ஆர். கே. நாராயண் அவர்கள் படைப்பாற்றலும், கற்பனைத் திறனும் கொண்ட புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர். சென்னையில் பிறந்தவர். இல்லாத மால்குடி என்ற ஊரை கற்பனையில் உருவாக்கி, தன் எழுத்துக்கள் மூலம் அதை வாசகர்கள் கண் முன் கொண்டு வந்தவர்.

ஆர்.கே. நாராயண் தோற்றம்
ஆர். கே. நாராயண் (ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயணசாமி) அவர்கள் 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 தேதி சென்னையில் புரசைவாக்கத்தில் பிறந்தார். இவரது தந்தை ராசிபுரம் வெங்கட்ராம கிருஷ்ணசாமி ஐயர் ஒரு பள்ளி ஆசிரியர். தாயார் ஞானாம்பாள். வேலை காரணமாக கிருஷ்ணசாமி ஐயர் அடிக்கடி ஊர் மாற வேண்டியிருந்ததாலும் தாயாருக்கு உடல் நிலை சரி இல்லாமல் இருந்ததாலும் ஆர். கே. நாராயண் அவரது பாட்டியோடு தங்கியிருந்து பள்ளிப் படிப்பை முடித்தார். பாட்டியிடம் இருந்து புராணங்கள், கர்நாடக சங்கீதம், சமஸ்கிருதம் போன்றவற்றை கற்றார். பிறகு அவருடைய தந்தை வேலை பார்த்து வந்த மைசூர் பள்ளியில் சேர்ந்து படித்தார். சிறு வயது முதலே எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு வீணை வாசிப்பதும் பிடிக்கும். அவரின் சகோதரர் ஆர்.கே. லட்சுமணன் பிரபலமான கார்ட்டூனிஸ்ட். (ஆர். கே. நாராயணின் பல நாவல்களுக்கு இவர் ஓவியம் வரைந்துள்ளார்)
இளமைக் காலம்
புகழ் பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியரான ஆர். கே. நாராயண், ஆரம்பத்தில் கல்லூரியில் இளங்கலை படிப்பு சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் இருமுறை தோல்வியடைந்துள்ளார். அதிலும் ஒரு முறை ஆங்கிலத்தில்!! கல்லூரி படிப்பை முடித்தவுடன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த ஆர். கே. நாராயண், கொஞ்ச காலத்திலேயே அந்த வேலையை விட்டு விட்டு, அவருக்கு பிடித்தபடி எழுதத் தொடங்கினார். அவரது கற்பனையில் மால்குடி என்ற ஊரை உருவாக்கி வடிவமைக்க ஆரம்பித்தார். தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பற்றி அவர் ஆங்கில மொழியில் எழுதினார்.
ஆர். கே. நாராயண் எழுதிய THE guide என்ற புத்தகம் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றுள்ளது!!
சுவாமி அண்ட் ஃ ப்ரண்ட்ஸ்
ஒரு எழுத்தாளராக உச்சத்தை தொட்ட இவரின் படைப்புகள் வெளியாவதில் ஆரம்பத்தில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன!! 1930 ஆம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக இருந்த இவரின் முதல் நாவல் “சுவாமி அண்ட் ஃப்ரண்ட்ஸ்“. பல சிரமங்களால் வெளியிட முடியாமல் இருந்த இந்த நாவல், ஆர். கே. நாராயணின் ஆக்ஸ்ஃபோர்டில் வசித்த ஒரு நண்பர் மூலம் பிரபல எழுத்தாளர் கிரஹாம் கிரீனேவுக்கு அனுப்பப்பட்டது. இந்த நாவல் மிகவும் பிடித்துப் போனதால் கிரஹாம் இந்த நாவலின் முதற் பதிப்பை லண்டனில் ஹாமிஷ் ஹாமில்டன் பதிப்பகம் மூலம் 1935 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த நாவல் வெளிவந்த சில மாதங்களிலேயே பல்லாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. விளைவு, உலகம் முழுவதும் ஆர். கே. நாராயணின் புகழ் பரவியது. அதன் பிறகு முதல் இந்தியப் பதிப்பு 1944 ஆம் ஆண்டு தான் வந்தது.

