ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் இந்திய சீர்த்திருந்தவாதிகளில் முதன்மையானவராக போற்றப்படுபவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமூக சிந்தனையாளர். இந்தியாவின் முதல் சமூக சமய சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். இறைவன் ஒருவரே, உருவ வழிபாடு கூடாது போன்ற புரட்சிகரமான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர். பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடி, பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நாட்டை விட்டு ஓட வைத்தவர். இந்திய சமூகத்தில் பெண்களுக்கான நிலையை மாற்றி அமைத்தவர்.
ராம் மோகன் ராய் ஆங்கிலம், அறிவியல், மேற்கத்திய மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தேர்ந்து விளங்கியதால், அவருக்கு “ராஜா” என்ற பட்டத்தை, முகலாயப் பேரரசர் வழங்கினார்
பிறப்பும் கல்வியும்
ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், 1772 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி மேற்கு வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில், ராதாநகர் என்ற கிராமத்தில் ராம்காந்தோ ராய்-தாரிணி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவரது குடும்பம் ஒரு பிராமண குடும்பம். உயர் படிப்புகளுக்காக பீகாரில் உள்ள பாட்னா சென்ற ராம் மோகன் ராய் தனது படிப்பு மட்டுமின்றி பிற மொழிகளையும் கற்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் பதினைந்து வயதிலேயே ஆங்கிலம், பிரஞ்ச், கிரேக்கம், லத்தின், ஹுப்ரூ, சமஸ்கிருதம், ஹிந்தி போன்ற மொழிகளைக் கற்றார்.

இளமை வாழ்க்கை
ராம் மோகன் ராயின் தந்தை ஒரு இந்து மத பிராமணராக இருந்த போதும், இவர் சிலை வழிபாடு மற்றும் பல இந்துமத சடங்குகளை எதிர்த்தார். காரணம் இந்து மதத்திலேயே பல்வேறு கடவுள்களை வழிபடுபவர்களிடையே கடுமையான சண்டைகள் நடந்தன. இதனால் இவர் கடவும் ஒருவரே! சிலை வழிபாடு கூடாது என கூறினார். மேலும் அனைத்து வகையான சமூக மதவெறி மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்தார். இதுவே அவருக்கும், அவரது தந்தைக்குமிடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. இதன் விளைவால் ஒரு கட்டத்தில் ராம் மோகன் ராய் வீட்டை விட்டே வெளியேறினார். அவர் இமயமலை சென்று பிறகு திபெத் சென்றார். தொடர்ந்து பயணம் மேற்கொண்ட பின்னர், வீடு திரும்பினார்.
தொழில்
வீடு திரும்பிய ராம் மோகன் ராய்க்கு, அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். அதன் பிறகு வாரணாசி சென்ற ராம் மோகன் ராய், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இந்து மத தத்துவங்களை இன்னும் ஆழமாகப் பயின்றார். 1803 ஆம் ஆண்டு அவரது தந்தை இறந்த பின்பு கொல்கத்தாவில் உள்ள ஒரு வட்டிக்கடையில் பணியாற்றினார். 1809 முதல் 1814 ஆம் ஆண்டு வரை கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார். அவருடைய நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகி வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார்.
சமூக சீர்திருத்தங்கள்
அன்றைய காலத்தில் சமூகத்தில் நடந்த முறைகேடுகளைக் கண்டு கோபமடைந்த ராஜா ராம் மோகன் ராய், 1814 ஆம் ஆண்டு சமுதாயத்தில் சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சியாக “ஆத்மிய மக்களவை” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். பின்னர், விதவைகள் மறுமண உரிமைக்காகவும், பெண்களுக்கான சொத்து உரிமைக்காகவும் பல பிரச்சாரங்களில் ஈடுபட்டார். மேலும் அக்காலத்தில் பெண்களுக்கு கட்டாய பழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறுதல் மற்றும் பலதார மணம் புரிதல், பெண் சிசுக் கொலை, குழந்தைத் திருமணம், வரதட்சணை போன்ற கொடுமைகளைத் தீவிரமாக எதிர்த்தார்.
கணவன் இறந்தால் அந்த பெண்ணிற்கு மறுமணம் செய்ய வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் அந்த பெண்ணை உயிருடனாவது வாழவிடுங்கள் என்ற கருத்தினையும் முன் வைத்தார். பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், கலப்பு திருமணம் ஆகியவற்றை ஆதரித்த ராம் மோகன் ராய், சமுதாய மலர்ச்சி என்பதனை கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும், பாரம்பரிய இந்திய கல்வி முறையை விட ஆங்கில மொழி கல்வி மேன்மையானது உறுதியாக நம்பினார்.
1833 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த லார்ட் வில்லியம் பென்டிக் ஒரு சட்டம் இயற்றி, அதன் மூலம் இந்த சதி முறையை முற்றிலுமாக ஒழித்தார்!!
அவர் ஆங்கிலம், அறிவியல், மேற்கத்திய மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தேர்ந்து விளங்கினார். இதனாலேயே, “ராஜா” என்ற பட்டத்தை, அவருக்கு முகலாயப் பேரரசர் வழங்கினார்.
நிறுவனங்கள்
தன் கருத்துக்களை இவர் நடத்திய “சம்பத் கௌமுடி” என்ற பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதினார். 1817 ஆம் ஆண்டு இந்து என்ற கல்லூரியை தொடங்கினார். இதில் சாதி மத பேதமின்றி அனைவருக்கும் உயர்கல்வி வழங்கப்பட்டது. 1819 ஆம் ஆண்டு வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் வெளியிட்டார். மேலும் நான்கு உபநிடதங்களை மொழிபெயர்த்தார். 1820 ஆம் ஆண்டு ஏசுவின் போதனைகளை திறனாய்வு செய்து, “ஏசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி” என்ற நூலை வெளியிட்டார். இந்து மற்றும் முஸ்லிம் சமய நூல்களையும் கற்றுத் தேர்ந்த இவருக்கு பல மொழிகள் தெரியும். 1822 ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியையும், 1826 ஆம் ஆண்டு மேற்கத்திய-இந்திய கற்றல் முறை இணைந்த வேதாந்தா கல்லூரியையும் நிறுவினார்.
பிரம்ம சமாஜம்
1828 ஆம் ஆண்டு ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், “பிரம்ம சமாஜம்” என்ற ஒரு அமைப்பை நிறுவினார். இதை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்பவில்லை. இதில் அனைத்து மதங்களில் உள்ள நல்ல கொள்கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. மேலும் இந்த அமைப்பின் மூலம் அனைத்து சமூக முறைகேடுகளுக்கும் எதிராக குரல் எழுப்பினார்.

கடவுளைத் தந்தையாகவும், மனித குலத்தில் சகோதரத்துவத்தை மேலோங்கச் செய்வதே இவர் நிறுவிய பிரம்ம சமாஜின் தலையாய கொள்கையாகும். மேலும் மனிதர்களிடையே அன்பு செலுத்த வேண்டும், சிலை வழிபாட்டை நிறுத்தி, விலங்குகளை பலி கொடுப்பது போன்ற பிற சடங்குகளையும் நிறுத்த வேண்டும் என்று விளக்கினார். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கடவுளை வழிபடலாம் என்றார்.
சதி என்னும் கொடுமை
ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், அப்போது நிலவிய ஒரு கொடுமையான நடைமுறையான கணவரின் இறப்புக்குப் பின்னர், மனைவி அவரின் சிதையில் உயிருடன் விழ வேண்டுமென்ற “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க எண்ணினார். வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்த அவர் அவற்றைக் கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று போராடினார். அவரது அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றிக் கிட்டும் வகையில், 1833 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த லார்ட் வில்லியம் பென்டிக் ஒரு சட்டம் இயற்றி, அதன் மூலம் இந்த சதி முறையை முற்றிலுமாக ஒழித்தார். அதோடு, விதவைகள் மறுமணம் செய்துகொள்ளும் அனுமதியையும் பிறப்பித்தார்.
ஆங்கிலேயர்களின் முற்போக்கு சிந்தனைகள், ஆங்கில நாகரிகம் இவரை வெகுவாக கவர்ந்த போதும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை சாடியதோடு இந்திய பொருட்கள் மீதான கடுமையான வரி விதிப்பை நீக்க வேண்டும் என்றும் அவர் முயற்சிகள் எடுத்தார்.

1831 ஆம் ஆண்டு முகலாய அரசருக்கான ஊக்கத்தொகையை ஆங்கிலேய அரசு ஏற்றித்தர இங்கிலாந்துக்கு பயணம் போன அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். சட்டம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நூல்களை அங்கே இருந்து இயற்றினார்.
மறைவு
இங்கிலாந்தில் இருந்த போதே மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராம் மோகன் ராய் , பிரிஸ்டோல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் 1833 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 61. இவர் நினைவாக இவரது உருவச்சிலை பிரிஸ்டோலில் உள்ளது.
மே 22 – நவீன இந்தியாவை உருவாக்கியவர் என்று அழைக்கப்பட்ட ராஜா ராம் மோகன் ராயின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.