Home இந்த வார ஆளுமை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வெறிநாய்க் கடிக்கு தடுப்பூசி கண்டுபிடித்த “நுண்ணுயிரியலின் தந்தை” லூயி பாஸ்டர் கதை!

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வெறிநாய்க் கடிக்கு தடுப்பூசி கண்டுபிடித்த “நுண்ணுயிரியலின் தந்தை” லூயி பாஸ்டர் கதை!

லூயி பாஸ்டர் அவர்கள் ஒரு வேதியியல் அறிஞராக தமது ஆராய்ச்சிகளைத் துவக்கியவர். ரேபிஸ், ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்குத் தடுப்பு மருந்துகளையும், நொதித்தல் விளைவை கட்டுப்படுத்தும் வழிமுறையையும் கண்டுபிடித்தவர்.

Louis Pasteur doing research
Credit: Daily Telegraph

பிறப்பு மற்றும் கல்வி 

லூயி பாஸ்டர் அவர்கள் 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள டோல் (Dole) என்ற ஊரில் பிறந்தார். லூயி பாஸ்டர் 1831 ஆம் ஆண்டு தொடக்க கல்வியை பயில ஆரம்பித்த போது அவரது ஆர்வம் ஓவியம் வரைவதிலும் மீன் பிடிப்பதிலும் இருந்தது. இதனால் அவர் ஒரு சராசரி மாணவராகவே இருந்தார். 1840 ஆம் ஆண்டு இளநிலைப் பட்டமும், 1845 ஆம் ஆண்டு அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அதன் பிறகு ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் (University of Strasbourg) வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்த போது பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.

நொதிப்புத் தன்மைக்கு காரணம் நுண்ணுயிரிகள். அவற்றை நுண்ணோக்கிகள் மூலம் மட்டுமே காண இயலும். நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வெப்பத்தினால் கட்டுப்படுத்த முடியும்!

வேதியியல் 

டார்ட்டாரிக் அமிலப் படிகங்களை ஆய்வு செய்து படிகங்களின் தட்டை முகங்கள் (Facets) வலப்புறம், இடப்புறம் ஆகிய இரு வகைகளிலும் அமைந்திருப்பதைப் பாஸ்டர் கண்டறிந்தார். இது தான் ஒளியியற் சமபகுதியம் (Optical Isomer) என்ற தீர்மானத்துக்கு வழிவகுத்தது.

நுண்ணுயிரியியல் 

நொதித்தல் (Fermentation) பற்றிய அடிப்படை அறிவு பாஸ்டர் காலத்தில் இருந்தாலும் (பால் புளித்து கெட்டுப் போவதற்கும் நொதிப்புத் தன்மையே காரணம்) நொதிப்புத் தன்மை எத்தகைய  நிலைமைகளில் உருவாகிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. பாஸ்டர் இத்துறையில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு நொதிப்புத் தன்மைக்கு நுண்ணுயிரிகள் தான் காரணம் என்று கண்டறிந்தார். அவற்றை நுண்ணோக்கிகள் மூலம் மட்டுமே காண இயலும் என்றும் அந்த நுண்ணுயிரிகளை வெப்பத்தினால் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் விளக்கினார். இதன் அடிப்படையில் தான் பாஸ்டராக்கம் (Pasteurization) எனும் முறை உருவானது.

இத்தாலி நாட்டு அரசு தமது நாட்டில் பட்டு உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு, பாஸ்டர் பெயரைச் சூட்டி நன்றி தெரிவித்துக் கொண்டது.

பாலைக் கெட்டுப் போகாமல் பதப்படுத்துவதற்கு இம்முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. பாலில் அதிக அளவு உள்ள நோய் உண்டாக்கும் பாக்டிரியாக்களை அழித்து, அவற்றின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதனால், பாலில் உள்ள சத்துக்கள் குறையாமல் காக்கப்படுகின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பாலைக் கெடாமல் பாதுகாக்கலாம்.

அதே போல் உயிர் தானாகவே தோன்றும் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த காலத்தில் ஏற்கனவே தோன்றியிருக்கும் உயிரிலிருந்து தான் உயிர் உண்டாக முடியும், உயிரற்ற பொருட்களிலிருந்து உண்டாகாது எனறும் புது விளக்கம் தந்தார்.

Micro organisms
Credit:Biocote

சிக்கன் காலரா, ஆந்த்ராக்ஸ்

சிக்கன் காலராவைப் பற்றி ஆராய்ச்சி செய்கையில், சில மாதங்களுக்கு முன்பு தானே உண்டாக்கப்பட்ட கிருமிகள் கோழிகளுக்கு வியாதியை உண்டாக்கவில்லை. அதற்கு மாறாக வியாதி வராதபடி அவற்றை பாதுகாத்தன என்பதை பாஸ்டர் கவனித்தார். மொத்தத்தில், அந்த கிருமியின் வலிமையை குறைத்து அதை தடுப்பு மருந்தாக கோழிகளுக்குச் செலுத்தலாம் என்பதை அவர் கண்டுபிடித்தார்.

அறிந்து தெளிக!!
ஆடு மாடு போன்ற மிருகங்களுக்கு வந்த தொற்று நோயான ஆந்த்ராக்ஸுக்கு தடுப்பு மருந்தையும் பாஸ்டர் கண்டுபிடித்தார்.

