மைக்கேல் ஃபாரடே அவர்கள் ஒரு அறிவியல் விஞ்ஞானி. மின் காந்தவியல், மின் வேதியியல் ஆகிய துறைகளில் பல புதிய கொள்கைகளை கண்டறிந்தவர். இன்று நாம் பயன்படுத்தும் மின் சாதனங்களை நாம் விரும்பும் படி இயக்க உதவும் டைனமோவையும், டிரான்ஸ்பார்மரையும் கண்டுபிடித்தவர்.

மைக்கேல் ஃபாரடே பிறப்பு
மைக்கேல் ஃபாரடே அவர்கள் 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இங்கிலாந்தில் லண்டனில் உள்ள நியுயிங்டன் பட்ஸ் என்ற இடத்தில பிறந்தார். இவரது தந்தை ஜேம்ஸ் ஃபாரடே ஒரு கொல்லர். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் ஃபாரடேவிற்கு கல்வி கற்பது என்பது சவாலான ஒன்றாகவே இருந்தது.
புன்சன் சுடர் அடுப்பின் ஆரம்ப வடிவத்தை கண்டுபிடித்தவர் மைக்கேல் ஃபாரடே!!
இளமைப் பருவம்
ஒரு கட்டத்தில் அவரைப் படிக்க வைக்க அவரது குடும்பத்தால் முடியவில்லை. விளைவு, 14 ஆம் வயதில் புத்தகங்களை பைண்டிங் செய்து தெருக்களுக்கு சென்று விற்கும் வேலையில் சேர்ந்தார். ஆனால் படிப்பில் ஆர்வமாக இருந்த ஃபாரடே புத்தகங்களை விற்பதற்கு முன்பு முடிந்தவரை படித்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதிலும் அவர் தேடித்தேடி படித்த புத்தகங்கள் எல்லாமே அறிவியல் புத்தகங்களாகவே இருந்தன. இதனால் அறிவியலிலும், குறிப்பாக மின்னியலில் அவருக்கு ஆர்வம் வளர்ந்தது. அறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற இந்த ஆர்வம் தான் பிற்காலத்தில் அவரை அனைவரும் புகழும் விஞ்ஞானியாக்கியது!!
விஞ்ஞானி வாய்ப்பு
அப்போதைய காலத்தில் பிரபலமாக இருந்த வேதியியல் விஞ்ஞானியான ஹம்ப்ரி டேவியின் விரிவுரை ஒன்றை கேட்ட ஃபாரடேவிற்கு அறிவியல் ஆர்வம் மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. டேவி கூறியதை அப்படியே முழுமையாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்த ஃபாரடே விரிவுரை முடிந்ததும் வீட்டிற்கு வந்து குறிப்புகளை மீண்டும் தெளிவாக எழுதி சில வரைபடங்களை வரைந்து அதனை பைண்ட் செய்து டேவிக்கு அனுப்பி வைத்தார். இதனை கண்ட டேவி ஃபாரடேவிடம் திறமை இருப்பதை உணர்ந்து கொண்டார். ஒரு வேதியியல் சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் கண்பார்வை இழந்த டேவி, ஃபாரடேவை தன் உதவியாளராக சேர்த்துக் கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஃபாரடேவும் அவரது ஆராய்ச்சிகளுக்கெல்லாம் உதவி புரிந்து விரிவுரைகளுக்கும் அவருடன் செல்ல ஆரம்பித்தார். முதலில் உதவியாளராக இருந்த ஃபாரடே விரைவில் ஒரு விஞ்ஞானியாக வளர ஆரம்பித்தார்.

