சுப்பிரமணிய பாரதியார் தன் கவிதைகள் வாயிலாக சுதந்திர தாகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியவர். புதுக் கவிதைகளின் முன்னோடி, சமூக சீர்திருத்தவாதி, பெண்ணுரிமைப் போராளி, சிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்.
1949 ஆம் ஆண்டு பாரதியாரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
பிறப்பு
பாரதியார் அவர்கள் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி சின்னசாமி அய்யருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் (அப்போதைய திருநெல்வேலி மாவட்டம்) உள்ள எட்டயபுரம் என்னும் ஊராகும். சுப்பிரமணியன் என்னும் பெயரே இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர். 1887 ஆம் ஆண்டு இவரது தாய் இறந்த பின்பு அவரது பாட்டியுடன் தான் வளர்ந்தார். இளமையிலேயே தமிழ் மீது இவருக்கு சிறந்த புலமையும், பற்றும் இருந்ததால் தனது பதினோராம் வயதில் பள்ளியில் படிக்கும் போதே கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவரது கவித் திறனைப் பாராட்டி எட்டயபுர மன்னர் இவருக்கு கலைமகள் எனப் பொருள் படும் ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

Credit: Stage 3
இளமைப் பருவம்
இவரது பதினான்காம் வயதிலேயே இவருக்கு செல்லம்மாள் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் பிற்காலத்தில் தன் கவிதைகள் மூலம் பாலியல் திருமணங்களை எதிர்த்தார். 1898 ஆம் ஆண்டு அவரது தந்தை இறப்புக்கு பின் கடும் வறுமையை சந்தித்தார். அதன் பிறகு காசியில் சில காலம் தங்கிவிட்டு பின் எட்டயபுரம் மன்னனின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராகப் பணிபுரிந்தார். பின்பு 1904 ஆம் ஆண்டு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது இவர் எழுதிய பாடல் “விவேகபானு” இதழில் வெளியானது.
தமிழ் மொழிப் பற்று
இளமையிலேயே தமிழ் மொழி மேல் இவருக்கு அதிக பற்று இருந்தது. அதனால் தான் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் நன்கு புலமை பெற்று இருந்த போதும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என்று பாடினார். பல மொழிகளில் வெளிவந்த சிறந்த படைப்புகளைத் தமிழாக்கம் செய்தார். 1912 ஆம் ஆண்டு பகவத்கீதையை தமிழில் மொழிபெயர்த்தார்.
பணிபுரிந்த இதழ்கள்
சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி (மகளிர் மாத இதழ்), இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் போன்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் பணியாற்றி உள்ளார்.
விடுதலை போராட்டத்தில் பங்கு
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்கு மிக அதிகம். இவர் “இந்தியா” பத்திரிக்கை மூலம் எழுதிய கட்டுரைகள் மக்களிடையே சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தியதைக் கவனித்த ஆங்கிலேய அரசு அந்த பத்திரிக்கையை தடை செய்தது. மேலும் பாரதியாரை கைது செய்து 34 நாட்கள் சிறையிலும் அடைத்தது. சுதந்திரப் போராட்டத்தை பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி இவர் எழுதியதே “பாஞ்சாலி சபதம்”. சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுகள் மூலம் மக்களை ஒன்றிணைத்ததால் இவர் “தேசியக் கவி” என்று அழைக்கப்படுகிறார். ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்தார் பாரதியார்.
புதுக்கவிதைகள்
இவருக்கு முன்பு இருந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் வழுவாமல் கவிதைகள் எழுதிய நிலையில் இவர் புதுக்கவிதைகளை அறிமுகம் செய்தார். இவரது கவிதைகள் சிறியவர் முதல் முதியவர் வரை அனைவருக்கும் உதவும் அறிவார்ந்த கவிதைகளாகவே இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டு பாப்பா பாட்டு.
விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தனது குருவாக ஏற்றார் பாரதியார்.
படைப்புகள்
குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, சுயசரிதை, தேசிய கீதங்கள், பாரதி அறுபத்தாறு, ஞானப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், விடுதலைப் பாடல்கள், விநாயகர் நான்மணிமாலை, பாரதியார் பகவத் கீதை, பதஞ்சலியோக சூத்திரம், நவதந்திரக் கதைகள், உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு, ஹிந்து தர்மம், சின்னஞ்சிறு கிளியே, ஞான ரதம், பகவத் கீதை, சந்திரிகையின் கதை, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, பொன் வால் நரி மற்றும் ஆறில் ஒரு பங்கு ஆகியவை பாரதியாரின் படைப்புகள்.
பெண்ணுரிமைப் போராளி
விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தனது குருவாகக் கருதிய பாரதியார் பெண்ணுரிமைக்காகப் போராடினார். பெண்ணடிமை, சாதிப் பிரச்சனைகள் ஓங்கி இருந்த காலத்திலேயே பாரதியார் துணிச்சலுடன் இவற்றை எதிர்த்தார்.”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என பெண்ணுரிமை பேசினார். இளமை மணம், சதி, வரதட்சணை, கைம்பெண் கொடுமை, ஆகியவற்றை எதிர்த்தும், பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றை வலியுறுத்தியும் கட்டுரைகள் வெளியிட்டார். “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற இவர் சாதி பாகுபாடின்றி அனைவரிடமும் பழகினார்.
மறைவு
1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்ற போது கோவில் யானையால் தாக்கப்பட்டு பலத்த காயமுற்று நோய்வாய்ப்பட்டார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அவரது 39 ஆம் வயதில் காலமானார்.

நினைவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு பாரதியாரை போற்றும் வகையில் எட்டயபுரம், சென்னை, திருவல்லிகேணி மற்றும் புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லங்களை அவரின் நினைவு இல்லங்களாக மாற்றி இன்று வரை பராமரித்து வருகிறது. மேலும் எட்டயபுரத்தில் பாரதியாரின் நினைவாக மணிமண்டமும், அவரது திருவுருவச்சிலையும் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்பட கண்காட்சியும் அங்கு உள்ளது. 1949 ஆம் ஆண்டு பாரதியாரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதல் முறையாக நாட்டுடைமை ஆக்கப்பட்டவை பாரதியாரின் இலக்கியங்களே!
டிசம்பர் 11 ஆம் தேதி மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி .