28.5 C
Chennai
Tuesday, May 14, 2024

ஒற்றை ஆளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற ‘சரித்திர நாயகன்’ பிடல் காஸ்ட்ரோ வாழ்க்கை வரலாறு

Date:

இழிவான அடிமைத்தனத்தில்
ஒருவன் வாழும்போது
கண்ணீர் துளிகள் மட்டும் போதா!’

– என்ற  வரிகளின் மூலம் கியூபா மக்களின் விடுதலைக்கான சாசனத்தை எழுதியவர் பிடல் காஸ்ட்ரோ.

  • கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி. 2010-ம் ஆண்டிலேயே யுனெஸ்கோ ஆய்வின் படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.
  • 6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி. நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை. 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்.
  • கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.
  • தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு கியூபா. ‘உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா’ என பிபிசி 2006-ல் அறிவித்தது.
  • 2010-ல் 85 சதவீத கியூபா மக்களுக்கு சொந்த வீடுகள் இருந்தன. இன்று வீடில்லாத கியூபாக் குடிமகன் யாருமில்லை. யாருக்கும் சொத்து வரி கிடையாது. வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது

படிக்கப் படிக்க ஆச்சரியமாக இருக்கிறதா? இன்று கியூபா என்ற நாடு இத்தனை சிறப்புடன் இருக்கக் காரணம்,  இந்த பிடல் காஸ்ட்ரோ தான். அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றோ அமெரிக்காவின் 53-வது மாநிலமாகியிருக்கும் கியூபா. அடிமைத் தனத்திருந்து மக்களை விடுவித்து, கியூபாவை மகத்தான தேசமாக மாற்றிய மாபெரும் ஆளுமை பிடல் காஸ்ட்ரோ.

பிடல் காஸ்ட்ரோ வாழ்க்கை வரலாறு
Credit : Toronto star

பிடல் காஸ்ட்ரோ பிறப்பு

கியூபாவின் பிரான் (Birán, Cuba) அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில், 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் ஏஞ்சல் காஸ்ட்ரோ – லினா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பிடல் அல்ஜாந்திரோ காஸ்ட்ரோ. இவரது தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ பெரும் பண்ணையார். பண்ணையாரின் மகனாக எவ்விதக் குறையும் இன்றி வாழ்ந்த போதும், அமெரிக்காவிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தன் நாட்டைப் பற்றிக் கவலையுற்றார் காஸ்ட்ரோ.

பிடல் காஸ்ட்ரோ – கம்யூனிஸ்ட்

தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லாத போதும், தன் மக்களுக்காகப் போராட முன் வருபவனைத் தான் மகத்தான புரட்சியாளனாக வரலாறு தன் பக்கங்களில் பொறித்துக் கொள்கிறது. ஹவானா பல்கலைகழகத்தில், பிடல் படித்துக் கொண்டிருந்த சமயம் இரண்டு முக்கியக் கட்சிகள் மாணவர்களிடையே இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்று கம்யூனிசம், மற்றொன்று ஆர்த்தோடாக்ஸ் இயக்கம். கியூபா மக்களின் விடுதலைக்கு கம்யூனிசம் தான் மிகச் சரியானது என உணர்ந்த பிடல், கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

குற்றம் சாட்டுகிறேன்

1952 – ல் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா என்பவர் கியூபாவின் ஆட்சியைப் பிடித்தார். அதனால், பாடிஸ்டா ஒரு அமெரிக்க கைக்கூலி என்பதையும், அவரின் உண்மையான முகத்தைப் பற்றி மக்களுக்குச் சொல்வதற்காகவும்,  ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார் பிடல். முழுக்க முழுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதையே இலக்காக கொண்டு செயல்பட்டார். அமெரிக்காவுக்கும் அவருக்கும் இடையிலான யுத்தம் தொடங்கியது.

650 முறை கொலை செய்ய முயன்ற அமெரிக்கா..!
ஒரு முறை இருமுறையல்ல 650- க்கும் அதிகமான முறை பிடலைக் கொல்ல முயற்சிகள் செய்தது C.I.A எனப்படும் அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு.

சே குவேரா வருகை – கியூபாவின் விடுதலைக்கான விதை

1953-ம் ஆண்டு மோன்காடா ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்காக இரவில் செல்கின்றனர் பிடல் குழுவினர். திட்டமிட்ட அந்த முதல் தாக்குதல் தோல்வியை சந்திக்கிறது. காஸ்ட்ரோ ராணுவத்திடம் மாட்டிக் கொள்கிறார். பின் சிறையில் அடைக்கப்பட்டு, 1955 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்படுகிறார்.

வரலாறு என்னை விடுதலை செய்யும்
விடுதலையான போது நீதிமன்றத்தில், ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்று பிடல் நிகழ்த்திய உரை தான் பின்நாளில் வெளிவந்த THE HISTORY WILL ABSOLVE ME என்ற புத்தகம்.

இனி இந்தப் போராட்ட முறைகள் சரி வராது என்று முடிவு செய்த பிடல், கொரில்லா யுத்த முறைகளைக் கற்றுக் கொள்ள மெக்சிகோ செல்கிறார். அங்கு தான் ” என் கால்தடம் பதியும் நிலப்பரப்பெல்லாம் என் தேசமே..!” எனச் சொன்ன மாவீரன் சே குவேராவைச்  சந்திக்கிறார் பிடல். கியூபாவின் பிரச்னையை அறிந்த ‘சே’, ‘நானும் உங்களோடு கியூபா வருகிறேன்’ என்று சொல்கிறார். இரண்டு மாபெரும் சக்திகள் இணைந்தது தெரியாமல், அமெரிக்காவும், பாடிஸ்டாவும் கியூபாவில் ஆதிக்க வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

Fidel Castro with Che
Credit : NY daily news

விடுதலையானது கியூபா

1959-ம் ஆண்டு 9,000 கெரில்லா யுத்த வீரர்கள் ஹவானா வழியாக ஊடுருவி பாடிஸ்டாவின்  ராணுவ வீரர்களுடன் யுத்தம் புரிந்தபோது, ‘இனியும் இவர்களோடு சண்டையிட்டு நம்மால் தப்பிக்க இயலாது’ என நினைத்த பாடிஸ்டா கியூபாவை விட்டு தப்பித்து ஓடுகிறார். இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்க காலனி ஆட்சி முறை கியூபாவில் முடிவுக்கு வருகிறது. கியூபாவின் ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறார் பிடல். கியூபா விடுதலைக்குப் பெரும் பங்காற்றியவர் ‘சே’ என பின்நாளில் பிடல் அறிவிக்கிறார். இப்போதும் உலக வழக்கத்தில் ‘சே’வையும் பிடலையும் இப்படிக் கூறுவார்கள்… ‘சிறந்த தலைவன் பிடல் என்றால், ஆகச் சிறந்த தளபதி சே’ என்று.

 கியூபாவுக்கு சொந்தமான எல்லா வளங்களும் கியூபா மக்களுக்கே சொந்தம். வேறு எந்த ஏகாதிபத்தியத்துக்கும் அது கிடையாது’  என அறிவித்தார் பிடல். இதனால் கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இவ்வாறு விடுதலைக்குப் பின்னும் பல சவால்களை சமாளித்து வந்த நாடு தான், இன்று நம் கண் முன்னே பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும் கியூபா.

“இறந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம் தான் புரட்சி!” என முழங்கிய பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த தினமான இன்று, அவரை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!