பெற்றதை அடுத்து டாக்டர் ராஜேந்திர பிரசாத் வழக்கறிஞராக பணி புரிந்தார். பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றார். அவரது வாதத்திறமை அவரை ஒரு சிறந்த பேச்சாளராகவும் சொற்பொழிவாளராகவும் மாற்றியது. 1911 ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 1916 ஆம் ஆண்டு பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1917 ஆம் ஆண்டில், பாட்னா பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
சுதந்திர போராட்டத்தில் பங்கு
1911 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய வழக்கறிஞர் பணியைத் துறந்தார். தரையைத் துடைப்பது, கழிவறையைக் கழுவுவது, பாத்திரம் கழுவுவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். 1914 ஆம் ஆண்டு பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய கவர்னர் திரட்டியது போல மூன்று மடங்கு அதிகமாக சுமார் முப்பத்தி எட்டு லட்சம் திரட்டிக் கொடுத்தார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு மூன்றாண்டு சிறை தண்டனை பெற்றார்!
மேற்கத்திய கல்வி நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்று காந்தி கூறியதை அடுத்து, தனது மகன் மிரித்யுஞ்சய பிரசாத்தை ஆங்கிலேய கல்விக்கூடத்தை விட்டு நீக்கினார். 1931 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்திலும் சேர்ந்தார். அதன்பிறகு பல போராட்டங்களில் கலந்து கொண்ட இவர் மக்களுக்காக போராடினார்.
1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். அதனால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனையும் பெற்றார். பிறகு ஜூன் 15, 1945 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

Credit: Cultural India
காங்கிரஸ் தலைவர் பதவி
டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மும்பை மாநாட்டின் போது இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பதவி விலகியபோது அவர் மீண்டும் தலைவரானார். 1947 ஆம் ஆண்டு ஜே. பி. கிருபலானி தனது ராஜினாமாவை சமர்ப்பித்த பின்னர் மூன்றாவது முறையாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் காங்கிரஸ் தலைவரானார்.
அரசு பணிகள்
1946 ஆம் ஆண்டு டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு உணவு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலமைப்பு அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1950 ஆம் ஆண்டு இந்தியா முழு குடியரசு நாடாக மாறியவுடன் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்தியாவின் முதல் குடியரசு தலைவராகப் பதவியேற்றார். 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 ஆம் ஆண்டு அவர் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950 முதல் 1962 வரை, 12 ஆண்டுகள் குடியரசு தலைவராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார். இந்தியாவின் குடியரசு தலைவராக, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சார்பாக இல்லாமல் நியாயமாக அரசியலமைப்பின் தேவைக்கேற்ப செயல்பட்டார். இந்தியாவின் தூதராக உலகம் முழுவதும் பயணம் செய்த அவர், வெளிநாடுகளுடன் இந்திய உறவை வளர்த்துக் கொண்டார்.
இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில் அப்பதவியை இரண்டு முறை வகித்த ஒரே குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் பெற்றார். பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து அவர் பதவி வகித்தது இன்று வரை சாதனையாகவே உள்ளது.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் இறப்பு
டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1962 ஆம் ஆண்டு ஓய்வு பெற விரும்பும் தனது முடிவை அறிவித்தார். ஓய்வு பெற்ற சில மாதங்களிலே அவரது உடல் பலவீனமடைந்து தொடர்ந்து நோய்வாய் பட்டார். 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி காலமானார்.

Credit: Mintage World
இந்திய அரசு டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 1962 ஆம் ஆண்டு வழங்கி கெளரவித்தது. மேலும் இவர் உருவம் பொறித்த அஞ்சல் தலையையும் வெளியிட்டு இவரை சிறப்பித்தது.
டிசம்பர் 3 – இந்தியாவின் குடியரசு தலைவராக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்!