28.5 C
Chennai
Friday, February 23, 2024

வீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி வரலாறு!

Date:

  • யுரேனியத்தை விடப் பல லட்சம் மடங்கு கதிர்வீச்சு உடைய தனிமத்தை கண்டுபிடித்தவர்.
  • இவரது பெயரில் வேதியியல் தனிமத்திற்கு கியூரியம் (Curium) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கதிரியக்க அலகுகளில் (Radioactivity units) ஒன்று, கியூரி (Curie) என அழைக்கப்படுகிறது. 
  • இவரது கண்டுபிடிப்புகள் தான் புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னோடி.

மேடம் மேரி கியூரி ஒரு இயற்பியல், வேதியியல் விஞ்ஞானி. உலகத்தின் முதல் பெண் அறிவியலாளர். கதிர்வீச்சு என்ற அறிவியல் கோட்பாட்டில் முக்கிய விளைவுகளை அறிமுகப்படுத்தியவர். அவர் கண்டுபிடித்த ரேடியம் (Radium) புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோபல் பரிசு வரலாற்றில் அந்த பரிசை பெற்ற முதல் பெண் மேரி கியூரி தான். அதே போல முதன் முறையாக நோபல் பரிசை இரண்டு முறை அதுவும் வெவ்வேறு துறைகளில் வென்றவரும் அவர் தான். 

மேரி கியூரி வரலாறு
மேரி கியூரி | Credit: Women and Hollywood

மேரி கியூரி பிறப்பு

மேரி கியூரி 1867 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி போலந்து நாட்டில் வார்ஸா என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை வ்லேடிஸ்லாவ் ஸ்க்லோடோவ்ஸ்கி உயர்நிலைப்பள்ளியில் இயற்பியல், கணக்குப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார். அதனாலேயே மேரி கியூரிக்கு அறிவியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இவரது தாய் பிரோநிஸ்லவா புகழ் பெற்ற பியானோ ஆசிரியையாக இருந்தார். மேரிகியூரிக்கு இவரது பெற்றோர் வைத்த பெயர் மரியா சலோமியா ஸ்க்லோடோவ்ஸ்கா (Marie Salomea Sklodowska). உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் இருந்த மேரி கியூரியின் குடும்பத்தில் வறுமையை தவிர வேறு எதுவுமே அதிகமாக இல்லை. போதா குறைக்கு மேரி கியூரிக்கு தனது 12 வயதில் தந்தையை இழக்கும் கொடுமையும் நிகழ்ந்தது.  

ஒரே குடும்பத்திலேயே தாய், தந்தை, மகள், மருமகன் என நால்வரும் நோபல் பரிசு பெற்ற சாதனை மேரி கியூரி குடும்பத்தில் மட்டுமே இதுவரை நடந்துள்ளது!

கல்வி

மேரி கியூரி சிறு வயது முதலே பெண்களை அடக்கி வைக்கும் அப்போதைய கலாசாரத்திற்கு எதிராக யோசிப்பவராக இருந்தார். உயர்நிலைப் பள்ளித் தேர்வில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் வென்றார். உயர் கல்வியில் அறிவியல் படிக்க வேண்டும் என ஆசைப்பட்ட மேரி கியூரிக்கு படிக்க முடியாமல் தடங்கல் ஏற்பட முக்கிய காரணம் அவர் பெண்ணாக பிறந்தது தான். ஆம்! அவர் பெண் என்பதால் போலந்து நாட்டில் எந்த கல்வி நிறுவனமும் இவருக்கு இடமளிக்கவில்லை. இவருடைய அக்கா பிரானிஸ்லவாவிற்கும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை.

மொத்தத்தில் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று தான் படிக்க முடியும் என்ற நிலையில் குடும்ப பொருளாதார நிலை படிப்பது என்பது முடியாத காரியம் என்றது. ஆனாலும் படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் இருவரும் ஒரு முடிவிற்கு வந்தனர்.அதாவது முதலில் மேரி கியூரி வேலைக்குச் சென்று பிரானிஸ்லவாவிற்கு படிப்புச் செலவுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றும், அவர் மருத்துவ படிப்பை முடித்தவுடன் மேரி கியூரி அறிவியல் படிக்க உதவி செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். இதனால் மேரி கியூரி பணக்காரர்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் டியூசன் சொல்லிக் கொடுத்தும் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை பார்த்தும் தன் அக்கா படிப்பதற்கு பணம் அனுப்பினார்.இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, 6 ஆண்டுகளாக அக்காவிற்கு பணம் அனுப்பினார்.