மைக்கேல் ஃபாரடே கண்டுபிடிப்புகள்
ஆரம்பத்தில் வேதியியலில் ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ஃபாரடே, குளோரின் மற்றும் கார்பன் ஆகியவற்றை கொண்டு இரண்டு புதிய வேதியியல் கலவைகளை கண்டுபிடித்தார். வாயுக்களின் பரவலைப் பற்றிய முதல் கடினமான பரிசோதனையும் அவர் நடத்தினார். பல வாயுக்களை திரவமாக்கினார். பல புதிய வகையான கண்ணாடிகளை ஒளியியல் நோக்கங்களுக்காக உருவாக்கினார். இவை தான் தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது உலகம் முழுவதும் உள்ள ஆய்வுக்கூட சோதனைச் சாவடிகளில் பொருட்களை சூடாக்குவதற்கு பயன்படும் புன்சன் சுடர் அடுப்பின் ஆரம்ப வடிவத்தை கண்டுபிடித்தார்.
கார்பன் மற்றும் குளோரின், C2Cl6 மற்றும் C2Cl4 ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட கலங்களின் முதல் தொகுப்பை ஃபாரடே 1820 ஆம் ஆண்டில் வெளியிட்டார், மேலும் அடுத்த ஆண்டு தனது முடிவுகளை வெளியிட்டார். 1810 ஆம் ஆண்டில் ஹம்ப்ரி டேவினால் கண்டுபிடிக்கப்பட்ட குளோரின் க்ளேரேட் ஹைட்ரேட் தொகுப்பை ஃபாரடே நிரூபித்தார். உலோகங்களை பிரித்தெடுக்கும் மின்பகுப்பு முறையை செம்மைப்படுத்தினார்.
மின்காந்தவியல்
ஃபாரடே சோதனைச் சாலையில் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். குறிப்பாக, மின்சாரம், காந்தம் துறைகளில் இவருக்கு அதிக ஆர்வம் இருந்ததால் மின்சாரத்தின் விளைவுகள் குறித்து ஆராய்ந்து கொண்டே இருந்தார். மின்சாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஃபாரடேக்கு முன்பும் பலர் பல முயற்சிகளைச் செய்துள்ளனர். ஆனால் இவருடைய கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் விட மேம்பட்டதாக இருந்தன. 1821 ஆம் ஆண்டு மின் மோட்டாரை உருவாக்கினார். 1831 ஆம் ஆண்டு காப்பிடப்பட்ட தாமிரக்கம்பி சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்சக்தி உற்பத்தியாகிறது என்பதை கண்டுபிடித்து வெளியிட்டார். மின்காந்த தூண்டலைக் கண்டுபிடித்த ஃபாரடே காந்தப்புலனும் மின்சாரமும் எத்தகைய தொடர்புடையவை என்பதையும் நிரூபித்தார்.
சர் ஹம்ப்ரி டேவிடம் “உங்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் மைக்கேல் ஃபாரடே!!
25 ஆண்டுகள் கடுமையாக உழைத்து மின்சாரத்தின் வேகத்தை மாற்ற உதவும் டிரான்ஸ்பார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். இன்று நாம் பயன்படுத்தும் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கணினி, குளிர்சாதனப்பெட்டி, சமையல் கருவிகள் என எல்லா மின்கருவிகளுக்கும் அடிப்படையாக விளங்குவது ஃபாரடே கண்டுபிடித்த டைனமோ தான்.
இவரது “ஃபாரடே விளைவு” தான் இன்றைக்கும் மூலக்கூறுகளின் வடிவத்தை விளக்கப் பயன்படுகிறது.
சிறப்புகள்
ஏழையாக பிறந்ததால் பணத்தின் மதிப்பை அறிந்தவர் என்றாலும் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட ஃபாரடே தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவோ அவற்றை கொண்டு பணம் சம்பாதிக்கவோ முயலவில்லை. தன் ஏழ்மையான இளமை காலத்தை மறக்காத ஃபாரடே தன்னைப் போன்ற ஏழைச் சிறுவர்களும் அறிவியலில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக லண்டன் ராயல் கழகத்தில் “கிறிஸ்துமஸ் விரிவுரைகள்” என்ற தொடரை ஆரம்பித்து வைத்து விரிவுரை வழங்கத் தொடங்கினார். அன்று அவர் தொடங்கியது “ஃபாரடே விரிவுரைகள்” என்று இப்போதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் பல்லாயிரம் மாணவர்கள் பலன் அடைகிறார்கள்.

இவரை தேடி சர் பட்டமும், ராயல் கழகத்தின் தலைவர் பதவியும் வந்தன. ஆனால் எளிமையின் மறு உருவமாக இருந்த ஃபாரடே “நான் மைக்கேல் ஃபாரடேவாகவே இருக்க விரும்புகிறேன்” என்று கூறி இரண்டையுமே மறுத்துவிட்டார்.
அடிப்படையில் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய ஃபாரடே “மெழுகுவர்த்தியின் வேதியியல் வரலாறு” என்ற புத்தகத்தை எழுதினார். இது எளிய மனிதர்களும் அறிவியலை புரிந்து கொள்ளும் படி இருந்தது.
சர் ஹம்ப்ரி டேவிடம் “உங்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் மைக்கேல் ஃபாரடே!!
மறைவு
இறுதிவரை எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்த மைக்கேல் ஃபாரடே 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி அவருடைய 76 ஆவது வயதில் காலமானார்.
செப்டம்பர் 22 – வறுமையோடு பிறந்த போதும் கிடைத்த வாய்ப்புகளை தனக்கேற்றபடி பயன்படுத்தி ஒரு விஞ்ஞானியாக வளர்ந்து எளிமையாக வாழ்ந்த மைக்கேல் ஃபாரடேவின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது நியோதமிழ்!