நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு, அனைத்து தரப்பு மக்களாலும் நன்கு அறியப்பட்ட ஒரு மாபெரும் ஆளுமை ‘கலைஞர் கருணாநிதி.’
தேர்ந்த அரசியல்வாதி, தன்னிகரற்ற தலைவர், எம்.ஜி.ஆர் 1972-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு பிரிந்த பின்பு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் பதவியில் இல்லாமல் இருந்த போதும், கழகத்தை கட்டுக்கோப்பாக வழிநடத்திய முன்னோடி, என்று ஆயிரம் முகங்கள் இருந்தாலும் கலைஞர் என்ற பெயர் தான் அவருக்கு பாந்தமாக பொருந்திப் போனது. அதற்குக் காரணம் மொழி மீதும், கலை மீதும் அவர் கொண்டிருந்த தீராக்காதல். இன்று அவர் மீது விமர்சனங்களை முன் வைக்கும் பலரும் அறிந்தது அரசியல்வாதி கருணாநிதியை மட்டும் தான்.

சிறு வயது முதல் தமிழ்ப்பணி
இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலருக்கு கலைஞர் மேல் இருக்கும் கோபம், ஒரு தலைமுறை மொத்தத்தையும் இந்தி கற்றுக் கொள்ள விடாமல் மூளைச்சலவை செய்தவர் என்ற குற்றச்சாட்டு தான். ஆனால், கலைஞரின் பொது வாழ்விற்கான முதல் படியே அவர் தமிழ் மீது கொண்டிருந்த பற்று தான். நாம் கடவுள் வாழ்த்துப் பாடலை மனப்பாடம் செய்ய போராடிக்கொண்டிருந்த வயதில், மொழியைக் காக்க போராடியவர் கலைஞர் கருணாநிதி.
1937-ல் ஆட்சியில் இருந்த ராஜாஜி அரசு, அரசுப்பள்ளிகளில் இந்திப் படிப்பைக் கட்டாயமாக்கியது. அதைக்கண்டித்து, அப்போதைய பிரதான எதிர்க்கட்சியாக இருந்த நீதிக்கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. 12 வயதிலேயே கலைஞர் கருணாநிதி இந்தப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா, `கலைஞர்’ என்ற அடைமொழியை கருணாநிதிக்கு வழங்கினார்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நீதிக்கட்சியின் தலைவராக இருந்து செயல்பட்ட பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சு அவரைப் பெரிதும் கவர்ந்தது. அதில் ஈர்க்கப்பட்டு தன் பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, `இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தினார். போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்ட அந்த சிறு வயதிலேயே `மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார்.
கலைஞர் – தமிழறிஞர்
இப்படி மொழி நேசத்தில் தொடங்கிய சமூகப்பணிகள் தான் கலைஞரின் அரசியல் வாழ்விற்கு அச்சாரம் அமைத்தன. பின்னாளில் தமிழும், அரசியலும் அவரின் இரு கண்களாகின. தீவிர அரசியலில் இறங்கிய பின்பும், முதலமைச்சர் ஆன பின்பும், ஒரு போதும் கலைஞர் தன் தமிழ்ப் பணியை நிறுத்தவே இல்லை. கலைஞர் எழுதிக் கொண்டே இருந்தார்.
- `நளாயினி’, `பழக்கூடை’, `பதினாறு கதையினிலே’ உள்பட நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். `புதையல்’, `வான்கோழி’. `சுருளிமலை’, `ஒரு மரம் பூத்தது’, `ஒரே ரத்தம்’, `ரோமாபுரிப் பாண்டியன்’, `தென்பாண்டிச் சிங்கம்’, `பாயும்புலி பண்டாரக வன்னியன்’, `பொன்னர் சங்கர்’ ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
- எளிய நடையில் திருக்குறளை ஆய்ந்து எழுதிய `குறளோவியம்’, கலைஞர் கருணாநிதியின் முக்கிய இலக்கியப் பங்களிப்பாகும்.
- `நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை மூன்று தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார்.