பாரிஸ் பயணம்

அதன் பிறகு அக்காவின் அழைப்பை ஏற்று, 1891 ஆம் ஆண்டு தனது 24 ஆம் வயதில் மேற்படிப்பு படிப்பதற்காக பாரீஸ் சென்றார். அங்கு சோர்போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம் பயின்றார். அவர் அக்கா படிப்பு செலவுகளை பார்த்து கொண்டார் என்றாலும் ஏழ்மை மட்டும் இவர்களில் இன்னும் விடவில்லை. அதனால் பகுதி நேர வேலைகள் பார்த்து சொற்ப சம்பளத்தில் எளிமையாக வாழ்க்கை நடத்தினார். பல நேரங்களில் உணவுக்கே கஷ்டப்பட்டார். ஆனாலும் மேரி கியூரி நன்கு படித்துக் கல்லூரியில் 1893 ஆம் ஆண்டு முதல் மாணவியாக இயற்பியலில் பட்டம் பெற்றார். அதே போல அடுத்த ஆண்டே கணிதத்தில் பட்டம் பெற்றார்.

Marie Curie and Pierre Curie
பியரி கியூரி மற்றும் மேரி கியூரி | Credit: History Arch

திருமணம்

அதன் பின் லிப்மன் ஆய்வுக் கூடத்தில் வேலையில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார். அப்போது தான், அங்கு ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருந்த பியரி கியூரியைச் சந்தித்தார். பியரி கியூரியும் ஒரு இயற்பியல் விஞ்ஞானி தான். இருவருக்கும் காதல் ஏற்படவே 1895 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டனர். 

ஆராய்ச்சிகள்

1895 ஆம் ஆண்டு ராண்ட்ஜன் (Roentgen) X – கதிர்களைக் கண்டுபிடித்த போது அது எப்படி உருவாகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. X – கதிரின் கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து பிரெஞ்சு அறிவியலறிஞர் ஹென்றி பெக்கொரல் (Henry Becquerel) யுரேனியம் கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதை கண்டுபிடித்தார். அவரிடம் மேரி கியூரி உதவியாளராகச் சேர்ந்து அதே துறையில் மேரி கியூரியும் அவர் கணவரும் ஆய்வு செய்து வந்தனர்.இன்னும் சில உலோகங்களிலும் இந்த கதிர்வீச்சு ஏற்படலாம் என எண்ணி ஆய்வுகள் நடத்தினர். முனைவர் பட்டம் பெற விரும்பிய மேரி கியூரி அதற்காக யுரேனியத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.

யுரேனியம் தவிர தோரியம் போன்ற சில தனிமங்களுக்கு கதிரியக்க சக்தி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இருவரும் கதிரியக்கத் தாதுக்களுள் ஒன்றான பிட்ச்பிளெண்ட் (Pitchblende) என்ற பொருள் மீது ஆய்வுப்பணியை மேற்கொண்டனர். இதில் பிரச்னை என்னவென்றால், அந்நாளில் பிட்ச்பிளெண்ட் மிகவும் மதிப்பு வாய்ந்த, எளிதில் கிடைக்காத தாதுப்பொருளாக விளங்கியது. எப்படியோ பல முயற்சிகளுக்கு பின் பொஹீமியா சுரங்கத்தில் யுரேனியம் எடுக்கப்  பட்டு எஞ்சிய பிட்ச்பிளெண்ட் கழிவுச் சாம்பல் ஒரு டன், அவர்களுக்கு கிடைத்தது. அதை  செய்ய அவர்களிடம் சரியான ஆய்வுக்கூடம் கூட இல்லை. உரிய கருவிகள், உபகரணங்கள் இவர்களிடம் கிடையாது. ஒரு இடிந்து போன ஒரு மரப் பட்டறையில், எளிமையாக மண்ணைக் கரைத்து, கொதிக்க வைத்து பக்குவம் செய்து, சளைக்காமல் ஆய்வு செய்தனர். அவர்களது தொடர்ச்சியான ஆய்வின் பலனாக ஒரு புதிய தனிமத்தை கண்டறிந்தனர். அது யுரேனியத்தைப் போல 400 மடங்கு ஆற்றல் கொண்டு இருந்தது. அந்த தனிமத்திற்கு, தான் பிறந்த போலந்து நாட்டின் நினைவாக “பொலோனியம்” என்று பெயர் வைத்தார் மேரி கியூரி.

ரேடியம்

இரண்டாவதாக புற்றுநோய்க்கு சிகிச்சைக்குப் பயன்படும் ரேடியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தனர். இது யுரேனியத்தை விடப் பல லட்சம் மடங்கு கதிர்வீச்சு உடையது.ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிய பியரி கியூரி தன் உடலின் மேல் அதனைப் பயன்படுத்திப் பார்த்தார். முதலில் எரிச்சல் உண்டானது. பின்னர் புண் ஏற்பட்டது. அதே சமயம் ரேடியத்தைப் பயன்படுத்திப் புண்களைக் குணமாக்கவும் முடியும் எனக் கண்டறிந்தனர். இதற்குக் கதிரியக்க சிகிச்சை அல்லது ரேடியம் சிகிச்சை என்று பெயர். மேலும் ரேடியம் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. பாக்டீரியா மற்றும் நுண்ணிய கிருமிகளை அழிக்கக்கூடியது, விதைகள் முளை விடுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது, சில தோல் நோய் சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது.     

ரேடியத்தையும், இயற்கையான கதிரியக்கத்தையும் கண்டுபிடித்ததற்காக, மேரி கியூரி, பியரி கியூரி, ஹென்ரி பெக்குவரல் மூவருக்கும் 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது. ரேடியத்திற்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்றாலும் சுயநலமே இல்லாத இவர்கள் காப்புரிமை கூட பெறவில்லை. இருவரும் தூய ரேடியத்தை பிரித்தெடுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

Marie Curie research
மேரி கியூரி | Credit: Infinite Fire

பியரி இறப்பு

1906 ஆம் ஆண்டு ஏற்கனவே கதிரியக்கத்தின் தாக்கத்தாலும், கடும் உழைப்பாலும் உடல் பாதிப்படைந்திருந்த பியரி கியூரியை எதிர்பாரத விதமாக ஒரு குதிரை வண்டி மோதித் தள்ளியதில் அவர் காலமானார். அதனால் மிகவும் வருத்தமடைந்த மேரி கியூரி Anhedonia என்ற மனநோயால் பாதிக்கப்பட்டார்.தனது ஆராய்ச்சியை தனியாக தொடரும் நிலையும், இரண்டு குழந்தைகளை தனியாக வளர்த்தெடுக்கும் பொறுப்பும் மேரி கியூரிக்கு ஏற்பட்டது. மேரி கியூரியுடன் பணியாற்றும் இன்னொரு நபருடன் அவரை இணைத்துப் பேசி வார்த்தையால் காயப்படுத்தினர். சிறிதுகாலம் சோகத்தில் இருந்த மேரி, பின்னர் உறுதியுடன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அவர் கணவர் பணியாற்றி வந்த பாரிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. அந்தப் பணியை செய்த முதல் பெண்மணி மேரி கியூரி தான். ரேடியக் கூட்டுப் பொருளின் படிவங்களை பிரித்தெடுத்து, ஒரு வழியாக ரேடியத்தை தனியாகப் பிரித்தார். இந்த ஆய்வின் போது தன் உடலில் பாயும் கதிர்வீச்சால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்று தெரிந்த போதும் பலருக்கும் வாழ்வளிக்கும் ஆராய்ச்சி என்பதால் தன் உடலைப் பற்றி கவலைப்படாமல் ஆய்வைத் தொடர்ந்தார். 

ரேடியத்தை பிரித்து, அதன் அணு எடையை அளக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக 1911 ஆம் ஆண்டு வேதியியளுக்கான நோபல் பரிசு விருது மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டு பாரிஸில் அவர் ரேடிய கழகத்தை நிறுவினார். ரேடியம் கண்டுபிடிப்புக்குப் பிறகு அதனைப் பயன்படுத்தி மருத்துவசேவை புரிவதிலும் மேரி கியூரி ஈடுபட்டார். முதல் உலகப்போரில் ரேடியத்தைப் பயன்படுத்தி ராணுவ வீரர்களின் உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றினார். நடமாடும் எக்ஸ்ரே வண்டிகளை இயக்கிப் போர்வீரர்களின் உடலில் குண்டு பாய்ந்த இடங்களைக் கண்டு பிடித்து உடனுக்குடன் சிகிச்சை அளிக்க உதவினார். 

