இரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறு: இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் கதை!

Date:

இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒரு கவிஞர், பாடகர், கதை மற்றும் நாவல் படைப்பாளர், ஓவியர், மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், அவற்றுக்கு ஏற்ற மெட்டுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், சுமார் இருபது நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்பு என பலவற்றை எழுதியவர். காந்திஜியை மகாத்மா என்று முதன் முதலில் அழைத்தவரும் காந்திஜியால் குருதேவ் என அழைக்கப்பட்டவரும் இவரே.

இரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறுCredit: Famous People

இரவீந்திரநாத் தாகூர் தோற்றம்

இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கொல்கத்தாவில் 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இளம் வயதிலேயே இவரது தாய் இறந்துவிட்டார். தந்தையும் வியாபார நோக்கில் அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால் இவர் பெரும்பாலும் பணியாளர்களாலேயே வளர்க்கப்பட்டார். வங்காள மறுமலர்ச்சியில் பங்காற்றிய இவரின் குடும்பம் இலக்கிய நாளிதழ் வெளியீட்டு நிறுவனம் மற்றும் திரையரங்கம் போன்றவற்றை நடத்தி வந்தது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் நபர் என்ற சிறப்பை பெற்றவர் தாகூர்

இளமைப் பருவம்

ஓரியண்டல் செமினரி பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய தாகூருக்கு பாரம்பரிய கல்வி முறை பிடிக்கவில்லை. அதனால் பல ஆசிரியர்களின் வரவழைத்து வீட்டிலேயே படிக்கத் துவங்கினார். பிறகு உலக அனுபவங்களை கற்றுக் கொள்ள 1873 ஆம் ஆண்டு தாகூர், அவருடைய தந்தையுடன் பல மாதங்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது தான் தாகூர் பலரது வரலாறுகளைத் தெரிந்து கொண்டார். மேலும் வானியல், அறிவியல், சமஸ்கிருதம் போன்றவற்றையும் படித்தார்.

தாகூர் தனது 8 வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ என்ற புனைப்பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 16 வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்த இவர், தன்னுடைய 20 ஆவது வயதில் அவரது முதல் நாடகமான, “வால்மீகி பிரபிதா” வை எழுதினார்.

Rabindranath Tagore in childhoodCredit: Dhruva Talukdar

வழக்கறிஞர் ஆக வேண்டும்  என ஆசைப்பட்ட தாகூர் 1878 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ந்தார். ஆனால், ஷேக்ஸ்பியர் மற்றும் பிறரது படைப்புகளை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே 1880 ஆம் ஆண்டு வங்கத்திற்குத் திரும்பி விட்டார்.  அதன் பின்பு ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதே சமயம் மேற்கத்திய கலாச்சாரத்தையும், குறிப்பாக மேற்கத்திய கவிதைகள் மற்றும் அறிவியலிலும் மிகவும் அறிவுடையவராகவும் திகழ்ந்தார்.

இலக்கியங்கள்

இரவீந்திரநாத் தாகூர் அவர்கள், 1884ல், “கோரி-ஓ-கமல்” என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். மேலும், அவர் “ராஜா-ஓ-ராணி” மற்றும் “விசர்ஜன்” என்ற நாடகங்களையும் எழுதினார். 1890 ஆம் ஆண்டு, தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள ஷிலைடாஹா என்னும் இடத்தில் இருந்த அவரது குடும்பத்தின் பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். 1893 முதல் 1900 வரை, தாகூர் அவர்கள் ஏழு கவிதைத் தொகுதிகளான “சொனார் தொரி” மற்றும் “கனிகா” போன்றவற்றை எழுதினார். 1901 ஆம் ஆண்டு ஷிலைடாஹாவிலிருந்து சாந்திநிகேதனுக்கு சென்ற தாகூர் அங்கு ஒரு ஆசிரமத்தை நிறுவினார்.