- `சங்கத்தமிழ்’, `தொல்காப்பிய உரை’, `இனியவை இருபது’, `மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று’, `மலரும் நினைவுகள்’, `கலைஞரின் கவிதை மழை’, `இளைய சமுதாயம் எழுகவே’ உள்பட 178 நூல்களை கருணாநிதி எழுதியிருக்கிறார்.
- உடன்பிறப்புகளுக்கு இவர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.
திரைத்துறையில் கலைஞர்
`பழனியப்பன்’ என்ற நாடகமே கலைஞர் முதன்முதலில் எழுதிய நாடகமாகும். திருவாரூரில் அந்த நாடகத்தை அறங்கேற்றம் செய்தார். பிற்காலத்தில் இந்த நாடகம் `நச்சுக்கோப்பை’ என்ற பெயரில் தமிழகம் எங்கும் அரங்கேறியது.
`தூக்குமேடை’, `பரபிரம்மம்’, `சிலப்பதிகாரம்’, `மணிமகுடம்’, `ஒரே ரத்தம்’, `காகிதப்பூ’, `நானே அறிவாளி’, `வெள்ளிக்கிழமை’, `உதயசூரியன்’, `திருவாளர் தேசியம்பிள்ளை’, `அனார்கலி’, `சாம்ராட் அசோகன்’, `சேரன் செங்குட்டுவன்’, `நாடகக்காப்பியம்’, `பரதாயணம்’ உள்பட 17 நாடகங்களை எழுதியுள்ளார். `தூக்குமேடை’ நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, `கலைஞர்’ என்ற அடைமொழியை கருணாநிதிக்கு வழங்கினார். அதன்பிறகே இவர், `கலைஞர் கருணாநிதி’ என்று அழைக்கப்பட்டார்.

அதன் பின்னர், கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அந்தப் படத்தின் பெரும்பாலான வசனங்களை கலைஞர் எழுதிய போதும், வசன உதவி மு.கருணாநிதி என்று தான் படத்தின் தலைப்பு வெளியானது.
தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. கோவையில் குடியேறி, “அபிமன்யு” படத்திற்கு வசனம் எழுதினார். கருத்தாழம் மிக்க வசனங்கள் எழுதியும், படத்தில் வசன கர்த்தாவாக அவர் பெயர் இடம் பெறவில்லை.
திரைத்துறையின் தவிர்க்கமுடியா அங்கம் கலைஞர்
அந்த சமயத்தில் தான், ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “மந்திரிகுமாரி” என்ற நாடகத்தை கருணாநிதி உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம்.
திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கலைஞர் கருணாநிதியிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர். அதன்பின்பு தான் வசனங்களுக்காகவும் திரைப்படங்கள் வெற்றியடையத் தொடங்கின. தமிழ்த்திரையுலகின் தவிர்க்க முடியாத வசன ஆசிரியராக மாறினார் கலைஞர்.
பழைய படங்களைப் பார்க்க விரும்பாத இன்றைய இளைய தலைமுறையினரும், கலைஞரின் வசனத்தில் வெளியான திரைப்படங்களை கண்டிப்பாக ரசிப்பார்கள். கலைஞரின் தமிழ் ஆர்வத்திற்கும். தமிழை நேர்த்தியாகக் கையாளும் மொழி வன்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்தவை மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா, பூம்புகார் ஆகிய திரைப்படங்கள்..
மந்திரிகுமாரி திரைப்படத்தில், நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல் இது
“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”
“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”
“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”
“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”
“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.
“கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?” இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.
காணும் அனைத்தையும் கலையாக்கியவர் தான் கலைஞர். இன்று வரை, மேடைப்பேச்சுகளிலும், இலக்கியத்திலும், அரசியலிலும் தேர்ந்த ஒரு மனிதரை நம் நாடு கண்டதில்லை என்று தான் சொல்ல வேண்டும். அருஞ்சொல் வித்தகர், யுக நாயகர் கலைஞர் கருணாநிதியை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.