மகள்கள்

மேரி – பியரி தம்பதியினருக்கு 1897 ஆம் ஆண்டு மேரி கியூரிக்கு ஐரின் கியூரி என்ற மகளும்,1904 ஆம் ஆண்டு ஈவ் கியூரி என்ற மகளும் பிறந்தனர்.
ரேடியத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை இன்னும் கண்டறிய வேண்டும் என்று விரும்பிய மேரி கியூரி தனது மகள் ஐரினையும் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமூட்டினார். அவரது மகளும்  ஐரின் கியூரியும் பிற்காலத்தில் மிகுந்த வெற்றிகரமான விஞ்ஞானியாகிய ஜீன் ஃபிரடரிக் ஜோலியட் என்பவைரத் திருமணம் செய்து கொண்டார். இவ்விருவரும், இணைந்து கதிரியக்கம்பற்றி தொடர்ந்து ஆராய்ந்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டாக்கும் வழியைக் கண்டுபிடித்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்காக, ஐரின் கியூரிக்கும் அவரது கணவருக்கும் 1935 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது மகள் ஈவ் கியூரி, சிறந்த இசைச் கலைஞராகவும் எழுத்தாளராகவும் புகழ் பெற்றார். ஒரே குடும்பத்திலேயே தாய், தந்தை, மகள், மருமகன் என நால்வரும் நோபல் பரிசு பெற்ற சாதனை மேரி கியூரி குடும்பத்தில் மட்டுமே இதுவரை நடந்துள்ளது.

Marie Curie and her daughters
மேரி கியூரி மற்றும் அவரது குழந்தைகள் | Credit: My Heritage

இறப்பு

மேரி கியூரியின் கண்டுபிடிப்புகளால் தான் புற்றுநோய்க்கு சிகிச்சை பிறந்தது. பல புற்று நோயாளிகளின் வாழ்க்கையை மீட்டுத் தர உதவிய அந்த கண்டுபிடிப்பு தான் அவரது வாழ்க்கையும் முடித்து வைத்தது. பல ஆண்டுகள் ரேடியத்தோடு ஆராய்ச்சி செய்ததால் அவருக்கு கடும் கதிரியக்க தாக்கம் ஏற்பட்டது. அவரது ஆராய்ச்சி கூடமே கதிரியக்கத்துடன் தான் இருந்தது. இதனால் அவர் குறைப்பிறப்பு இரத்த சோகை என்ற நோயால் பாதிக்கப்பட்டார். கிட்டதட்ட தனது விரல்களையும், கண் பார்வையையும் இழந்த நிலையில் 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது 67 ஆவது வயதில் காலமானார்.

என்ன செய்து முடிக்கப்பட்டது என்பதை ஒருவர் கவனிக்க வேண்டியதில்லை! இன்னும் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்! – மேரி கியூரி 

சிறப்புகள்

மனித குலத்திற்கு இவர் ஆற்றிய இவரது அளப்பரிய சேவையைப் போற்றி ஒரு வேதியியல் தனிமத்திற்கு கியூரியம் (Curium) எனப் பெயர் வைக்கப்பட்டது. மேலும் கதிரியக்க அலகுகளில் (Radioactivity units) ஒன்று, கியூரி (Curie) என அழைக்கப்படுகிறது. பெண்களை வளர விடாமல் தடுத்த அந்த காலத்திலேயே மேரி கியூரி அறிவியலில் இவ்வளவு சாதிக்க காரணம், வறுமையிலும் ஒளிர்விட்ட அவரது தன்னம்பிக்கையும், விடா முயற்சியும், முற்போக்கு சிந்தனைகளும், பெண்ணியத்தை மதிக்க தெரிந்து தன் மனைவிக்கு பக்க பலமாக நின்ற பியரி கியூரியும் தான்!!

தன் உடல் நிலையை பற்றியும் அக்கறை கொள்ளாமல், புற்றுநோயின் என்ற அரக்கனின் கோரப்பிடியிலிருந்து மனித இனத்தை மீட்க வழி செய்த மேரி கியூரியின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறது நியோதமிழ்!!    

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!