இந்த நாவல், சுவாமி என்ற பள்ளிக்கூடத்தையும் வீட்டுப்பாடத்தையும் வெறுக்கும் ஒரு சாதாரண சிறுவனின் வாழ்க்கையை பற்றியது. நாவலில் நட்பு, அன்பு, பிரிவு போன்றவற்றை மட்டும் சொல்லாமல் சிறுவனின் சுதந்திரம் பெற வேண்டும் என்ற உணர்வையும், அதற்காக அவன் மேற்கொள்ளும் போராட்டத்தை பற்றியும் கூறியிருந்தது மேலும் சிறப்பு! இந்த நாவலில் வரும் மால்குடி என்ற ஊர் ஆர். கே. நாராயணின் கற்பனை என்று தெரிந்தாலும் ஒரு முறையேனும் அந்த ஊருக்குச் சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தை வாசகர்களுக்கு வரவைக்கும் படி விவரித்தது தான் அவரின் வெற்றி! “சுவாமியும் சிநேகிதர்களும்” என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த நாவல் இன்னும் அதிக வரவேற்பை பெற்றது.
சாகித்திய அகாடமி
அதன் பிறகு இவர் சொந்தமாக “இந்தியன் தாட் பப்ளிகேஷன்ஸ்” (Indian Thought Publications) என்ற பதிப்பகத்தைதை தொடங்கி புத்தகங்களை வெளியிட ஆரம்பித்தார். இவர் எழுதிய The Guide என்ற புத்தகம் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது. இந்த நாவல் இந்தியில் படமாகவும் எடுக்கப்பட்டது. சுவாமி அண்ட் ஃப்ரண்ட்ஸ் போலவே Malgudi days, The man eater of Malgudi, The bachelor of arts, Waiting for the Mahatma போன்ற புத்தகங்களும் மக்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்பட்டன.
1956 ஆம் ஆண்டு ரொக்ஃபெல்லர் அமைப்பு அழைத்தன் பேரில் அமெரிக்கா சென்ற ஆர். கே. நாராயண், தன் அமெரிக்க அனுபவங்களை “My Dateless Diary” என்றும் அவருடைய நினைவுகளை “My Days” என்ற பெயரிலும் எழுதினார். 1973 ஆம் ஆண்டு கம்ப ராமாயணத்தையும், 1978 ஆம் ஆண்டு மஹாபாரத்ததையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பல சிறுகதைகள், பயண நூல்கள் என்று பல நூல்களை வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டே இருந்தார்.
சிறப்பம்சம்
இவரது எழுத்து புகழ் பெற்றதற்குக் காரணம் கதையின் எளிய ஆங்கில நடையும் எதார்த்தமான நகைச்சுவை உணர்வும், சமூகத்தின் மீதான இயல்பான பார்வையும் தான். அதனால் தான் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி உட்பட உலகம் முழுவதும் பல லட்சம் வாசகர்கள் இவருக்கு இருந்தனர்.
இந்திய அரசு, மைசூர் – யஷ்வந்த்சூர் விரைவுத் தொடர்வண்டிக்கு “மால்குடி எக்ஸ்பிரஸ்” என்று பெயரிட்டுள்ளது!!
1980 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆர். கே. நாராயணை கௌரவிக்கும் வகையில் ராஜ்யசபா உறுப்பினராக்கினார். இயல்பாகவே சமூக அக்கறை கொண்ட ஆர். கே. நாராயண் நாடாளுமன்றத்தில் “குழந்தைகள் ஐந்து கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள மூட்டைகளை, முதுகில் சுமந்து செல்கின்றனர்” என்று குழந்தைகளுக்காகப் பரிந்து பேசினார். இவர் பேசியதன் விளைவாக அப்போது இது குறித்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இறுதியாக 1994 ஆம் ஆண்டு அவருடைய பாட்டி அவருக்கு சிறுவயதில் சொன்ன கதைகளைத் தொகுத்து “The Grandma tales” என்ற தொகுப்பை வெளியிட்டார்.

மறைவு
சுமார் அறுபது வருடங்கள் எழுத்துலகில் புகழ் பெற்று விளங்கிய ஆர். கே. நாராயண் அவர்கள் 2001 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி அவருடைய 94 ஆவது வயதில் காலமானார்.
கௌரவங்கள்
ஆர். கே. நாராயண் அவர்கள் பெற்ற விருதுகள் ஏராளம். 1980 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி ஆஃப் லிட்ரேச்சர், “ஏசி பென்சன் மெடல்” என்ற விருதை வழங்கியது. 1964 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மபூஷண் விருதும், 2001 ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருதும் பெற்றார். இரு முறை நோபல் பரிசுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. ஆர். கே. நாராயணை சிறப்பிக்க இந்திய அரசு, மைசூர் – யஷ்வந்த்சூர் விரைவுத் தொடர்வண்டிக்கு அவரது கற்பனை ஊரான மால்குடி பெயரில் “மால்குடி எக்ஸ்பிரஸ்” என்று பெயரிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஆர். கே. நாராயண் நினைவாக சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.
அக்டோபர் 10 – அரை நூற்றாண்டை கடந்து எழுத்துலகில் பயணித்து, தன் எழுத்துக்களால் இன்றும் வாசகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் ஆர். கே. நாராயண் அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்!