15 வயதில் பார்வையற்றோரும் படிக்கும் ‘பிரெய்லி’ எழுத்து முறையை உருவாக்கிய லூயி பிரெய்ல் கதை!

Date:

லூயி பிரெய்ல் பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். இளமையிலேயே பார்வையை இழந்த லூயி பிரெய்ல் பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற வகையில் பிரெய்ல் எழுத்து முறையை கண்டுபிடித்தார். இவர் கண்டறிந்த பார்வையற்றவர்களுக்கான இந்த கல்வி முறை தான் மிகவும் சுலபமான முறையாகும்.

braille
Credit : Blind Foundation

பிறப்பு

லூயி பிரெய்ல் (Louis Braille) 1809 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி பிரான்ஸில் பாரீஸ் நகருக்கு அருகே உள்ள கூப்வெரி (Coupvray) கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை குதிரை லாடம், சேணம் தயாரிக்கும் பட்டறை வைத்திருந்தார். லூயி பிரெயில் அவரது மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்து விளையாடும் போது அவரது ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது. முறையான சிகிச்சை பெறாததால் அவருடைய கண் பார்வை பறிபோனது. மேலும், அந்த கண்ணின் மூலம் மற்றொரு கண்ணிலும் நோய் தோற்று ஏற்பட்டதால் இரண்டாவது கண்ணின் பார்வையையும் இழந்தார். ஐந்து வயதில் முழுவதுமாக பார்வையை இழந்த லூயி, அதன் பிறகு தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் கேட்டு, முகர்ந்து, தொட்டு அறிந்து கொள்ள முயற்சித்தார்.

இளமைப் பருவம்

படிப்பில் அதிக ஆர்வம் காட்டியதால் முதலில் லூயி பிரெய்ல் சாதாரண பள்ளிக்கூடத்தில் தான் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு படிப்பது அவருக்கு கடினமாக இருந்ததால் பார்வையற்றோருக்கான உலகின் ஒரே பள்ளியான ‘ராயல் இன்ஸ்டிடியூட் ஃபார் பிளைண்ட் யூத்’ (Royal Institute for Blind Youth) பள்ளியில் அவரது பத்தாவது வயதில் சேர்க்கப்பட்டார். அங்கு எழுத்துகளை விரலால் தொட்டு உணர்வதற்கு ஏற்ப அவற்றை மேடாக்கிப் புத்தகங்கள் தயாரித்து மாணவர்களுக்கு கல்வி புகட்டப்பட்டது. அந்த பள்ளியின் நிறுவனர் வாலண்டன் ஆவே (Valentin Hauy) என்பவர் தான் இந்தப் புத்தகங்களை தயாரித்து பார்வையற்றவர்களும் படிக்க வழி செய்தார். ஆனால் இந்த முறையில் எழுத்துக்களை படிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. அனைத்து எழுத்துகளும் மேடாக இருப்பதால், புத்தகங்கள் தடிமனாகவும் இருந்தன. மேலும் இந்த முறை பார்வையற்றோர்கள் எழுதுவதற்கு உதவவில்லை. ஆனாலும் பிரெய்ல் அங்கும் அவரது திறமையை வெளிக்காட்டினார். படிப்பில் மட்டும் இல்லாமல் இசையிலும் சிறந்து விளங்கினார்.

Braille Alphabets
Creidt: Pharma braille

பிரெய்ல் முறை உருவாக்கம்

போர்க்களத்தில் ராணுவத்தினர் இரவு நேரத்தில் இருட்டில் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ‘நைட் ரைட்டிங்’ (Night Writing) என்ற முறையை சார்லஸ் பார்பியர் (Charles Barbier) என்ற ராணுவத் தளபதி உருவாக்கியிருந்தார். இது பற்றி விளக்க 1821 ஆம் ஆண்டு அவர் பிரெய்ல் படித்த பள்ளிக்கு வந்தார். அவரது எழுத்து முறை 12 புள்ளிகளைக் கொண்டிருந்தது. அதன் பிறகு மாணவர்களுக்கு கற்றுத்தர இந்த முறை பின்பற்றப்பட்ட போது ஏற்கெனவே இருந்த அளவுக்கு சிரமம் இல்லை என்றாலும், இதிலும் சற்று சிரமப்பட்டும், மெதுவாகவும் தான் படிக்க முடிந்தது. ஆனால் இந்த முறை, பார்வையற்றோர் எளிதாகவும் வேகமாகவும் பயில ஒரு புதிய முறையை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தை பிரெயிலிடம் அதிகரித்தது.

இரவும் பகலும் பாடுபட்டு அயராது உழைத்தார். புள்ளிகளைப் பலவிதமாக மாற்றி மாற்றி அமைத்து, பரிசோதனைகள் செய்து, புதிய குறியீட்டு மொழியை 1824 ஆம் ஆண்டு, அதாவது இவரது 15 ஆம் வயதில் உருவாக்கினார். இது பிரெய்ல் முறை’என்று அழைக்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்த பிறகு, அதே பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1829 ஆம் ஆண்டு பிரெய்ல் முறையை பற்றிய புத்தகத்தை வெளியிட்டார். வெறும் ஆறே புள்ளிகளை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த மொழியில், பாடங்கள், சூத்திரம், அறிவியல், கோட்பாடு, கணக்கு, இசைக்குறிப்பு, கதை,  கட்டுரை என எல்லாவற்றையும் எழுதலாம், படிக்கலாம். இந்த முறை தான் தற்போது உலகம் முழுவதும் உள்ள பார்வையற்ற மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பிரெய்ல் தொடர்ந்து அறிவியல், கணிதம் தொடர்பான புத்தகங்களையும் வெளியிட்டார்.

அங்கீகாரம்

ஆனால் முதலில் இந்த முறையை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. வருந்தத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர் படித்த பள்ளியில் கூட அவர் வாழ்ந்த காலம் வரை இம்முறை பயன்படுத்தப்படவில்லை. வாலண்டனுக்குப் பிறகு வந்த பள்ளியின் நிறுவனர்கள் புதிய முறைகளில் ஆர்வம் காட்டாமல் போனது தான் அதற்கு காரணம். எனினும் சிறிது சிறிதாக பிரபலமடைந்த இந்த முறை 1854 ஆம் ஆண்டு அவர் இறந்து இரண்டு வருடம் கழித்து தான் அந்த பள்ளியில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு உலகம் முழுவதும் பிரபலமடைந்து அங்கீகரிக்கப்பட்டது.

பிரெய்ல் முறை

ஒவ்வொரு பிரெய்ல் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டு செவ்வகமாக இருக்கும். அந்த 6 புள்ளிகளில் எழுத்துக்கேற்ப புள்ளிகள் உயர்த்தப்பட்டு (2^ 6),அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் வரை உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமலும் அமையலாம். இந்த முறையில் ஒன்று முதல் ஆறு மேடான புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

louis braille
Credit: Edubilla

இறப்பு

லூயி பிரெய்ல்  சிறு வயதிலேயே காச நோயால் பாதிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் காசநோய்க்கு சரியான மருத்துவம் இல்லாததால் கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் அந்த நோயுடனே வாழ்ந்து வந்தார். பின்னர் 1852 ஜனவரி 6ஆம் தேதி மறைந்தார்.

சிறப்புகள்

பதினைந்து வயதில் இவரது சாதனை அளப்பரியது. இவரை பாராட்டும் விதமாக உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன. இந்திய அரசும் 2009-ம் ஆண்டில் இவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையை வெளியிட்டது. மேலும் இவரது படம் பொறித்த ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!