பட்டுப் புழுக்களைத் தாக்கிய ஒரு வகை நோயினால் பிரான்சு நாட்டில் பட்டுத் தொழிலே நிலை குலைந்து போயிருந்த காலத்தில் அந்நோய்க்குக் காரணமான நுண்ணுயிரிகளைக் கண்டறிந்தார். மேலும் நோயுற்ற பட்டுப்புழுக்களைச் சாதாரண புழுக்களிலிருந்து தனியே பிரித்து வைக்குமாறும் பாஸ்டர் அறிவுரையை வழங்கினார். இதனால் பிரான்சு நாட்டில் மட்டுமல்ல ஐரோப்பாவிலேயே பட்டுத்தொழில் அழியாமல் காப்பாற்றப்பட்டது. இதனால் இத்தாலி நாட்டு அரசு தமது நாட்டில் பட்டு உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு, பாஸ்டர் பெயரைச் சூட்டி நன்றி தெரிவித்துக் கொண்டது.

வெறிநாய்க்கடி தடுப்பூசி 

பாஸ்டர் காலத்தில் வெறி நாய் கடித்தவர்களின் உடல் பகுதியை நெருப்பில் காய்ச்சிய இரும்பினால் சூடு போட்டு, கடிபட்ட இடத்திலிருந்து சதையை அறுத்தெறிவதை தான் சிகிச்சை முறையாக மேற்கொண்டு வந்தனர். எனவே வெறிநாய்க் கடியால் உண்டாகும் ரேபிஸ் நோய் பற்றி பாஸ்டர் ஆராய ஆரம்பித்தார். இதற்காக, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பலவகையான ஆண்,பெண் நாய்களைக் கொண்டு ஆபத்தான பல சோதனைகளை மேற்கொண்டார். நாய்களின் உமிழ்நீரில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதைக் கண்டறிந்தார். நாய்க்கடிக்கு ஆளானவரின் மூளை அல்லது முதுகெலும்புத் தண்டில் மேற்கூறிய நுண்ணுயிரிகள் தங்கி ஆபத்து விளைவிக்கின்றன என்று கண்டறிந்தார். லூயி பாஸ்டர் நாய்களின் உமிழ் நீரைத் தானே உறிஞ்சி, மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு ஒன்பது வயதுச் சிறுவனின் உடல் ரத்தத்தில் தடுப்பூசி மூலம் செலுத்திச் சிகிச்சை அளித்தார். பதினான்கு நாட்கள் அளிக்கப்பட்ட  இந்த சிகிச்சை வியப்பூட்டும் முறையில் வெற்றி அளித்தது. சிறுவன் குணமடைந்தான். இதன் மூலம் ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியைக் கண்டறிந்தார்.

தடுப்பூசி முறை 

முதன்முதலில் தடுப்புமருந்தைப் பயன்படுத்தியது பாஸ்டர் அல்ல. ஆங்கிலேயரான எட்வர்ட் ஜென்னர் தான். ஜென்னர் பாதிக்கப்பட்ட நோயாளிடமிருந்து நோய்க்கு காரணமான நுண்ணுயிரியை எடுத்து தடுப்பு மருந்து வழங்கினார். ஆனால் பாஸ்டர் நோய்க்கு காரணமான நுண்ணுயிரியை செயற்கையாக செயலிழக்க வைத்து பின் அதனை தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தினார்.

ஆபத்தான நுண்ணுயிரிகளின் மூலம் பரவும் நோயைத் தடுக்க வேண்டுமெனில், அந்த நுண்ணுயிரிகளை உருவாக்கி, அவற்றை அழிப்பதன் வாயிலாக செயலிழக்கவைத்து, மீண்டும் அவற்றை ரத்தத்தில் செலுத்த வேண்டும் என்ற இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி தான்  ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்.

தீர்வுகள் 

நுண்ணுயிர்கள் மனித உடலில் தீமைகள் பலவற்றை ஏற்படுத்தக் கூடியவை என்னும் உண்மையைத் தமது ஆய்வின் வழியே லூயி பாஸ்டர் அறிவித்தார். மருத்துவரின் கைகள், உடைகள், அறுவை சிகிச்சைக் கருவிகள் ஆகியவை மூலம் கூட நோயாளியின் உடலினுள் ஏராளமான நுண்ணுயிர்கள் செல்ல முடியும் என்ற உண்மையை பாஸ்டர் கூறினார். எனவே அறுவை சிகிச்சைக் கருவிகளை, புரை எதிர்ப்புக் கரைசல் (Anti-septic solution) அல்லது கொதி நீரில் மூழ்கி எடுத்துப் பின்னர் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகளையும் வழங்கினார். மேலும் நுண்ணுயிர்கள் காற்றின் மூலம் கூட பரவலாம் என்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் உணவு பொருட்கள் கெடாமல் பாதுகாக்கலாம் என்றும் கூறினார்.

lui-paster-
Credit: Play Azlab

மறைவு 

பல நோய்களுக்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தடுப்புமுறைகள் குறித்து ஆராய்ச்சி செய்து மக்களைக் காப்பாற்றிய லூயி பாஸ்டர் 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 தேதி மறைந்தார்.

சிறப்புகள் 

வேதியியலில் இவரது சேவையைப் பாராட்டி ரஷ்ய பேரரசர் ஒருவர் அவருக்கு வைரப் பதக்கம் அளித்துப் பாராட்டியதோடு, அறிவியல் ஆய்வு மையம் ஒன்றைத் துவக்கப் பொருளுதவியும் அளித்துள்ளார். நுண்ணுயிரி கோட்பாட்டை அளித்த லூயி பாஸ்டர் நுண்ணியிரியியலை நிறுவிய மூவருள் ஒருவராகக் கருதப்படுகின்றார். லூயி பாஸ்டருக்கு, அவரது சேவையைப் பாராட்டி பிரான்ஸின் மிகச் சிறந்த குடிமகன் என்ற கவுரவம் அளிக்கப்பட்டது. மேலும் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி லூயி பாஸ்டரின் பிறந்த நாளை இந்த வார ஆளுமையாக எழுத்தாணி கொண்டாடி மகிழ்கிறது.

error: Content is DMCA copyright protected!