கீதாஞ்சலி

1909 ஆம் ஆண்டு இரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கீதாஞ்சலியை எழுதத் தொடங்கினார். 1912 ஆம் ஆண்டு தாகூர் மீண்டும் லண்டன் சென்ற போது, அவர் கீதாஞ்சலியில் இருந்து சில கவிதைகள் மற்றும் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். அங்கு வரவேற்பு பெற்ற கீதாஞ்சலி 1912 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இந்திய சமூகத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பில் வெளியிடப்பட்டது. அப்போது தாகூர் அதற்கு முன்னுரை எழுதினார். 1913 ஆம் ஆண்டு தாகூரின் கீதாஞ்சலிக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் தன் தாய் மொழியான வங்காளத்தில் எழுதிய கவிதைகள் மற்றும் நாடகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பு

1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு, வங்காளத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தார். இந்த முடிவை எதிர்த்து இரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கடுமையாகப் போராடினார். தாகூர் அவர்கள், பல தேசிய பாடல்களை எழுதி, பல்வேறு எதிர்ப்பு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். கூடவே அப்போது நிலவிய குழந்தை திருமணம், தீண்டாமை குறித்தும் தன் கவிதைகளில் எழுதினார். காந்திஜியின் ஒரு ஆதரவாளராக இருந்த போதும் தாகூர் அரசியலில் இருந்து விலகியே இருந்தார்.நோபல் பரிசிற்கு பின் 1915 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர் தாகூருக்கு, ‘சர்’ பட்டம் வழங்கினார். ஆனால் 1919 ல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையைப் பற்றி அறிந்த தாகூர், ஆங்கிலேய அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தைத் துறந்தார்.

Gandhi and Tagore

Credit: Better india

1921 ஆம் ஆண்டு தாகூர் அவர்கள், விஸ்வபாரதி என்ற பல்கலைக்கழகத்தை நிறுவினார். நோபல் பரிசின் மூலமாகக் கிடைத்த உரிமைத்தொகை அனைத்தையும் இந்த பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தார். அவருடைய 60 வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களை தீட்டவும் ஆரம்பித்தார்.

திருமண வாழ்க்கை

இரவீந்திரநாத் தாகூர் அவர்கள், 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாளினி தேவி ராய் சௌத்ரி என்ற 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். ஆனால், இரண்டு குழந்தைகள் வாலிபப் பருவம் அடையும் முன்பே இறந்து விட்டன.  1902 ஆம் ஆண்டு, அவரது மனைவி மிருனாளினி இறந்த பின்பு தாகூர் அவர இயற்றிய கவிதைகள் தொகுப்பான “ஸ்மரன்” என்ற படைப்பை அவரது மனைவிக்காக அர்ப்பணித்தார்.

எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயல்கிறார்கள் – தாகூர்

மறைவு

நீண்ட காலம் நோய்வாய்பட்டிருந்த இரவீந்திரநாத் தாகூருக்கு கொல்கத்தாவிலுள்ள உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.

 Albert Einstein and Rabindranath TagoreCredit: Forward

இரவீந்திரநாத் தாகூர் சிறப்புகள்

  • இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் நபர் என்ற சிறப்பை பெற்றவர் தாகூர்
  • 1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தாகூருக்கு இலக்கிய முனைவர் பட்டம் வழங்கியது.
  • தாகூர் எழுதிய பல பாடல்களில் ஒன்றான ஜன கண மண பாடல் இந்தியாவின் தேசீய கீதமாகவும், அமர் சோனார் என்ற பாடல் வங்காள தேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • சுமார் 30 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல தலைவர்களை சந்தித்துள்ளார். விவேகானந்தருடன் நட்பாக இருந்த இவர் ஐன்ஸ்டைனுடனும் உரையாடியுள்ளார்.
  • 63 வயதில் தாகூர் பெரு நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார். இவரது வருகையின் நினைவாக இரு நாட்டு அரசுகளும் சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.

இந்தியாவின் இணையற்ற கவிஞர், இலக்கிய மேதை இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறது நியோதமிழ்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!